முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 14)
முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர். அவர்களை வரவேற்ற நிறுவனர் அகஸ்டா க்ளார்க், உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளகங்கங்களின் பற்றாக்குறையைத் தீர்க்க இயலும், ஆனால், திசுக்களை நிராகரிக்காமல் இருக்க ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமாகப் பதிக்க வேண்டியுள்ளது என விளக்கினாள். முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க, இன்னும் தாண்டவேண்டிய தடங்கல்களை விவரித்தாள். முதல் தடங்கல், திசுக்கள் உயிரோடு செயல்படச் சத்தளித்து, வீண்பொருளகற்ற ரத்த ஓட்டம் தேவை; அதற்கான நாளமிடுவதற்கு மெல்லிய ப்ளாஸ்டிக் இழைகள்மேல் நாளத்திசு அணுக்களைப் பதித்து, பிறகு இழைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று விளக்கினாள். ஆனாலும், முழு அங்கங்களை, அதிலும் மிக நுண்ணிய அங்கங்களைப் பதிப்பது இன்னும் கடினம் என்று கூறி, வியன்னாவில் ஒரு விஞ்ஞானக்குழு, நியூரான் உயிரணுக்களைப் முப்பரிமாணமாகப் பதித்து மூளையின் சில சிறுபகுதிகள் போல பணியாற்றச் செய்துள்ளனர் என்று அகஸ்டா கூறினாள். ஆனால், அங்க நிராகரிப்பின்றி பதிப்பதற்கு அவரவர் மூல உயிரணுக்களைக் கொண்டு வளர்த்த திசுக்களால் அங்கம் பதிக்க மிக நேரமாவது ஒரு பெருந்தடங்கல் என்றும் விளக்கினாள். அப்படியானால், குட்டன்பயோர்க் எவ்வாறு அந்த மூன்று தடங்கல்களைத் தாண்டி முன்னேறியுள்ளது என்று கேட்டார் சூர்யா. அதற்கென குட்டன்பயோர்க் மிகச்சிறந்த நிபுணர்கள் அடங்கிய விஞ்ஞானக் குழுவைத் திரட்டியுள்ளதாகக் கூறினாள். பிறகு...

*****


குட்டன்பயோர்கிற்குச் சிறந்த நிபுணர் குழுவைத் திரட்டத் தேவைப்பட்ட நிதியை எப்படிச் சேர்க்கமுடிந்தது என்று சூர்யா கேட்க, அதைப்பற்றி அகஸ்டா அடுத்து விளக்க ஆரம்பித்தாள். "முதலீடு திரட்டுவதில் எனக்கு எதுவும் பழக்கமேயில்லை. அதற்கான அனா, ஆவன்னா கூடத் தெரியாது. நிறுவனம் என்ன விவரங்கள் அளிக்க வேண்டும், யாரிடம் போய் முதலீடு கேட்க வேண்டும், எல்லாமே சுத்த சூன்யந்தான்!"

கிரண் இடைமறித்தான். "ஓ! சே, உங்களுக்கு என்னுடன் அப்போ பரிச்சயமில்லாம போச்சே, அய்யோ பாவம்! நான் மட்டும் அப்போ அங்க இருந்திருந்தேன்னா, சொடக்சொடக்குன்னு கண் சிமிட்டறத்துக்குள்ள முதலீட்டார்களை வரிசையா நிக்கவச்சு வாங்கிக் குடுத்திருப்பேனே" என்று கைவிரல்களை சொடுக்கிக் கொண்டு சொன்னான்.

அகஸ்டா கிண்கிணித்தாள். "அதனால என்ன கிரண், நாங்க நிச்சயமா இன்னும் முதலீடு திரட்ட வேண்டியிருக்கும். அப்போ உன் கைவரிசையக் காட்டினாப் போச்சு!" கிரண் மிக பவ்யமாகக் குனிந்து வணங்குவதுபோல் செய்து, "தங்கள் தேவைக்கு என் சேவை பாக்கியம்! ஆணையிடுங்கள் அரசியாரே!" என்றான்.

அகஸ்டா மீண்டும் சிரித்தாள். ஆனால் ஷாலினி முறுவலுடன் கிரணை மட்டம் தட்டினாள். "ஹே கிரண்! என்ன ரொம்பத்தான் மாடி கட்டறே?! நீ நிதி திரட்டினதெல்லாம் நாம கோடை காலத்தில வீட்டோரமா லெமனேட் கடை வெக்க அப்பா அம்மாகிட்ட கேட்டு வாங்கினதுதான். இப்பல்லாம் நீ விளையாடறது OPM வச்சுதானே?!"

கிரண் பதிலளிக்குமுன் அகஸ்டா வியப்புடன் கூவினாள். "என்ன ஓப்பியமா? கிரண் போதைப்பொருள் வச்சு விளையாடறாரா? எப்படி? சட்டம் பிடிச்சுடாதா?"

கேள்விகளை அடுக்கிய அகஸ்டாவை, இரு கைகளையும் உயர்த்தி நிறுத்தினான் கிரண். "ஐயோ அகஸ்டா! சரியான ஆளும்மா நீ. ஷாலினி சொல்றது போதைப்பொருள் ஓப்பியம் இல்லை. அது Other People’s Money – OPM! அதாவது எங்க நிதி நிறுவனத்தோட வாடிக்கையாளர்கள் எங்களிடம் ஒப்படைக்கற நிதியை வெவ்வேறு வகையான வழிகளில் முதலிட்டு அதைப் பெருக்குவது!"

அகஸ்டா தலையைப் பின்சாய்த்து பலமாகச் சிரித்தாள்! "ஹாஹாஹா! அட்டகாசம்! ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்! ஆனா, எங்க நிறுவனத்துக்கு நிதி திரட்டறதும் ஒரு வழியில OPM தானே? மத்தவங்க கிட்டேயிருந்துதானே வாங்கறோம்?"

"ஆமாமாம், அதுகூட போதைப்பழக்கம் மாதிரிதான் போலிருக்கு" என்றான் கிரண்.

ஒருகணம் புரியாமல் விழித்த அகஸ்டா, பிறகு பளிச்செனப் புரிந்தவுடன் மீண்டும் வெடியாகச் சிரித்தாள். "ஓஓ! மேலும் மேலும் ஒ.பி.எம். நிதி திரட்டுவதும், ஓப்பியம் போதைக்கு அடிமையாவது போலங்கறீங்க! நல்லா இருக்கு இது! ஐ ஹோப் நாட்! கொஞ்சகாலத்துக்கப்புறம் லாபகரமாக்கிட்டா நிதிதிரட்டல் நிறுத்திடலாம்." சூர்யா இடைமறித்தார், "அகஸ்டா, ஓப்பியம் இருக்கட்டும், நீங்க குட்டன்பயோர்குக்கு எப்படி மூலதனம் திரட்டினீங்க, சொல்லுங்க" என்றார்.

அகஸ்டாவும் மூச்சை இழுத்துக்கொண்டு மேலே விளக்கலானாள். "என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்... ஆங் ரைட்... நிதிதிரட்ட என்னவெல்லாம் செய்யணும்னு நான் தடுமாறிக்கிட்டிருந்தபோது எதோ ஒரு நிகழ்ச்சியில நான் தற்செயலா முட்டி மோதிகிட்ட ஜேகப் ரோஸன்பர்க் ஆபத்பாந்தவனா எனக்கு எல்லா உதவியும் செஞ்சார்."

கிரண் மீண்டும் இடைமறித்தான். "நல்லவேளை அவர் ரோஸன்பர்காப் போயிட்டார்! ஐஸ்பர்காயிருந்தா போச்சு, குட்டன்பயோர்க் டைடானிக் மாதிரி முழுகியே போயிருக்கும்!" அகஸ்டா மீண்டும் கலகலக்கவும், ஷாலினியும் தன் பங்குக்கு பர்க் கோதாவில் குதித்தாள். "ஆமாமாம். அதுமட்டும் ஐஸன்பர்காயிருந்தா, ஒரே அன்சர்ட்டனாப் போயிருக்குமே? என்ன செய்யறதுன்னு தடுமாறியிருப்பீங்க".

கிரண் தன் கழுத்தில் ரத்தம் வருவதுபோல் அறுத்துக் காண்பித்து எக்களித்தான். "செம அறுவை சிஸ்! ஆனா சும்மா சொல்லக்கூடாது, நல்லாவே இருக்கு, குட் ஷோ!" அடக்க முடியாமல் சிரித்த அகஸ்டா, "வாவ், நீங்க எல்லாம் எவ்வளவு ஜாலியா இருக்கீங்க! நான் சமீபகாலத்தில இவ்வளவு சிரிச்சதே கிடையாது! ரொம்ப தேங்க்ஸ்!" என்று மெச்சினாள்.

எப்போதும் காரியத்தில் கண்ணாயிருக்கும் சூர்யாவும் இப்போது சேர்ந்துகொண்டார். "ஐஸன்பர்க்! நைஸ்! ஒண்ணு பாத்தீங்களா? பர்குன்னு சொல்லப் போனா, இவங்க நிறுவனமே குட்டன்பர்க் பேர் சார்ந்துதான் இருக்கு. அவரையே சந்திச்சிருந்தா நிறுவனத்தில பங்கு கேட்டிருப்பாரோ? சரி சரி, பர்க் மகாத்மியம் போதும், விஷயத்துக்கு வரலாம். ஜேகப் எப்படி உங்களுக்கு நிதி திரட்ட உதவினார்?"

அகஸ்டாவும் சுதாரித்துக் கொண்டாள். "ஜேகப் ஒரு நிதித்துறை மந்திரவாதின்னு சொல்லணும்! சில தினங்களுக்குள்ளேயே, எங்க நிறுவனத்தின் குறிக்கோள்கள், தேவையான நிபுணத்துவம், அதற்கான செயல்பாட்டு நிதித்திட்டம் எல்லாவற்றையும் கோத்து, பல மூலதனத்தார்களுடன் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்து அவர்கள் மயங்கும்படி பிரம்மாண்டமான வாய்ப்பாக ஜோடித்துவிட்டார். அந்த வேகத்தால் என் தலை கிர்ரென சுற்றியது. அலெக்ஸை நுட்ப ஆராய்ச்சியில் முழுக்கவனம் செலுத்த விட்டுவிட்டு நானும் ஜேகப்பும் பம்பரமாகச் சுழன்றோம். வெகுசில வாரங்களுக்குள் பல மில்லியன் டாலர்களைப் பெரும்நிறுவன மதிப்பளவில் ஜேகப் சேகரித்துவிட்டார். அதனால்தான் என்னால் மிகச் சிறந்த நிறுவனக் குழாத்தை ஈர்க்கமுடிந்தது."

சூர்யா, "சரி, இப்போ குட்டன்பயோர்க் தொழில்நுட்பங்களின் விவரம் தெரிய வேண்டும். முழு அங்கப் பதிப்பின் மூன்று தடங்கல்களை எப்படித் தாண்டமுடிந்தது என்று விளக்குங்கள்" என்று அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்.

"நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா? வெவ்வேறு, ஆனால், ஒன்றுக்கொன்று உதவக்கூடிய நுட்பத்திறன் கொண்ட நிபுணர்குழுக்களை நான் திரட்டி ஒருங்கிணேத்தேன். அதனால்தான் மற்ற ஆராய்ச்சி நிலையங்கள் சாதிக்க இயலாத முன்னேற்றங்களை எங்களால் சாதிக்கமுடிந்தது. உதாரணமாக நாளமிடலை எடுத்துக் கொள்வோம். சூர்யா சரியாக யூகித்தபடி ப்ளாஸ்டிக் குழாய்மேல் புரத மாலிக்யூல்களையும், உயிரணுக்களையும் பதித்துத்தான் அதைச் செய்ய இயலும். இதுவரை செய்யப்பட்டதில் முமுமையான ரத்த ஓட்டம் செலுத்த முடியவில்லை. எனெனில் குழாய்களின் விட்டம் உடலில் உள்ள கேப்பிலரிகளைவிடப் பெரியது. அங்கம் முழுவதும் பரவஇயலாது."

ஷாலினி ஆமோதித்தாள். "புரியுது. கேப்பிலரி அளவு சிறிதானால்தானே, அங்கங்களின் இண்டு இடுக்கெல்லாம் குழாய் ஊடுருவி எல்லாப் பகுதியிலும் ரத்தம் ஓடும். அப்போதுதான் எல்லா உயிரணுக்களுக்கும் சத்துப்பொருள் அளித்து கழிவை அகற்றமுடியும். நீங்க அதை நிவர்த்திச்சீங்களா? எப்படி?"

அகஸ்டா தொடர்ந்தாள். "ஆனால் எங்கள் குழு அந்த நுட்பத்தைப் பலமடங்கு முன்னேற்றி, கேப்பிலரி அளவுக்கு மெல்லிய இழைக்குழாய்களை உருவாக்கியுள்ளார்கள். அதற்கு மூலமானவர், எங்கள் ப்ளாஸ்டிக்ஸ் நிபுணரான நீல் ராபர்ட்ஸன் என்பவர். அவர் குழாய்களுக்குப் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கின் இயல்புக்ளைத் தீவிரமாக ஆராய்ந்து வெவ்வேறு விதமாக முயன்று இப்போது கேப்பிலரிகளைவிட மெல்லிய விட்டம் கொண்ட இழைகளை உருவாக்கியுள்ளார். அவற்றின்மேல் புரதங்களையும் உயிரணுக்களையும் பதிப்பதால், அங்கங்களில் ரத்தநாளம் உடலிலிருப்பது
போலவே விரிந்து பரவி ஊடுருவமுடிகிறது. அதனால் நாளமிடல் என்னும் முதல் தடங்கலை நாங்கள் மொத்தமாகக் கடந்துவிட்டோம்."

ஷாலினி கைதட்டிப் பாராட்டினாள். "வாவ், பிரமாதம்! கேட்க ரொம்ப எக்சைடிங்கா இருக்கு. மத்த ரெண்டு தடங்கல்களைக் கடந்தாச்சா?"

அகஸ்டா பதிலளிக்கத் தொடங்கினாள்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com