ஸ்வேதா பிரபாகரன்: சேம்பியன் ஆஃப் சேஞ்ச்
வர்ஜீனியாவின் ஆஷ்பர்ன் நகரைச் சேர்ந்தவர் ஸ்வேதா பிரபாகரன். இவர் தாமஸ் ஜெஃபர்சன் உயர்நிலைப்பள்ளியில் ஜூனியர் பிரிவில் படிக்கிறார். இளம் சாதனையாளருக்கு வழங்கப்படும் சாம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் விருதை இவருக்கு வெள்ளைமாளிகை வழங்கியுள்ளது. கம்ப்யூட்டர் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்த ஸ்வேதா, அதை மற்றவர்களுக்கும் சொல்லித்தர விரும்பினார். அதற்காக அவர் everybodycodenow.github.io என்ற இணையதளத்தை ஆரம்பித்தார். அதன்மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இணையம்சார் தொழில்நுட்பப் பயிற்சி அளித்திருக்கிறார். தன்னம்பிக்கை குறைந்தவர்களையும் கற்க ஊக்கப்படுத்தியுள்ளார். அத்துடன் பள்ளிகளில் நடக்கும் அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் STEM activities பணிகளுக்காக ஆயிரக்கணக்கான டாலர் நிதியையும் திரட்டித் தந்துள்ளார். இந்தச் சாதனைகளுக்காக ஸ்வேதா இவ்விருதைப் பெறுகிறார். விருதுபெறும் 11 இளம்பெண்களில் இவர் ஒருவர். தந்தை பிரபாகரன், திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1998ல் அமெரிக்காவிற்குக் குடியேறினார். கம்ப்யூட்டர் மட்டுமின்றி பரதநாட்டியத்திலும் ஆர்வம் கொண்ட ஸ்வேதா, சமீபத்தில் திருநெல்வேலியில் தனது நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.



© TamilOnline.com