"நம்மஊரு நவராத்திரி நச்"
பாரதமண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கலாசார, சமூக நல்லிணக்க வாய்ப்புகளாகவே நமது முன்னோர் பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர்.

"இறை" என்கிற கருத்து எல்லோருக்கும் பொதுவானது என்பதால் அதன் முன்னிலையில் யாவரும் சமம் என்றாகி, கோவில்கள் எல்லாவித மக்களும் வந்து சமத்துவமாகப் புழங்கும் பொது இடங்களாக உருவாக்கப்பட்டன. இன்று பெருமளவில் பேசப்படும் சமூக, வர்த்தக பிணைப்புக் கட்டமைப்புகளை, (social, business networking infrastructure) எப்போதுமே, ஆரவாரமில்லாமல் சாத்தியமாக்கும் இடங்களாகவும் இவை இருந்து வந்திருப்பதை நாம் காண்கிறோம்! விழாக்களும், அவற்றையொட்டிய கோலாகலங்களும் மனிதரை அன்றாட அலுப்புகளிலிருந்து விடுவித்து, மகிழ்வுக்கு உந்துகோலாக இருக்க ஏற்படுத்தப்பட்டன. இவ்விழாக்களையொட்டி கலைகள் வளர்ந்தன, செழிக்கின்றன இன்றும்.

உலகில் பிறந்த எல்லாவற்றுக்கும் விதையும் தேவை, விளைநிலமும் தேவை. விளைநிலம் இல்லாத விதை வீணே. மனித குலத்தின் விளைநிலமே "தாய்" என்பவள். அவள் இல்லாமல் மனிதகுலமே இல்லை. அந்தத் தாயையே சக்தி என்பதன் உருவாகவும், விருப்பு, அறிவு, ஆக்கம் என்ற மூன்று நிலைப்பாடுகளின் தனித்தனி மற்றும் ஒட்டுமொத்த வெளிப்பாடுகளாகவும் நமது சமய, சித்தாந்த, வாழ்வியல் மரபுகள் காட்டியுள்ளன.

நவராத்திரி (ஒன்பது இரவுகள்) என்பவை அந்தச் சக்தியின் மூன்று கருப்பொருள்களையும், அவற்றின் உருப்பொருள்களாம் துர்க்கை, லட்சுமி, வாணி என்ற மூவருக்கும் மும்மூன்று நாட்களாகப் பிரித்துக் கொண்டாடுகிறோம். பாரதநாட்டின் பல பகுதிகளிலும் இது துர்க்கை வழிபாட்டுக் காலமாகவே கருதப்பட்டு, மகிடாசுரனைச் சாமுண்டியாக அன்னை வதம்செய்து வெற்றி நாட்டியதைக் கொண்டாடுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகம், தமிழ் நாடு, வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் துர்க்கையின் பலவடிவங்களைக் கொண்டாடுவதே முக்கிய வழிபாட்டு முறையாக உள்ளது.

குஜராத்தில் மண் குடவிளக்குகளில் தீபத்தை ஏற்றி, ஆரத்தி செய்து பெண்களும் ஆண்களும், பாரம்பரிய உடை அணிந்து கர்பா நடனமும், தாண்டியா ராஸ் எனப்படும் கோலாட்டமும் ஆடுவது சிறப்பாகும்.

வங்கம், பீஹார், அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில், ஏழு முதல் பத்தாம் நாள் வரையிலான நாட்களில் பெண்கள் சிவப்புச் சேலை அணிந்து, தம்மைச் சிறப்பாக அலங்கரித்துக்கொண்டு துர்க்கையம்மன் ஊர்வலங்களில் கலந்துகொள்வர். கைவினைக் கலைஞர்கள் துர்க்கையைப் பலவித அலங்காரங்களுடன் சிறிய, பெரிய வடிவங்களில் உருவாக்குவது வங்கத்தின் சிறப்பு. விநாயக சதுர்த்தியில் கணேச விசர்ஜனம் போன்றே இவர்களும் அலங்கரிக்கப்பட்ட துர்க்கையம்மனைக் கங்கையில் விசர்ஜனம் செய்வதும் கண்கொள்ளாக் காட்சியே.

தமிழ், ஆந்திர மாநிலங்களில் அலங்கரிக்கப்பட்ட ஒற்றைப்படை எண்களாலான படிகளில் பொம்மைகளை "கொலு" வைக்கும் பழக்கம் உண்டு. ஆனால் தமிழ் நாட்டில் நவராத்திரி காலத்தில் கொலு வைப்பார்கள். ஆந்திரர்கள் கொலுவை நவராத்திரியில் வைப்பதில்லை. கர்நாடகத்தில் இதுவே "கொம்பே ஹப்பா" என்று அழைக்கப்படுகிறது. மைசூரில் விஜயநகர சாம்ராஜ்ய நாட்களில் தொடங்கிய முறைப்படி, யானைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்துவதும், கைவினைப்பொருள் கண்காட்சிகளை நடத்துவதும் இன்றுவரை தொடர்கிறது. கேரளத்தினர் கல்வி தொடங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இறுதி மூன்று நாட்களை விசேடமாகக் கொண்ட்டாடுகிறார்கள்.

தமிழ் நாட்டில் கொலு வைப்பதோடு, சக்தியின் மூன்று வடிவங்களுக்கு, அலங்காரங்கள் செய்து, தினமும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது, தேவி பாகவதம் படிப்பது என்பவற்றை இன்றும் மரபு வழுவாதவர்கள் செய்கிறார்கள். மாலை நேரத்தில் இல்லப் பெண்கள் அலங்காரத்தையும், கொலு அழகையும் பார்க்க அழைக்கச் செல்வதும், தாம் பிறர் வீட்டுக்குக் காணச் செல்வதும் கண்கொள்ளாக் காட்சி.

யார் வீட்டுக் கொலுவில் எப்படி அலங்கரித்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும், அடுத்த வருடம் நாம் எப்படி அசத்தலாம் என்று திட்டமிடுவதும் உண்டு. நவராத்திரி என்பது அபரிமிதமாக புரதச்சத்தை வாரி வழங்கும் நாட்களே. எல்லோர் வீட்டிலும் நிலக்கடலை, கொண்டைக் கடலை, கருப்பு கொண்டைக் கடலை, பாசிப்பருப்பு என்று பலவித சுண்டல்களும், மற்ற பட்சணங்களும் தரப்படும். பெரும்பாலும் இரவு உணவு இவையாகவே இருக்கும்.

அயல்நாட்டில் குடியேறியிருக்கிற தமிழர் மற்றும் வங்காளிகள் தசராவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் தமிழர் வாழும் இடமெங்கும் வீட்டில் பூஜைகளும், கோவில்களில் கூட்டுவழிபாடுகளும் அமர்க்களமாக நடக்கின்றன. பட்டுப்புடவை சரசரக்க, நகைகள் மினுமினுக்க "கொலு விஸிட்" ஒரே கலக்கல்தான். வீட்டுக்கு வீடு பெரிதாகவும், நவீனமாகவும், டெக்னாலஜியின் வெளிப்பாடுகளாகவும் கொலுக்கள் போட்டி போட்டு நடக்கின்றன. பொம்மைகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு, அந்த வர்த்தகமும் சக்கைப்போடு போடுகிறது. சான் ஃப்ரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் பெருகிவரும் கோவில்களில் விசேட பூஜைகள், கொலுக்கள், கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் என்று கொண்டாட்டத்துக்குக் குறைவேயில்லை.

பரபரப்பான அன்றாட வாழ்க்கைக்கு நடுவே, கலாசார மரபுகளை நம்மவர்கள் எங்கிருந்தாலும், அவற்றின் தொன்மம் கெடாமல் காப்பதும் போற்றுவதும் நிறைவைத் தருகின்றன.

இந்த விழாவின் கோலாகலத்தை பலமடங்காகச் செய்வதற்கென இந்த வருடம் முதல் சாஸ்தா ஃபுட்ஸ் நிறுவனம், தென்றல் முதலிய ஊடகங்கள் ஆதரவுடன், பெருமளவில் பல நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்தவுள்ளது. ஆகஸ்ட் தென்றல் இதழில் அறிவிப்பு வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம். நவராத்திரி நெருங்கி விட்டதல்லவா.. மீண்டும் ஒரு நினைவூட்டல்:

1. மிகச்சிறந்த 3 கிராண்ட் கொலுக்கள் (அமெரிக்கா முழுவதும்)
2. மிகச்சிறந்த 3 தீமேட்டிக் கொலுக்கள் (அமெரிக்கா முழுவதும்)
3. அந்த நாளின் சிறந்த கொலு! (ஒவ்வொரு நாளும்)
4. நவராத்ரி ஸ்பெஷல் ஆடைகளுக்காகன டிசைன் கான்டெஸ்ட்
5. நவராத்திரி க்ரியேட்டிவிட்டி ஸ்பெஷல் - (special awards)
6. நவராத்திரி நகைச்சுவைக் கணங்கள் (நீங்கள் எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ)

பரிசுகளும், சந்தோஷமும் எராளம். எல்லாப் போட்டிகளும், ஆன்லனில் முகநூல் (facebook) பக்கத்தில் உங்களின் வாக்குகளோடு தீர்மானிக்கப்படும்.
விபரங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புக: ShasthaNavrathri@gmail.com

பங்கு கொள்ளுங்க! பரிசுகளை வெல்லுங்க!

அஷோக் சுப்பிரமணியன்

© TamilOnline.com