தமிழ் நாவல், சிறுகதைகள் போன்றவற்றைப் படிப்பவர்கள் கூடச் சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றைப் படித்து எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. பழம்பாடல் சொற்களில் 10 சதவீதம்கூடப் பேச்சுத்தமிழில் இருக்காது. அதிலும் தமிழகத்துக்கு வெளியே வாழ்பவர்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்களுக்குப் பெரும்பாலும் ஆங்கிலமே தாய்மொழி ஆகிவிடுகிறது. அவர்களும் தமிழ் இலக்கியங்களைப் படித்து புரிந்துகொள்ள உதவியாக தமிழ் இலக்கிய வளங்களை ஆங்கிலத்தில் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் திருமதி. கௌசல்யா ஹார்ட்.
விரிகுடாப்பகுதி தமிழர்களுக்குப் பரிச்சயமானவர் இவர். தமிழறிஞர், மொழிபெயர்ப்பாளர். 'மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்', 'மதுரை சொக்கநாதர் உலா', 'கலிங்கத்துப்பரணி', 'விக்கிரம சோழன் உலா' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது புதிய முயற்சி நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் ஆங்கில மொழியாக்கம். "சைவத்தில் உள்ளதுபோல் வைணவத்தில் ஏன் பிள்ளைத்தமிழ் நூல்கள் இல்லை என்ற கேள்வி எழுந்தபோதுதான் பெரியாழ்வார் உதவிக்கு வந்தார். அவரது, 'பெரியாழ்வார் திருமொழி' முழுவதும் கண்ணனது பிள்ளைத்தமிழும், அவனது குழந்தை விளையாட்டும்தான் என அறிந்தபோது அதை விறுவிறுப்புடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் திவ்வியபிரபந்தம் எத்துணை அழகான நூல் என்று புரிந்தது" என்கிறார் கௌசல்யா.
நான்கு பகுதிகளாகப் பிரித்துச் செய்யும் இந்த முயற்சியில் முதல் இரண்டு பகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. "ஏழு ஆழ்வார்கள்" என்ற பெயர்கொண்ட முதல் பகுதியில் பெரியாழ்வார் திருமொழி, ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி, குலசேகரரது 'பெருமாள் திருமொழி', திருமழிசையாழ்வாரின் 'திருமழிசை விருத்தம்', தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் 'திருமாலை', 'திருப்பள்ளியெழுச்சி', திருப்பாணாழ்வாரின் 'அமலனாதிபிரான்', மதுரகவியாழ்வாரின் 'கண்ணினுண் சிறுத்தாம்பு' ஆகியவை இவையாகும். 948 பாசுரங்கள் இதில் உள்ளன.
இரண்டாம் பகுதி, நம்மாழ்வார் திருவாய்மொழியான 2781 முதல் 3892 வரையிலான, 1102 பாசுரங்களை உள்ளடக்கியது. "இது மிக அருமையான பக்தி நூல். இவரது அளப்பரிய பக்தியையும், பெருமாள்மீது இவருக்குள்ள அன்பு வெள்ளத்தையும் என் மொழிபெயர்ப்பு எத்தனை வெளிக்காட்டும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தமிழில் படித்துப் பொருளறிய முடியாதவர்களுக்கு இது நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் ஒரு சில துளிகளையாவது மனதில் தோன்றவைக்கும்" என்கிறார் திருமதி.கௌசல்யா. www.srivaishanavam.com என்ற தளத்திலுள்ள பாசுர வரிசை எண்களையே தமது நூல்களில் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்.
மூன்றாம் (திருமங்கையாழ்வார்), மற்றும் நான்காம் பகுதிகளை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலம் பேசும் நாட்டிலும் பல ஆசிரியர்களும், மாணவர்களும் தமிழிலக்கிய ஆய்வு செய்கின்றனர். அவர்களுக்கு இம்மாதிரியான மொழிபெயர்ப்புகள் இருந்தால் நிச்சயம் உதவியாக இருக்கும்.
மீனாட்சி கணபதி |