தமிழக அரசின் அறிவிப்புகள்
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கத் தமிழக முதல்வர் அவர்கள் கீழ்க்கண்டவற்றை அண்மையில் அறிவித்துள்ளார்:

அம்மா இலக்கிய விருது
மகளிர் இலக்கியம் படைப்பதில் முழுமையாகத் தொண்டாற்றிவரும் பெண்படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'அம்மா இலக்கிய விருது' என்ற விருது சித்திரைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டுநாளில் வழங்கப்படும். 'அம்மா இலக்கிய விருது' ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும், தகுதியுரையும் கொண்டதாக இருக்கும்.

மொழிபெயர்ப்பாளர் விருது:
தரமான பிறமொழி படைப்புகளைச் சிறந்தமுறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த 'மொழிபெயர்ப்பாளர் விருது' வழங்கப்படும். இது ஒருலட்ச ரூபாய் பணமுடிப்பும் தகுதியுரையும் கொண்டதாக இருக்கும்.

தமிழ்க்கவிஞர் நாள்
பாவேந்தர் பாரதிதாசன் புகழைப் பரப்பும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்துலட்ச ரூபாய் செலவில் நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள், 'தமிழ்க்கவிஞர் நாள்' என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

உலகத் தமிழ்ச்சங்க விருதுகள்
இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப்புத்தாண்டில் 'உலகத் தமிழ்ச்சங்க விருதுகள்' வழங்கப்படும். விருது பெறுபவர் ஒவ்வொருவருக்கும் ஒருலட்ச ரூபாய் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும்.

கொரிய மொழியில் திருக்குறள்
திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழுக்கும், கொரியமொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளைக் கொரியமொழியில் பெயர்க்கவேண்டும் என்ற கொரியமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும் வாழ்ந்து வருவதைக் கருதியும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com