நெற்றிக்கண்
அந்த நர்சிங்ஹோமைச் சுற்றி ஒரே போலீஸ் வேன்கள், பத்திரிகை நிருபர்கள், மக்கள் கூட்டம். கூட்டத்தில் "இப்படியுமா..., என்ன அநியாயம்?" என்ற குரல்கள். "கூட்டத்தை விலக்குப்பா.." என்று சொல்லிக்கொண்டு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை, நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, "சார்.. என்னாச்சு? எப்படி நடந்தது?" என்று கேள்விக்கணைகளால் துளைத்தனர். "பெரிய ஆஃபிஸர் வந்து சொல்லுவார்" என்றபடி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டார். நிருபர்களும் கூட்டத்தினரிடம் தகவல் திரட்டத் தொடங்கினர்.

"சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ண நர்சிங் ஹோம் டாக்டர் கெடுத்துவிட்டார்" என்று பத்திரிகைகள் முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டன. டி.வி. சேனல்கள் ஃப்ளாஷ் நியூஸ் செய்தி பரப்பின.

தாத்தா, பாட்டி வீட்டுக்கு லீவில் வந்த 16 வயது மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் வீட்டருகில் இருந்த நர்சிங் ஹோமிற்கு அழைத்து வந்திருந்தனர். இரண்டு நாள் பெட்டில் வைத்து வைத்தியம் பார்க்கவேண்டும் என்று டாக்டர் கூற, அதன்படி அந்தப் பெண்ணை அட்மிட் செய்துவிட்டு, அங்கு வேலைபார்க்கும் நர்சைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அந்த டாக்டர், நர்சுக்கு வேறு வேலை கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணின் ரூமிற்குச் சென்று அவளை பலவந்தமாகக் கெடுத்துவிட்டார். அழுத பெண்ணிடம் "இதுவும் ஒரு சிகிச்சைதான். இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அவமானம்" என்று மிரட்டிவிட்டு ஓ.பி. பார்க்கச் சென்றுவிட்டார். திரும்பிவந்த நர்சிடம், டாக்டர் தன்னைக் கெடுத்துவிட்டார் என்று அந்த மாணவி சொல்லியழ, அதற்குள் தாத்தா-பாட்டி வர, விஷயம் வெளியே வந்துவிட்டது. டாக்டர் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டும் பலனில்லை. விஷயம் போலீஸ்வரை போய்விட்டது.

*****


கும்பகோணத்தில் இருந்த சீதா, காலையிலிருந்து காக்காய் கத்தியதால் இன்னைக்கு யார் வரப் போகிறார்கள் என்று நினைத்தபடி சமையலை முடித்துவிட்டு பூஜையில் அமர்ந்தாள். கணவர் ராமச்சந்திரன் தஞ்சாவூர்வரை வேலை விஷயமாகச் சென்றிருந்தார். வாசலில் கார் சத்தம் கேட்டு வெளியே வந்த சீதா, காரிலிருந்து மகள் ராதா இறங்குவதைப் பார்த்து, ஓடிவந்து அணைத்தபடி "என்னடி ஒரு போன்கூடப் பண்ணாமல் வந்திருக்கே? மாப்பிள்ளை வரலையா? தனியா வந்திருக்கே? உள்ளே வா!" என்று அழைத்துச் சென்றாள்.

"என்ன நீ... டி.வி. பேப்பர் பார்க்கவில்லையா?" என்று கேட்ட ராதாவைப் பார்த்தபடி, "எங்கடி... ஒரே கரன்ட் கட்.. 4, 5 மணிநேரம் அணைக்கிறான். பூஜையை முடித்துவிட்டு பேப்பர் பார்க்கணும். சரி, உட்கார், என்ன சாப்பிடுகிறாய்?" என்றாள்.

"இப்போ சாப்பாடு ஒண்ணுதான் குறைச்சல். மானமே போய்விட்டது. வெளியே தலைகாட்ட முடியலை."

"என்னடி நடந்தது?"

"உன் மாப்பிள்ளை விவகாரம்தான் ஊர் சிரிக்கிறதே... தேடிப்பிடித்து இப்படி ஒரு மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தியே!"

"ஐயோ.. என்ன சொல்றே நீ? கொஞ்சம் விவரமாச் சொல்லு."

தன்னுடைய டாக்டர் கணவன் சந்தர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 16 வயதுப் பெண்ணைக் கெடுத்த செய்தியை அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில் சொன்னாள் ராதா.

"என்னடி இது கூத்தா இருக்கு... அப்புறம்?"

"அப்புறம் என்ன சப்பரம்? நான் போலீசுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொன்னேன். அவர்கள் வந்து அரெஸ்ட் செய்து போய்விட்டார்கள்."

"என்னது... போலீஸ் வந்து அரெஸ்ட் செய்துவிட்டதா? நீயே ஃபோன் செய்து தகவல் சொன்னாயா?" என்று பதட்டத்துடன் கேட்ட சீதாவை ஒரு நிமிடம் கண்கொட்டாமல் ஆழமாய்ப் பொருள்புரிந்த பார்வையுடன் பார்த்த ராதா, "என்னையும் உன்னைமாதிரி நினைத்துக் கொண்டாயாம்மா?" என்றாள்.

மகளின் கேள்வியைப் புரிந்துகொண்ட சீதா புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். தாயின் கண்ணீரைப் பார்த்துவிட்டு மனம் இரங்கிய ராதா, "நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கொள். நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி, சீதாவை பெட்ரூமிற்கு அழைத்துச் சென்று படுக்கவைத்தாள்.

சீதா பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

சீதா தாய்மாமன் நடராஜன் வீட்டில்தான் வளர்ந்தாள். தந்தைமுகமே தெரியாத சீதாவுக்கு மாமாதான் எல்லாமே. அந்தச் சிறிய கிராமத்தில் அந்த ஊர் மிராசுதார் வீட்டில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்துவந்த மாமா, தன் கஷ்டஜீவனத்தில் இவளையும், இவள் அம்மாவையும் பார்த்துக்கொண்டதை இவளால் மறக்க முடியாது. ரொம்ப நாளைக்குப் பிறகு மாமா-மாமிக்கு மைதிலி பிறந்தாள்.

சீதாவை எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள டவுனில் தனியார் பள்ளியில் எழுத்தர் வேலை பார்க்கும் ராமச்சந்திரனுக்கு திருமணம் செய்துவைத்தார். மாமியார், மச்சினர்கள் என்று கூட்டுக்குடும்பத்தில் நல்ல மருமகள் என்று பெயர் எடுத்தாள் சீதா. பிறகு, அடுத்தடுத்து இரு குழந்தைகள் பிறக்க, குடும்பத்திற்கு மேல்வருமானத்திற்காக டவுனில் உள்ள எலக்ட்ரிக் சாமான் விற்கும் கடையில் பகுதிநேரம் கணக்கு எழுதப் போனார் ராமச்சந்திரன்.

காலப்போக்கில் மச்சினர்கள் சென்னையில் வேலை கிடைத்து கல்யாணமும் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆயினர்.

ராமச்சந்திரன் வேலைபார்த்த கடைமுதலாளி கிருஷ்ணனுக்கு அவரை ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கு சென்றாலும் தன் கூடவே பி.ஏ. மாதிரி அழைத்துச் செல்வார். தீபாவளி, பொங்கல் போன்ற நாள், கிழமைகளில் குடும்பத்திற்கு துணிமணிகள், செலவுக்குப் பணம் என்று நல்லமுறையில் பார்த்துக்கொண்டார்.

ராமச்சந்திரன், தனக்குத் தெரிந்த ஏழைப்பெண் சாந்தியை முதலாளியிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டார். சாந்தியின் அழகைப் பார்த்த கிருஷ்ணனின் மனம் தடுமாறத் துவங்கியது. ஏற்கனவே மனைவி, குழந்தைகள் என்று இருந்தாலும் சாந்தியுடன் குடும்பம் நடத்த விரும்பினார். ராமச்சந்திரன் உதவியுடன் ஒரு கோவிலில் வைத்து சாந்திக்குத் தாலிகட்டி ஒரு வீடு பார்த்துக் குடிவைத்தார். கிருஷ்ணன் வேறு பெண்ணுடன் உறவாடியது ராமச்சந்திரன் மனதிலும் சபலத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கிராமத்தில் இருக்கும் மாமாவின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் மைதிலிக்கு ஒரு வேலை வாங்கித் தந்தால் சௌகரியமாக இருக்கும் என்றார் அவர். மைதிலிக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணும்படி சீதா கணவனிடம் சொன்னாள். மைதிலியைக் கொண்டுவிட்ட மாமாவிடம் ’சீக்கிரமே வேலை கிடைக்கும்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாள்.

மைதிலி மாநிறமாக இருந்தாலும் லட்சணமாய் இருந்தாள். குறுக்கும் நெடுக்குமாய் ஒரு இளம்பெண் வீட்டில் நடமாடியதில் ராமச்சந்திரனின் சபலம் அதிகமாகியது. எப்படியாவது ஒருமுறை மைதிலியை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

ஒருநாள் சீதாவிடம் தன் ஆசையைக் கூற, அவள் அதிர்ந்து போனாள். "இது நம்பிக்கைத் துரோகம்! என்னிடம் என்ன குறை கண்டீர்கள்? இதற்கு ஒருநாளும் நான் சம்மதிக்க மாட்டேன்" என்று சீறினாள். நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதற்கேற்ப சாம, பேத, தான, தண்டங்களை உபயோகப்படுத்தி ஒருநாள் மைதிலியிடம் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் ராமச்சந்திரன்.

மறுநாள் ஆடிப்பெருக்கு. காவிரியில் கரைபுரண்டு ஓடியது. மைதிலி அந்த வெள்ளத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள். சீதாவுக்கு ஒரே அதிர்ச்சி. அவளால் மைதிலியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராமச்சந்திரன், முதலாளி கிருஷ்ணன்மூலம் போலீஸில் விபத்து என்று பதிவு செய்துவிட்டார். மனைவியையும் போலீஸ் ஏதாவது கேட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது; சொன்னால் தன்னை ஜெயிலில் போட்டு விடுவார்கள். அவளும் குழந்தைகளும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டியிருக்கும் என்று பயமூட்டினார்.

கணவனைக் காட்டிக்கொடுக்காமல் எது அன்று தடுத்தது? என் கல்வியின்மையா? அல்லது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கணவனைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலைமையா? - பலமுறை தன் கோழைத்தனத்தை எண்ணி மனம் நொந்தாள் சீதா. மனதில் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டாள். தன் பெண்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைத்து தைரியம் மிக்கவர்களாக, தன் காலில் நிற்பவர்களாக, தப்பு செய்பவர்களை தட்டிக்கேட்கும் குணம் உடையவர்களாக வளர்க்க முடிவு செய்தாள்.

அதன்படியே தன் இரு பெண்களுக்கும் தன்னம்பிக்கை, தைரியம் கொடுத்து வளர்த்தாள். ராதா, சுதாவை நன்றாகப் படிக்கவைத்து வேலைக்கு அனுப்பினாள். திருமண வயதுவந்ததும் படித்த மாப்பிள்ளைகளாகப் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்தாள். அப்படிப் பார்த்துவைத்த மாப்பிள்ளையில் ஒருவர்தான் இன்று ஒழுக்கம்கெட்டு, குணம்கெட்டு குடும்பத்தைத் தலைகுனிய வைத்திருக்கிறார். இது இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபமோ?

வாசலில் கணவனின் குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து மீண்டு எழுந்து வந்தாள் சீதா. கையில் நியூஸ் பேப்பருடன் வந்த ராமச்சந்திரன், சீதாவைப் பார்த்து ‘என்னம்மா இது’ என்று கேட்டார்.

"அதான் போட்டோ போட்டு ஒன்று விடாமல் விலாவாரியாக நியூஸ் போட்டிருக்கிறார்களே!" என்றாள் ராதா.

"ஆனா.. நீ?"

"ஆமாம். நான்தான் போலீசுக்குச் சொன்னேன். உங்க மாப்பிள்ளை, அந்தப் பெண்ணின் தாத்தா - பாட்டியிடம் பணம் கொடுத்து சரிபண்ணப் பார்த்தார். தப்பு பண்ணினால் தண்டனை கொடுக்கணும் அப்பா. அது யாராக இருந்தாலும் சரி! அது ஆம்படையானாக இருந்தாலும் சரி, அப்பாவாக இருந்தாலும் சரி! ஏன் ஆண்டவனாக இருந்தாலும் சரி. தப்பு, தப்புதான். குற்றம் குற்றம்தான். தண்டனை அனுபவித்தால்தான் திருப்பி தப்பு பண்ணத் தோணாது" என்ற ராதா, தந்தையை தீர்க்கமாகப் பார்த்தாள்.

மகளது பார்வையின் அர்த்தம் புரிந்துகொண்ட ராமச்சந்திரன், கூசிக்குறுகி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

சீதாவின் மனதில் மகள் ராதா இமயம் அளவு உயர்ந்துநின்றாள். தனக்கு அன்றில்லாத தைரியம் இன்று மகளிடம் இருப்பதைப் பார்த்துப் பெருமிதம் கொண்டபடி மகளை அணைத்துக்கொண்டாள் அவள்.

பத்மா மணியன்,
மதுரை

© TamilOnline.com