சாமான்ய மனிதர்முதல் பாரதப்பிரதமர்வரை பலரது ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (85) அவர்கள் ரிஷிகேசத்தில் செப்டம்பர் 23, 2015 புதன்கிழமையன்று பூதவுடலை நீத்தார். பாரதத்தின் ஆன்மீகத் தலைவர்களுள் முக்கியமான ஒருவரான சுவாமிகள், திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் 1930 ஆகஸ்ட் 15ம் நாளன்று பிறந்தார். இயற்பெயர் நடராஜன். இளவயதிலேயே ஆன்மீக நாட்டம் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தபின் சென்னைக்குச் சென்றார். அங்கே இந்துமதம் சார்ந்த பத்திரிகை ஒன்றில் வேலை கிடைத்தது. அந்த அனுபவம் அவருக்கு இந்துமதத்தைப் பற்றி விரிவாக அறிய வழிவகுத்தது.
ஒருமுறை சுவாமி சின்மயானந்தா அவர்களின் கீதைப்பேருரையைக் கேட்டார். அது வாழ்க்கையின் திருப்புமுனை ஆனது. தன்னார்வத் தொண்டராக சின்மயா மிஷனில் பணியாற்றத் துவங்கினார். பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு இவற்றால் சின்மயாவின் மனங்கவர்ந்த இவர் விரைவிலேயே அவரது செயலர் ஆனார். வேத வேதாந்தங்களை நன்கு கற்றுணர்ந்த நடராஜனுக்குத் தீட்சையளித்து சுவாமி தயானந்த சரஸ்வதி என்ற திருநாமத்தைச் சூட்டினார் சின்மயனாந்தா. தொடர்ந்து சின்மயா மிஷன் சார்பில் மும்பையில் தொடங்கப்பட்ட சாந்தீபனி சாதனாலயாவின் பொறுப்பாளராக தயானந்த சரஸ்வதி நியமிக்கப்பட்டார். 1960ல் ரிஷிகேசத்தில் ஆர்ஷவித்யா பீடம் என்ற ஆசிரமத்தை அமைத்தார். 1990ல் கோவையருகே ஆனைகட்டி என்ற ஊரில் அத்வைத வேதாந்தத்தின் பெருமையைப் பரப்புவதற்காக ஆர்ஷவித்யா குருகுலத்தை தோற்றுவித்தார். இவற்றில் உலகெங்கிலுமிருந்து பலரும் வந்து வேத சாஸ்திரங்களையும், பண்டைய பாரத கலாசாரத்தின் பெருமையையும் கற்கின்றனர்.
உலக நாடுகள் பலவற்றுக்கும் விஜயம்செய்து பாரத கலாசாரத்தின் மேன்மையைப் பரப்பினார் சுவாமிகள். இப்பணிக்காக அவருக்கு சிருங்கேரி பீடாதிபதி சங்கராசாரியாரால் 2012ல் ஆதிசங்கரா விருது வழங்கப்பட்டது. தயானந்தர் தொடங்கிய 'இந்துதர்ம ரக்ஷண சமிதி' இந்து தர்மத்தை யாவரும் வாழ்க்கையில் பின்பற்றி வாழும் நெறிமுறைகள் பற்றி அறிவுறுத்துகிறது. பகவத்கீதையை 'வீடுதோறும் கீதை' திட்டத்தின்மூலம் எடுத்துச்சென்றவர் சுவாமி தயானந்தர். 'எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்' என்ற சமத்துவ எண்ணத்தில் சுவாமிஜி உருவாக்கிய "அகில இந்தியா சேவா இயக்கம்" தாழ்ந்த நிலையில் உள்ளோரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. சுவாமிகள் வேதங்கள் மட்டுமல்லாமல் தமிழ்த் திருமுறைகள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். திருமுறையைப் பாராயணம் செய்யும் ஓதுவார்களை ஆதரிக்கும் வண்ணம் அவர்களுக்கு தமது அமைப்பின் மூலம் மாதந்தோறும், நிதி உதவி வந்தார். மலைவாழ் மக்களுக்கு மலைப்பகுதிகளில், திருக்கோவில் அமைத்துக் கொடுத்ததுடன், அன்றாட வழிபாடு, சுகாதாரம், ஒழுக்கம் போன்றவற்றையும் கற்பித்தார்.
சுவாமிகளின் உடல் ரிஷிகேச ஆசிரமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகங்காதரேஷ்வர் கோயில் அருகே திருமந்திர முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
மகானுக்குத் தென்றலின் அஞ்சலி! |