வரகூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
வரகூர் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நான்குபுறமும் நெல்வயல், வாழைத் தோட்டம், தென்னந்தோப்புக்களால் சூழப்பட்ட அழகான கிராமம். வரகூர் வேங்கடேசப் பெருமாள் ஆலயம் 500 ஆண்டுகளுக்குமேல் பழமையானதாகக் கருதப்படுகிறது. கிழக்குநோக்கிப் பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. பெருமாள், பூதேவித் தாயாரை தனது இடதுதொடையில் அமர்த்திய வண்ணம் சேவை சாதிக்கிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரகூர் பெருமாளின் மகிமையை பக்தர்கள் அறியச்செய்தார். ஆந்திராவில் பிறந்த இவர், இளவயதிலேயே வேதங்களைக் கற்றுத்தேர்ந்தார். தன் பிணிதீரப் பல க்ஷேத்ரங்களுக்குச் சென்றார். பெருமாளின் உத்தரவுக்கிணங்க வரகூரை நோக்கிவந்தார். நடுக்காவிரியில் பிள்ளையார் கோயிலில் தங்கியிருந்தபோது அவர் கனவில் இறைவன் தோன்றி தூங்கி எழுந்தவுடன் காணும் மிருகத்தைப் பின்தொடர்ந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை கண்விழித்தவுடன் தன்முன் தோன்றிய வெள்ளை வராஹத்தை நாராயணதீர்த்தர் பின்தொடர்ந்தார். பூபதிராஜபுரம் என அப்போது அழைக்கப்பட்ட வரகூர் அருகே வந்ததும் அங்கே பெருமாள் கோவிலினுள் சென்று வராஹம் மறைந்தது. 'நான்தான் உன்னை இங்கே அழைத்துவந்தேன்' எனப் பெருமாளின் அசரீரி கேட்டது. அதுமுதல் பூபதிராஜபுரம் என்ற ஊரின் பெயர் வராஹபுரி என்று மாறி, வரகூர் என்று அழைக்கப்படுகிறது.

வரகூர் பெருமாளே தன்னை அவ்விடம் சேர்த்தார் என்ற மகிழ்ச்சியுடன் அங்கேயே தங்கிப் பெருமாளை வழிபட்டார் நாராயணதீர்த்தர். நாளடைவில் உடற்பிணி நீங்கப்பெற்றார். பெருமாளின் பெருமையை வெளிக்கொணர்ந்து அங்கே வசித்த ஐந்து குடும்பங்களுக்குக் கோயிலை நடத்தும் பொறுப்பைப் பகிர்ந்தளித்தார். இன்றும் அவர்கள் வழிவந்தவர்கள் பகவத்சேவையைத் தொடர்ந்து செய்துவருகின்றனர். தற்போது கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாராயணதீர்த்தர் பெருமாளை ஸ்ரீகிருஷ்ணராக, பரப்பிரம்மமாக வழிபடத் தொடங்கினார். மூலவர் சன்னிதியில் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பெருங்காவியத்தைப் பாட, அப்பாட்டுக்கேற்றவாறு பெருமாள் காலில் சலங்கையுடன் ஆடியதாகவும், தூணில் வீற்றிருந்த ஆஞ்சநேயர் தாளம் போட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அதனால் அந்த ஆஞ்சநேயருக்கு “தாளம் கொட்டி ஆஞ்சநேயர்” என்ற பெயர் வந்தது. இங்கு சுவாமி புறப்பாடு, நிவேதனம் யாவும் பஜனை சம்பிரதாய முறைப்படியே அனுசரிக்கப்படுகிறது.

இங்கு கோகுலாஷ்டமியின்போது நடக்கும் உறியடி உற்சவம் மிகவும் சிறப்பானது. உறியடியன்று அக்கிரகாரத்திலுள்ள அந்தணர்கள் கோபியராகவும், பெருமாள் கிருஷ்ணராகவும் காட்சி தருகின்றனர். பகல்முழுவதும் நடக்கும் உற்சவம் இரவிலும் தொடர்ந்து, பின்னர் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டில் வசிப்பவர்கள்கூட விடுமுறை எடுத்துக்கொண்டு வந்து கலந்துகொள்கின்றனர். பக்தர்கள் தங்க கோவிலைச் சார்ந்தவர்களது இல்லத்தில் இடவசதி செய்துதரப்படுகிறது. கோவில் அலுவலகத்திற்கு முன்னரே தெரியப்படுத்தினால் பக்தர்களுக்குச் சாப்பாட்டு வசதியும் செய்து தரப்படுகிறது. பங்குனி மாதத்தில் நடக்கும் ஸ்ரீராமநவமி உற்சவம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சிவாலயத்திலும் நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

வரகூர் பெருமாள் கோவில் அமைந்த தெருவின் வடகோடியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ மகாகைலாசநாதர் கோவில், ஊரின் தென்னெல்லையில் பெரமனார் கோயில், மேற்கெல்லையில் காவல்தெய்வம் ஐயனார் கோவில் ஆகியவை உள்ளன. சிவன் கோயிலிலும் பழைய குடும்பத்தினரின் சந்ததியினரால் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீ நாராயணதீர்த்தர் வரகூரிலேயே வாழ்நாளின் இறுதிவரை வசித்து அங்கேயே ஜீவசமாதி ஆனார். அவரது ஆராதனை உற்சவம் மாசிமாதம் நான்கு நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ நாராயணதீர்த்தர் அறக்கட்டளையால் கிருஷ்ணயஜூர் வேதபாடசாலை ஒன்று வரகூர் அக்கிரகாரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றளவும் கச்சேரிகளில் ஸ்ரீ நாராயணதீர்த்தரின் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டு வருகின்றன. வரகூரில் கோயில்கள் சிறியதாக இருந்தாலும் மூர்த்திகளின் கீர்த்தி மிகச்சிறப்பானது.

சீதா துரைராஜ்,
ஒஹையோ

© TamilOnline.com