பொறாமை ஒருவகையில் உங்களுக்குப் பாராட்டுதான்
அன்புள்ள சிநேகிதியே,

சின்னவயதில் அப்பாவை இழந்தேன். அம்மாவுக்குக் கல்லூரிப் படிப்புகூட முடியாத நிலையில் திருமணம் நடந்தது. தன்னுடைய வருமானத்தையெல்லாம் குடும்பத்திற்காகச் செலவு செய்துவிட்டு, நான் பிறந்த சில வருடங்களில் ஒரு சேமிப்பும் இல்லாமல் அம்மாவைத் தவிக்கவிட்டுப் போய்விட்டார். அப்பா வழி, அம்மா வழி எல்லாருமே அவரவர் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்ட நிலை. ஒன்றுவிட்ட அத்தை ஒருவர் மிகவும் வசதியாக இருந்தார். ஏதேனும் படிப்பதற்கு பணவுதவி என்றால் எல்லோருமே அவருடைய தயவு தாட்சண்யத்துக்குக் காத்திருந்து அவ்வப்போது ஏதோ பெற்றுக்கொள்ளுவோம். அம்மா ஒரு கம்பெனியில் எம்.டி.க்கு செக்ரட்டரியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி மூலமாக ஒரு பிஸினஸ் 'ஆர்டர்' அத்தையின் கணவருக்கு, அம்மாவின் உதவியால் கிடைத்தது. அதில் அவர்களுக்குப் பல லட்சம் கமிஷன் மிச்சம் ஆகியிருந்தது. அப்போது நான் எஞ்சினியரிங் கல்லூரியில் இடம்கிடைத்து, பணமில்லாமல் தவித்தபோது, முதல் இரண்டு வருடம் உதவிசெய்தார்கள், இல்லையென்று சொல்லவில்லை. அப்புறம் அந்த எம்.டி. மற்ற ஃப்ரெண்ட்ஸ், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் என்று கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுத்தார். நான் அந்த நன்றியை மறக்கவில்லை. அப்புறம் நான் இங்கே Financial Aid கிடைத்து மேலே படிக்கவந்து என் அருமைக் கணவரையும் இங்கே சந்தித்து, வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. எல்லாம் கடவுளின் கருணை. நானும் என்னால் முடிந்தவரை என் உறவினர்களுக்கும் செய்து கொண்டிருக்கிறேன்.

என் அத்தைக்கு ஒரு பெண், ஒரு பையன். பையனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை. இந்தியாவிலேயே அவர்கள் பிசினஸ் பார்த்துக்கொண்டு நஷ்டத்தில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். பையன் பொறுப்பில்லை. வந்த மருமகள் சரியாக இல்லை. நிறைய பிரச்சனைகள். இங்கே பெண் திருமணமாகி வந்திருக்கிறாள். அவள் கணவனுடன் தகராறு. குழந்தைக்கு ஏதோ பிறக்கும்போதே பிரச்சனை. அவள் வேலைக்குப் போக முடியவில்லை. என்னிடம் இதையெல்லாம் அந்தப் பெண் விவரமாகச் சொல்லவில்லை. வேறு உறவினர் மூலம் கேள்விப்பட்டு நான் வருத்தப்பட்டேன். என் அத்தை சமீபத்தில் பெண்ணுடன் தங்க வந்திருக்கிறார். நான் எப்போதும் ஆர்வத்துடன் ஆசையுடன் பேச ஆரம்பித்தாலும் 'உனக்கென்ன ராணி மாதிரி இருக்கிறாய்' என்று ஆரம்பித்து, தான் அப்படி அந்தக் காலத்தில் பணவுதவி செய்திருக்காவிட்டால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்று சொல்லிக்காட்டி, தன் மகள் எப்படிக் கஷ்டப்படுகிறாள் என்று அழுது, ஒவ்வொரு முறையும், நான் ஏதோ தவறு செய்துவிட்டது போல ஒரு Guilt Feelingல் கொண்டுபோய் விடுகிறார். சிறு வயதிலிருந்தே பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை இருந்ததால், எனக்குள் மிகுந்த பயந்த சுபாவம் உருவாகிவிட்டது. வயதானவரிடம் திருப்பிப் பேச பயமாக இருக்கிறது. அவர் கூப்பிடும்போது, போனை எடுக்காமல் இருக்க தைரியம் இல்லை. என் கணவர் "Just ignore it. She is Jealous" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். யாரிடமாவது இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. நான் என்ன செய்தால் அந்த அத்தை மனது குளிரும்? அவருக்குப் பாவம் இந்த நிலை வந்திருக்கக்கூடாது. பெண் கஷ்டப்பட்டால் யாருக்குத்தான் கவலை இருக்காது?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். எது செய்தாலும் உங்கள் அத்தைக்கு (நீங்கள் விவரித்த விதத்திலிருந்து புரிந்துகொள்கிறேன்) உங்கள் கணவர் கூறியதுபோல, பொறாமை ஒரு காரணமாக இருக்கலாம். இதை நான் நிறையப் பேரிடம் பார்த்திருக்கிறேன். நம்மைவிடக் குறைந்த நிலையில் பார்த்தவர்களை, பல வருடங்கள் கழித்து நம்மைவிட எங்கோகோகோ..... போய்விட்டவர்களைப் பார்த்தால், வாழ்க்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களுக்கு வியப்பும் சந்தோஷமும் இருக்கும். இல்லாதவர்களுக்கு நிலைகளைச் சரிபார்த்து ஒப்பீடு செய்துகொண்டே, அந்தப் பொறாமை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும். Jealousy is a form of compliment to you என்று எடுத்துக்கொள்ளுங்கள். பொறாமை ஒரு வக்கிர உணர்ச்சி. Waste of time. Drains your energy. Pollutes the mind. இயற்கையின் விதி எல்லாருக்கும் ஒரு 'ராஜபாட்டை'யை அமைத்துக் கொடுப்பதில்லை. இது உங்கள் அத்தையின் சுபாவம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். பிறர் நம்மீது பொறாமைப்படுவதும் நமக்கு ஒரு பாடமாகத்தான் இருக்கும். நம்மைவிட நல்ல நிலையில் இருப்பவர்களைப் பார்த்து நாம் வியப்பும் சந்தோஷமும் படக் கற்றுக்கொள்வோம். Jealousy will not pollute our minds. நீங்கள் நீங்களாக இருங்கள்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com