செஸ் வீராங்கனைகளான சகோதரிகள் ஆஷ்ரிதா ஈஸ்வரன், அக்ஸிதி ஈஸ்வரன் இருவரும் கிரேக்க நாட்டில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 20வரை நடைபெறவுள்ள உலக இளையோர் சதுரங்கப் போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்கின்றனர்.
மூத்தவரான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2015ம் ஆண்டுக்கான அமெரிக்க ஜூனியர் சதுரங்கப் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் இவர் (Sophomore) ஜூன் 22-26 துல்ஸா, ஓக்லஹாமாவில் நடைபெற்ற போட்டிகளில், தான் விளையாடிய 9 போட்டிகளிலிருந்து 6.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றினார். இப்போட்டித் தரவரிசையில் கடைசியிடத்தில் (lowest seed) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றியினால் இவர் 2016ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள 'உலக ஜூனியர் (under20) போட்டி', செயின்ட் லூயிஸில் நடைபெறவுள்ள 2016ம் ஆண்டுக்கான 'அமெரிக்க பெண்கள் சேம்பியன்ஷிப்' இரண்டிலும் விளையாடத் தகுதிபெற்றுள்ளார்.
யூ.எஸ் ஜூனியர் போட்டித்தொடரை வென்ற மறுநாளே கொலம்பியாவில் நடைபெற்ற இளையோருக்கான 'பான் அமெரிக்கன்' போட்டிகளில் கலந்து கொண்டார். இங்கு தன் வயதுப்பிரிவை விட ஒருபிரிவு மேலே, 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இணை முதலிடத்தைப் பெற்றார். Tie break போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதே போட்டிகளில் தங்கை அக்ஸிதி ஈஸ்வரன் பத்து வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் விளையாடிய 9 போட்டிகளிலும் வென்று, 9 புள்ளிகள் பெற்றார். இப்போட்டியில் இவர் ஒருவரே இந்தச் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷ்ரிதா, ஜூலை 16-22 எல் சால்வடரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். இது வட, தென் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனைகள் பங்கேற்ற கடினமான போட்டி. இந்த வெற்றியினால் இவருக்கு 'பெண்கள் இண்டர்நேஷனல் மாஸ்டர்' பட்டமும், 'பெண்கள் கிராண்ட் மாஸ்டர்' தகுதியும் கிடைத்துள்ளன.
இச்சாதனைகள் மூலம் இவர் 2015ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 6 வரை கிரேக்க நாட்டில் நடைபெற உள்ள உலக இளையோர் செஸ் போட்டிகளுக்கான அமெரிக்கக் குழுவில் இடம் பிடித்துள்ளார். இளைய சகோதரி அக்ஸிதாவும் இப்போட்டிக்கான அமெரிக்காவின் U16 குழுவில் இடம் பெற்றுள்ளார்.
மீனாட்சி கணபதி |