தென்றல் பேசுகிறது
இதனை எழுதக் கணினியின் விசைப்பலகையில் விரல்கள் நடனமாடும் பொழுதில், உலக அரங்கில் இந்தியாவுக்கொரு புதிய பிம்பமும் அங்கீகாரமும் கிடைக்க "உங்கள் விரல்களின் மாயாஜாலம் காரணம்" என்று அமெரிக்காவில் கவிதையாகப் பேசிய இந்தியப் பிரதமர் மோதியை எண்ணிப்பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அவரால் எப்படி இதயங்களைத் தொடமுடிகிறது என்பதற்கு மார்க் ஸக்கர்பர்க் அவர்முன் தமது மனதைத் திறந்தது பேசியது ஒரு உதாரணம்.

மார்க், "இந்தியா தனிப்பட்ட முறையில் என் கம்பெனிக்கு மிக முக்கியமானது" என்றார். முகநூல் வெற்றியடைவதற்கு முன்னால், அதை விற்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸைச் சந்தித்தாராம். "உன் கம்பெனியின் லட்சியத்தோடு நீ பிணைய வேண்டுமென்றால், ஒரு (குறிப்பிட்ட) கோவிலுக்குப் போய் வா" என்று அறிவுறுத்தினாராம். "அப்படியே நானும் இந்தியாவுக்குப் போய் அங்கே ஒரு மாதத்துக்கு மேல் பயணித்தேன். அங்கே மக்களின் பிணைப்பைப் பார்த்தேன், இவ்வாறு பிணைந்திருந்தால் உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கமுடியும் என்பதை உணர்ந்தேன். அது எனக்கு நான் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. முகநூலின் பத்துவருட காலத்தில் நான் எப்போதுமே அதை நினைவில் கொண்டிருக்கிறேன்" என்று அவர் இதுவரை கூறாத ஒன்றை உலகோடு பகிர்ந்துகொண்டார்.

முதலில் ஸ்டீவ் ஜாப்ஸ் சென்றதும் பின்னர் மார்க் போனதும் நைனிடால் அருகே உள்ள நீம் கரோலிபாபா கட்டிய கைஞ்சிதாம் கோவிலுக்கு என இப்போது அறியக் கிடைத்துள்ளது. நரேந்திரரான சுவாமி விவேகானந்தர், நரேந்திர மோதி இருவருமே தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் எனப் பார்ப்பவர்கள். அத்தகையவர்கள் முன்னிலையில் பிறரும் தமது தேச, கால மாறுபாடுகளை மறந்து அடிப்படை மானுடத்தால் ஒன்றிணைகிறார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. அதேநேரம் உலகெங்கிலுமுள்ள இந்தியர்கள் "நான் ஓர் இந்தியன்" என்பதை எண்ணி விம்மிதமடையவும், தன் தேசத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வீரியமடையவும் மோதியின் உலகளாவிய பயணங்கள் பயன்பட்டுள்ளன.

*****


ஆஸ்ட்ரோசாட் எனப் பெயர்கொண்ட வானியல் ஆய்வகம் (Space Research Observatory) ஒன்றை இந்தியா முதன்முறையாகச் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஆறு செயற்கைக் கோள்கைகளைச் சுமந்து சென்றுள்ளது. அவற்றில் அமெரிக்கா (4), கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் செயற்கைக் கோள்கள் அடங்கும். வெற்றிகரமாக உலகின் நான்கு நாடுகளே வானியல் ஆய்வகம் செலுத்தியுள்ளதால், அந்தப் பிரத்தியேகக் குழுவில் இந்தியா இப்போது இணைந்துள்ளது. இதன் வணிகச் சாத்தியக்கூறுகளும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்குக் காரணமான ISRO உட்பட்ட பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகளுக்கும் தென்றலின் நன்றியும் பாராட்டுகளும்.

*****


க. ரவி நுண்ணிய அழகியலும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்த கவிஞர், தொழிலால் வழக்கறிஞர். படைப்பின் பலதுறைகளிலும் பங்களித்திருப்பவர் என்பதோடு, ஆண்டுதோறும், கவிஞர்கள் பாட, மகாகவி பாரதியாரை ஜதிபல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டுவந்து மகிழ்ச்சி அடைபவர். சென்னையில் அவரது ‘வானவில் பண்பாட்டு மையம்’ நடத்தும் பாரதிவிழா மிகச்சிறப்பானது. தவிர, சதுரங்கப்புலிகளான விஷால் கோப்லா, அக்சிதா, ஆஷ்ரிதா போன்றோரின் சாதனைகளும், நேர்த்தியாகத் தீட்டப்பட்ட சிறுகதைகளும் இந்த இதழை அணிசெய்கின்றன. வாசியுங்கள், நேசியுங்கள்!

வாசகர்களுக்கு நவராத்திரி, காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

அக்டோபர் 2015

© TamilOnline.com