மனிதனைக் கடவுளின் இன்னொரு குழந்தையாகவே நடத்த வேண்டும்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைக் கடவுளின் இன்னொரு குழந்தையாகவே நடத்த வேண்டும். ஒருவர் முஸ்லிமாகவோ, ஹிந்துவாகவோ கிறிஸ்தவ ராகவோ பிறப்பது அவரது செயல் அல்ல.

இந்நிலையில் ஒரு மதத்தைச் சார்ந்த வருக்கு இன்னொரு மதத்தைச் சார்ந்தவர் எதிரி என்று நினைப்பது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். அமிர்தசரில் உள்ள பொற்கோயிலுக்கு அடிக்கல் நாட்ட முஸ்லிம்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதைப் போல் பனாரசில் (காசி) உள்ள ஹிந்து பல்கலைக்கழகத்தை முஸ்லிம் பிரமுகர் திறந்து வைத்தார்.

சடங்குகளில் மட்டும் கவனம் செலுத்து வதைவிட்டுவிட்டு, ஆன்மிக விஷயங்களில் நாட்டம் செலுத்தினால் மத நல்லிணக்கம் சாத்தியமாகும்.

எஸ்.எஸ். பர்னாலா, தமிழக ஆளுநர், லயோலா கல்லூரியில் பண்பாட்டுப் பல்சமய உரையாடல் மையம் எ·ப்.எம். வானொலிச் சேவையைத் தொடங்கி வைத்துப் பேசியது...

~~~~~~


படம் எடுக்கும் விஷயத்தில் எல்லாமே எனக்கு சவாலான அனுபவமாக உள்ளது. எதையும் முக்கியமில்லை என்று ஒதுக்க முடியாது. இருப்பினும் அதை நான் மகிழ்ச்சியாகவே செய்கிறேன். நான் போராட்ட மனப்பான்மை உள்ளவன். ஓர் உண்மையான கலைவடிவத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே உண்மையாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாட்டைப்பற்றி படம் எடுக்கும் போது, அப்படம் எல்லா நாட்டினரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

அடூர் கோபாலகிருஷ்ணன், பிரபல மலையாளப்பட இயக்குனர், தாதா சாஹேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதையடுத்துப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில்...

~~~~~~


இந்தியாவில் உள்ள எந்த அரசியல் தலைவருக்கும் நான் இளைத்தவன் அல்ல. ஒன்றை ஏற்றவும் தெரியும். ஏற்றுகிற இடத்தில் இருந்து இறக்கவும் தெரியும். நான் உங்களிடம் இருந்து சற்று மாறுபட்டவன். என்னிடத்தில் எதுவும் தங்குவதில்லை. என் கையில் எதுவும் தங்குவதில்லை என்பதாலே நான் யாருக்கு வேண்டியவர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் எனக்கு எதையும் தருவதில்லை.

நாங்கள் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கிறோம். சசிகலா, ஜெயலலிதா பக்கத்தில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் என உங்களுக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அனல் எரியும் போது அதன் அருகில் இருப்பவரது முகம் ஜொலிக்கும். ஆனால், அனல் வெப்பத்தில் என்ன கஷ்டம் என்பது அருகில் இருப்பவருக்கு தான் தெரியும். அதே போல சசிகலாவும் நெருப்பின் தகிப்பில் இருக்கிறார்.

நடராஜன் (முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்), பூலித்தேவரின் 291வது பிறந்த தினவிழா நிகழ்ச்சியில் பேசியது...

~~~~~~


சில கட்சிகளில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பதவிகளில் பார்த்த முகங்களையே பார்க்க வேண்டியுள்ளது. அங்கே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. மற்றவர்களுக்கு, குறிப்பாகப் புதியவர்களுக்கு, எந்த வாய்ப்பும் கொடுக்கப் படுவது கிடையாது.

அ.தி.மு.க அப்படிப்பட்ட கட்சி அல்ல என்பதை நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கே திறமைக்கு மதிப்பு உண்டு. இயக்கப் பற்றுக்கு மதிப்பு உண்டு. தலைமை மீது கொண்ட விசுவாசத்துக்கு மதிப்பு உண்டு. எல்லா வற்றுக்கும் மேலாக அயராத உழைப்புக்கு என்றைக்கும் மதிப்பு உண்டு. தொண்டர் களின் விசுவாசம், பற்று மற்றும் உழைப்பு என்றைக்குமே வீண் போகாது. பொதுவாக அமெரிக்காவைத்தான் வாய்ப்புகளின் தாயகம் என்று சொல்வார்கள். அதைப் போல அ.தி.மு.க.வும் வாய்ப்புகளின் தாயகம்தான். ஆகவே எந்த இளைஞரும் வாய்ப்புகள் இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் உழைப்பு என்றைக்கும் வீண்போகாது.

ஜெயலலிதா, தமிழக முதல்வர், மாநில அமைச்சர்களின் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்றுப் பேசியது...

~~~~~~


இளைஞர்கள் முன்னேறுவதற்கு ஆக்க பூர்வமான சிந்தனை அவசியம். சுய ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவையே சிறந்த தனிமனிதர்களை உருவாக்கும். காந்தியின் 'சத்திய சோதனை' மற்றும் விவேகானந்தரின் 'வாழ்க்கை வரலாறு' ஆகிய புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். அவற்றைத் தம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். காந்திய ஒழுக்கங் களான உண்மை, அகிம்சை ஆகியவற்றை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

கற்பகவிநாயகம், உயர்நீதிமன்ற நீதிபதி, மகாத்மா காந்தி சத்யாகிரகப் போராட்ட நூற்றாண்டுவிழாவில் கலந்து கொண்ட பேசியது...

~~~~~~


எங்கள் வெற்றி நிச்சயம் செய்யப்பட்டு விட்டது. அதே நேரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் அதைத் தாங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம்; தியாகத்திற்கும் தயாராகவே இருக்கிறோம். 'எம்.ஜி.ஆர் தவிரப் பிற நடிகர்கள் அரசியலில் முன்னேறவில்லையே' என்று எங்களிடம் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் இடையில் வந்தவர்கள், எனவே இடையில் போய் விட்டார்கள். நாங்கள் அப்படியல்ல. ஆரம்பத்தில் இருந்து திட்டமிட்டு செயல் பட்டு வருகிறோம். அதனால் இறுதியில் வெற்றி பெறுவோம்.

விஜயகாந்த், புதிய அரசியல் கட்சியை தொடங்குவதுபற்றி அளித்த பேட்டியிலிருந்து...

~~~~~~


ஷாரப்போவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சர்வீஸைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் நன்றாகவே செயல்பட்டேன். சிறிதும் உணர்ச்சிவசப்படவில்லை. சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டாலும் ரசிகர்கள் எனது விளையாட்டை ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். எனது அதிரடி ஆட்டத்தை யாராலும் தடை செய்யமுடியாது.

பந்தைக் கடினமாக விளாசுவதும், தைரியமாக ஒரு காரியத்தில் இறங்குவதும் எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள். ஷாரப்போவாவுடன் விளையாடியது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அடுத்த முறை அவருடன் விளையாடினால் இதைக் காட்டிலும் சிறப்பாக ஆடுவேன். மொத்தத்தில் யு.எஸ். ஓபன் போட்டியில் 4வது சுற்றுக்கு முன்னேறியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

சானியா மிர்சா, டென்னிஸ் வீராங்கனை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com