ஜூலை 11, 2015 அன்று திருமதி. சௌம்யா குமரன் நடத்தும் 'நிருத்ய சங்கீத்' (நேபர்வில், இல்லினாய்) பள்ளி மாணவி செல்வி. சுருதி சேதுராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடைபெற்றது. முத்துசுவாமி பிள்ளையின் மல்லாரியுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடுத்து "அற்புத நர்த்தனம்" என்னும் விநாயகர் வணக்கப் பாடலுக்கு ஆடினார். தஞ்சை நால்வர் ராகமாலிகையில் இயற்றிய ஜதீஸ்வரத்திற்கு ஏற்ப அத்தனை அசைவுகளையும், ஜதிகளையும் அழகான முகபாவத்துடனும் உற்சாகத்துடனும் ஆடி, மனதைக் கொள்ளை கொண்டார்.
மதுரை முரளிதரன் இயற்றிய "மாயே மனம் கனிந்தருள் புரிவாயே" என்ற சிம்மேந்திர மத்யம வர்ணத்தின் நெளிவு, சுளிவுகளை அபிநயத்துடனும் பக்திப் பரவசத்துடனும் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆடி வியக்க வைத்தார். தொடர்ந்த "சிக்கவனே" என்னும் புரந்தரதாசர் பாடலுக்கு ஆடி, கண்ணனின் லீலைகளைக் கண்முன் கொண்டுவந்தார். "நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே" என்னும் திருப்புகழ் தொடர்ந்தது. தஞ்சாவூர் சங்கர ஐயரின் "மஹாதேவ சிவசம்போ" என்னும் ரேவதி ராகப் பாடலுக்கு ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார். பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தளவராளி ராகத் தில்லானா ஆடி அதிசயிக்க வைத்தவர், காஞ்சி மஹாப்பெரியவரின் "மைத்ரீம் பஜத", மங்களம் ஆகியவற்றோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
திருமதி. அனிதா குஹா (பரதாஞ்சலி), திருமதி. ஜெயந்தி சுப்ரமணியன் (கலாதர்சனா), திரு. மோஷனன் (கலாக்ஷேத்ரா), திரு. ஆர்.கே. ஸ்ரீராம்குமார் (வயலின் வித்வான்) ஆகியோரின் தலைமை மற்றும் ஆசியுரைகளுடன் அரங்கேற்றம் நிறைவுற்றது. திருமதி அனிதா குஹா பேசுகையில், குரு சௌம்யா குமரன் நட்டுவாங்கம் செய்யும் விதமே ஒரு நாட்டியமாக இருந்ததாகவும், ஜதிகள் மிக அற்புதமாக அமைந்திருந்ததாகவும் கூறினார்.
சுருதி, பிரபல நாடக நடிகர் கலைமாமணி திரு. காத்தாடி ராமமூர்த்தியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மீரா ஈஷ்வர், மந்தைவெளி, சென்னை |