ஜூலை 19, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் சான் ஹோசே ராஜராஜேஸ்வரி கோவில் அரங்கில் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சியை சங்க நிர்வாகி நித்யவதி சுந்தரேஷ் தொகுத்தளித்தார். வரவேற்புரையுடன் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தையும் நித்யவதி அளித்தார். முதலில் பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் 'மேற்கத்திய ஓவியங்கள் ஒரு எளிய அறிமுகம்' என்ற நூல் குறித்து பாலாஜி ஸ்ரீநிவாசன் பேசினார். இரு எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்தும் ஆர்.வி. சுப்ரமணியம், பகவதி பெருமாள் மற்றும் விசுவநாதன் மகாலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.
பி.ஏ.கிருஷ்ணன் கம்பராமாயணத்தில் இரணியன் வதம் குறித்து விரிவாகப் பேசினார். கம்பன் ஏன் இரணியன் வதைப் படலத்தை எழுதினான் என்பதில் துவங்கி, நம்மாழ்வார், வைணவ தத்துவம் ஆகியவற்றுடன் ஒப்புநோக்கி அலசினார். உலகில் அநியாயங்களும் அடக்குமுறைகளும் உள்ளவரை மக்கள் இரணியனை வதம்செய்த சிங்கப் பெருமாளின் வரவை எதிர்நோக்கியே இருப்பார்கள். கம்பனின் ஒப்பற்ற காவியம் படிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும், அதன் ஒப்பற்ற தமிழுக்காக என்று அவர் கூறினார்.
அடுத்துப் பேசிய ஜெயமோகன், தமிழ் இலக்கியம் ஏன் தன் வேர்களை இந்திய மூலங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் துவங்கிப் பேசினார். கன்னட நாவல்களான யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, எஸ்.எல்.பைரப்பாவின் வம்சவிருக்ஷா இரண்டையும் ஒப்பிட்டு மேற்கத்திய சிந்தனைக்கும், இந்திய சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். ராமேஸ்வரம் கோவிலின் பிரகாரத் தூண்களிலுள்ள பாவை விளக்குச் சிற்பங்கள் ஒன்றுபோலவே இருக்கும். ஆனால் கூர்ந்து கவனித்தால், ஒவ்வொன்றும் வெவ்வேறானது என்பது தெரியும். இந்திய மரபில், கலைஞனின் தனி அடையாளம் என்பது, அவர் உருவாக்கும் அந்த நுண்மையான வேறுபாடே என்பது போன்ற பல நுணுக்கங்களை அவர் சுட்டிக் காட்டினார்.
எழுத்தாளர்களை பெர்க்லி பல்கலை முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் டாக்டர். ஜார்ஜ் ஹார்ட் மற்றும் திருமதி. கௌசல்யா ஹார்ட் கௌரவித்தார்கள். கவுசல்யா ஹார்ட் அவர்கள் திருவாய்மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் அறிமுகப்படுத்தப்பட்டு, வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். |