அரங்கேற்றம்: ஷ்ரேயஸ் முரளிதரன்
ஜூலை 25, 2015 அன்று ஷ்ரேயஸ் முரளிதரனின் கச்சேரி அரங்கேற்றம் நாக்ஸ்வில்-ஓக்ரிட்ஜ் புறநகரில் பெலிசிப்பி கம்யூனிட்டி கல்லூரி கோயின்ஸ் கலையரங்கில் சிறப்பாக நடந்தது. டாக்டர் சாஜி கோபிநாத் மிருதங்கமும், ஜாக்ஸன்வில் ப்ரவீன் வெங்கட்ராமன் வயலினும் பக்கம் வாசித்தனர். மோஹன கல்யாணியில் லால்குடியின் 'வல்லபை நாயகா'வில் தொடங்கிய கச்சேரி, புரந்தரதாசர், தியாகராஜர், பாபநாசம் சிவன் போன்றோரின் அழகிய பாடல்களில் அடாணா, நாட்டை, கீரவாணி ராகங்களில் சீரோடு அமைந்திருந்தது. ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'ஸ்வாகதம்', 'நாத முரளிகான' இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்துப் பாடுகையில் ஊத்துக்காடு பாரம்பரியத்தில் பயின்ற அவரது பாட்டியின் பாதிப்பை உணரமுடிந்தது. கணீரென்ற ஷ்ரேயஸின் குரல், உச்சஸ்தாயியின்போது இன்னும் சிறப்புற இருந்தது. பாலமுரளியின் மங்களத்தோடு கச்சேரி நிறைவுற்றது.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஷ்ரேயஸ் கொலம்பஸ் ஒஹையோ மாநிலக் கல்லூரியில் மின்துறைப் பொறியியலில் முதலாண்டு மாணவராகச் சேர்ந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஷ்ரேயஸின் பெற்றோர் முரளிதரன், சீதா இருவரும் அவர் ஒருவயதாக இருக்கும்போதே அமெரிக்காவுக்கு வந்துவிட்டனர். ஆயினும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஷ்ரேயஸின் உச்சரிப்பு, அனுபவித்துப் பாடிய விதம் 'இங்கு வளர்ந்தவரா!' என்று வியக்கவைத்தது. இசைமேதை எம்.டி. ராமனாதனின் மருமகள் குரு ப்ரீதி பாலாஜியிடம் ஷ்ரேயஸ் ஐந்து வயதாக இருக்கையில் தொடங்கிய கர்நாடக இசைப்பயிற்சி, புல்லாங்குழல், கிட்டார் என விரிவடைந்துள்ளது. மிகச் சிறப்பான அரங்கேற்றம்.

கோம்ஸ் கணபதி,
நாஷ்வில், டென்னசி

© TamilOnline.com