அரங்கேற்றம்: ரிதி ரவிச்சந்திரன்
ஆகஸ்ட் 1, 2015 அன்று பாலோ ஆல்டோ, யூத சமுதாய மையத்தில் அபிநயா டான்ஸ் கம்பெனி குரு மைதிலி குமாரின் மாணவி ரிதி ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நாட்டை ராகத்தில் நடராஜப் பெருமானுக்குப் புஷ்பாஞ்சலி, குரு, மற்றவர்களுக்கு அஞ்சலியுடனும் நடனம் தொடங்கியது. கங்கையே விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு வந்ததுபோல ரிதியின் நடனம் அற்புதமாக அமைந்தது. மாளவிகா குமார் அமைத்துக் கொடுத்த பிரியராகமாலிகா ராகத்தில் அமைந்த ஜதிஸ்வரத்தில் ரிதி பார்வையாளர்களின் உள்ளத்தைத் துள்ளவைத்தார். நீலாம்பரியில் அமைந்த வடிவேலன்மீது கொண்ட காதல் பாடலுக்கும், லதாங்கி ராகத்தில் பல்லவி துரைசாமியின் சிவபெருமானின் ஐந்தொழிலைக் குறிப்பிடும் பாடலுக்கும் காட்டிய முத்திரைகளும், முகபாவங்களும் அருமை.

பாரதியாரின் ஜோன்புரி ராகத்தில் அமைந்த 'ஆசைமுகம் மறந்துபோச்சே' பாடலுக்கு ரிதியின் அபிநயம் பார்த்தோர் நெஞ்சத்தைக் கனியவைத்தது. ஜென் ஜோட்டி ராகத்தில் அமைந்த 'நாரா சின்னானா' பாடலுக்குக் கண்ணனின் குறும்புத்தனங்களை அப்படியே வடித்துக்காட்டியது அபாரம். இறுதியாக ஹிந்தோளத்தில் திருகோகர்ணம் சுப்பராமையரின் தில்லானாவிற்கு ரிதியின் ஆட்டம் படு விறுவிறுப்பு.

வெ.காமாட்சி,
பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com