ஆகஸ்ட் 2, 2015 அன்று உட்சைட் (Woodside) உயர்நிலைப்பள்ளியில் நிருத்தியார்ப்பணா நடனக் கழகத்தின் (www.roopaanand.com) மாணவி பல்லவி நாராயணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. கணேசர், சிவன் மற்றும் சரஸ்வதி பூஜைகளுக்குப் பின் குரு திருமதி ரூபா ஆனந்த் அவர்களிடமிருந்து பல்லவி சலங்கையைப் பெற்றார். கணேச கிருதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து, ராஜராஜேஸ்வரி அஷ்டகத்திலிருந்து சில ஸ்லோகங்கள் அடங்கிய அம்பாள் ஸ்துதியில் துர்கா, சாம்பவி, சந்திரமௌலி, உமா மற்றும் பார்வதி முதலிய தேவியரைப் பல்லவி அழகாக அபிநயித்தார். ஸ்ரீகிருஷ்ணா அஷ்டோத்தர சுலோகங்களுக்குக் கண்ணனின் கதையை அழகாகச் சித்திரித்து உள்ளத்தைக் கொள்ளைகொண்டார்.
பிறகு "ஆனந்த நடன மாடிதா" ஆபோகி ராகப் பதத்திலும், "இதனே ஸகி" என்ற பேஹாக் ராக ஜாவளியிலும் நல்ல அபிநயத்துடன் நடனமாடினார். பின் வந்த "சிருங்க புராதீஸ்வரி" என்ற கல்யாணி ராக தேவர்நாமாவில் சரஸ்வதியைக் கண்முன் கொணர்ந்தார். மோகனகல்யாணி ராகத் தில்லானாவுடன் அரங்கேற்றம் நிறைவுற்றது.
திருமதி. ரூபா ஆனந்த் (நட்டுவாங்கம்), திருமதி. ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), திரு. ரவீந்திரபாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமணியன் (வயலின்), திரு. அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.
ஹ.பா. ஈச்வர், சான்ட கிளாரா, கலிஃபோர்னியா |