ஆகஸ்ட் 15, 2015 அன்று குரு ஸ்ரீமதி அனுராதா சுரேஷ் மற்றும் செல்வி. மானசா சுரேஷ் அவர்களது சிஷ்யரும் 'ஸ்ருதி ஸ்வர லயா' பள்ளி மாணவருமான நிக்கிலேஷ் பாஸ்கரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சான் ரமோன் நிகழ்கலை மையத்தில் நடைபெற்றது. நவராகமாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஹம்சத்வனி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த "மூலாதார மூர்த்தி" என்ற பாபநாசம் சிவன் எழுதிய விநாயகர் கிருதியைப் பாடினார். பின் "நம்பிக் கெட்டவர்" கிருதியில் நாம் அனைவரும் ஒருநாள் சிவனடியைத் தஞ்சம் புகவேண்டும் என்று மிகவும் அருமையாகப் பாடிக் கேட்டோரின் நெஞ்சம் புகுந்தார். அடுத்து கமாஸ் ராகத்தில் "சுஜன ஜீவனா" என்ற தியாகராஜர் க்ருதியை நிதானத்துடனும் ராக பாவத்துடனும் பாடினார். கல்யாணி ராகத்தில் "உன்னையல்லால் வேறே கதி இல்லை" என்ற பாடலை, ராகம், ஸ்வரத்துடன் பாடினார். "நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாக்ஷி" என்ற இடத்தில் ஸ்வரம் பாடியதை அனைவரும் ரசித்தனர்.
பிருந்தாவன் சாரங்கியில் "கலியுக வரதன்", ரேவதியில் "போ சம்போ" இரண்டும் அருமையோ அருமை! காபி ராகத்தில் "என்ன தவம் செய்தனை" பாடி அதை எல்லாத் தாய்மார்களுக்கும் சமர்ப்பித்தார் நிக்கிலேஷ். "குறை ஒன்றும் இல்லை" ராகமாலிகாவும், "துள்ளுமத" என்ற திருப்புகழும் நிறைவாக இருந்தன. திரு. வி.வி.எஸ். முராரி அவர்களது வயலினும், திரு. பூவளூர் ஸ்ரீஜி அவர்களது மிருதங்கமும் கச்சேரிக்கு மேலும் பக்கபலமாக இருந்தன.
கீதா, சான் ரமோன், கலிஃபோர்னியா |