ஒட்டுதலின்றித்தான் சந்திரா ஒவ்வொரு முறையும் ரகுவிடம் பேசினாள், ஒரு பயனர் வணிகரிடம் பேசுவதைப் போல. ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து எனக்குள் உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. சந்திரா அவரிட மிருந்து பிரியும் முன்பும், பிரியும்போதும் உடனிருந்து பார்த்த என் மூளை அவள் தன் மகளுக்காகத்தான் பேசுகிறாள் என்று நம்பியது. மனம் மட்டும் ரகுவின் மேல் அவளுக்கு நட்பு ஏற்பட்டுவிட்டாலோ என்று மீண்டும் மீண்டும் பயந்தது. ரகுவுக்கும் இப்போது குடும்பம் உண்டு, இனிமேல் சந்திராவை அவர் நினைப்பதோ, இல்லை சந்திரா அவரை நினைப்பதோ நடக்காது என்று மூளை கணக்கிட்டுக் கொண்டாலும் பாழும் மனம் பயந்து தவித்தது. மனதுக்கும் மூளைக்கும் நடந்த சச்சரவில் நான் ஒவ்வொருமுறையும் மிகவும் களைத்தேன். வேலையில் ஈடுபடவே முடியவில்லை.
சந்திராவுக்கு நான் புகைபிடிப்பது மட்டும்தான் என்னிடம் பிடிக்காத விஷயம். புகைப்பதை நிறுத்தினால், அவளுக்கு அந்த அதிருப்தியும் இருக்காது. ஆகவே, விட்டு விடலாம். தவிர, சம்பளத்தில் பெரும் பகுதியைச் செலவிட்டு 'ஆண்டிக்ஸ்' எனப்படும் பழம் கலைப்பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கத்தையும் நிறுத்தி விட்டால், மிகவும் மகிழ்வாள் என்றெல்லாம் பலவாறாய் ஏதேதோ யோசித்தேன். இனிமேல், வீட்டுவேலைகளிலும் சந்திராவுக்கு உதவவேண்டும். வேறு என்னென்ன செய்தால் அவளுக்குப் பிடிக்கும் என்று முதல் முறையாகத் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட என் மனதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். மறுகணமே ஏன் அப்படி யெல்லாம் தோன்றுகிறது என்றும் ஆராயத் தலைப்பட்டேன்.
அவள் இல்லாத வாழ்க்கை! அது எப்படியிருக்கும் என்று யோசிக்கும்போது எழுந்த கவலைகளோ? இலக்கின்றித் திரிந்த பழைய வாழ்க்கைதான் ஞாபகம் வந்தது. சந்திரா என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் நான் அவளுடன் சேர்ந்து பத்தானேன். அவள் இல்லாவிட்டால், மீண்டும் பழையபடி பூஜ்யமாகிவிடுவேன் என்று நினைத்துக் கொண்டேன். தனியே சமாளிக்கக்கூடிய அனைத்துத் திறமைகளும் சந்திராவுக்கு உண்டு. அவளைப் பொருத்தவரை, அவளது வாழ்க்கையில் பிரிவு, மணவிலக்கு, நீதிமன்றம் என்று அடித்த புயலின் போது அவள் பிடித்துக்கொண்டு நின்ற ஒரு தூண்தான் நான். அந்த நன்றிக்கடனை அடைப்பதாய் நினைத்தே நான் கேட்டதும் என்னை மணந்திருந்தாள் என்பதை மணமான ஒரே வருடத்திற்குள் புரிந்து கொண்டேன். நான் இல்லாதிருந்தாலும் அவள் செவ்வனே சமாளித்திருப்பாள் என்பது மட்டும் அவள் உணராதது. யானைக்குத் தன் பலம் தெரியாதே!
ஒரு வருடம் முன்புதான் ரம்யாவின் மேற்படிப்புச்செலவையும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ள ஆசைப்பட்டு சந்திராவின் ஆபீஸ¤க்கு 'தூது' அனுப்பி யிருந்தார் ரகு. பதினான்கு வருடங்களாக இல்லாத பாசமும் கரிசனமும் திடீரென்று பொத்துக் கொண்டதோ என்று ரகுவை விமரிசித்தாள் சந்திரா. பிடிகொடுக்க வேயில்லை பலநாட்களுக்கு. ரம்யாவிடம் ரகு பேசிவிடுவாரோ என்று பயந்து மிகக் கவனமாக மகள் பெற்ற தகப்பனைச் சந்திக்காமல் பார்த்துக்கொண்டாள். ரகு விடாமல் முயன்று கொண்டேயிருந்தார். 'எம்பொண்ணப் படிக்கவைக்க எனக்குத் தெரியாதோ?', என்றெல்லாம் முதலில் பயங்கரமாகக் கோபத்தில் பொறிந்து தள்ளிய சந்திரா கொஞ்சநாட்களிலேயே மாறிப் போனாள்.
சரியான வாய்ப்பு வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டு நின்றிருந்தது. ரகு ஏழு வருடமாகச் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி நல்லநிலையில் இருந்தார். அங்கேயே உள்ளூர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு ஐந்து வயதில் ஒரு மகனும் இருந்தான். அவர் ஏதோ உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் என்றிருந்த எனக்கு, அவர் சந்திராவின் ஆபீஸ¤க்கு நேரில் போய்ப் பேசிவிட்டு, அதன் பிறகு வீட்டிற்கும் போன் செய்து பேசியபோது அவருடைய நோக்கத்தில் இருந்த நேர்மை முதல் முறையாக எனக்குப் புரிந்தது. அசௌகரியமாக நான் உணரத் தொடங்கியதும் அப்போதுதான். ஏனென்று அப்போது விளங்கவில்லை. ஏதோ இனம் புரியாத மனக்கலக்கம்.
ரம்யாவுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும் போது ஒரு கோடை விடுமுறையின் போது மாலையில் அவளிடம் என்னைப்பற்றிச் சொல்லலாமென்று அவளைக்கூட்டிக் கொண்டு எலியட்ஸ் பீச்சுக்குப் போயிருந்தேன். அவளுடைய நெருங்கிய தோழியைப் பற்றிக் கேட்க ஆரம்பித்து மெதுவாக, "என்னைப் பத்தி உனக்குச் சொல்லத்தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன். நான்..." என்று ஆரம்பித்ததுமே, "தெரியும்" என்று சொல்லிக் கையைப் பெரிய மனுஷியைப் போலக் காட்டி என்னை மேலே பேசவிடாது தடுத்துவிட்டாள். சில கணங்கள் என் முகத்தைப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தூரத்தே கடலின் நடுவே நிறுத்திக் கொண்டாள். யோசித்தாள் போல.
என்ன தெரிந்தது, எப்படித் தெரிந்தது, யார் சொன்னார்கள் என்றெல்லாம் கேட்டு அவளுக்கு என்பால் இருந்த அன்பின் ஆழத்தையும் அழுத்தத்தையும் கொச்சைப் படுத்தப் பிடிக்காமல் பேசாதிருந்தேன். எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடமிருந்து விலகிவிடாமல் இருந்திருக்கிறாள் என்று எண்ணும்போது பெருமிதத்தில் என் தொண்டை அடைத்தது.
உட்கார்ந்திருந்த அதே நிலையில், ஏதோ தூக்கத்தில் பேசுவதைப்போல, ஆனால் மிகத் தெளிவாக "ஆனா... என்னால வேற யாரையும் என்னோட அப்பாவா நெனக்கவே முடியாதுப்பா" என்றாள். டக்கென்று பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக்கொண்டே எழுந்துகொண்டாள். பீடிகையின் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டுவிட்டாளே என்று வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்த அவளைத் தொடர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தேன் பேசாமல். பின்பக்கம் திரும்பி, "பாட்டி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நான் சிக்ஸ்த் படிக்கும் போதே. எனக்குத் தெரியும்னு அம்மாவுக்குத் தெரியாதுன்னு நெனக்கறேன்" என்றாள். வீட்டுக்கு வந்து சந்திராவிடம் நான் சொன்னபோது, இரண்டு வருடமாக எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் நடந்து கொண்டிருந்த தன் மகளை நினைத்து அவள் வியந்தாள்.
நான்கு வயதிலேயே ரம்யா தன் பிஞ்சு வலக்கை விரல்களை நேராக வைத்துக் கொண்டு வாயில் ஓசை வேறு செய்து கொள்வாள். வானை நோக்கித் தன் கற்பனை விமானத்தைப் பறக்கவிடுவாள். அடிக்கடி அவள் விளையாடிய விளையாட்டே அதுதான். "ஏரோப்ளேன்ல ஏறி எங்க போகப்போற ரம்யாகுட்டி?" என்று கேட்டால் 'அமெரிக்கா' என்றோ 'லண்டன்' என்றோ தனக்குத் தோன்றிய அல்லது தெரிந்த நாட்டின் பெயரைச் சொல்வாள். தீவிரத்திலும் ஆர்வத்திலும் அவளுடைய விழிகள் விரிந்து பளபளக்கும்.
எப்போது அவ்விளையாட்டை நிறுத்தினாள் என்று நினைவில்லை. அவளின் அந்த விளையாட்டு அவளுடைய உள்மனதின் கனவாக வளர்ந்திருந்ததை நாங்கள் அறியும்போது அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் நான் அவளிடம் பேச உட்கார்ந்துகொண்டு மேற்படிப்பைப் பற்றிக் கேட்டபோதுதான் அவள் வெளிநாடு சென்று பொறியியல் படிக்க ஆசைப் படுவதையும், அந்த ஆசையை ஒரு கனவாகப் பொத்திப்பொத்தி வளர்த்திருந்த தையும் அறிந்து கொண்டேன். அன்றே சந்திராவிடம் சொன்னேன்.
அவள் ஆசைப்பட்டபடியே படிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்ததில், அவள் மகிழ்ச்சியில் பங்குகொள்வதில் எல்லை யில்லா மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், எப்படி ரம்யாவைப் பிரிந்து இருக்கப் போகிறேனோ என்று தான் குழம்பிக் கொண்டேயிருந்தேன். எனக்கே எனக்கு என்று ஒரு குழந்தையில்லையே என்று என்றுமே நான் நினைத்ததில்லை. ஒன்றைப் பெற்றுக் கொண்டிருக்கலாமோ என்று அப்போதுதான் தோன்றியது.
சிங்கப்பூர் போன பிறகும் ரகு அடிக்கடி போன் செய்து சந்திராவிடம் பேசினார். ரம்யாவிடமும் பேச முயன்றார். அதை யெல்லாம் கவனித்து வந்த நான் நானாக இல்லை. மனதில் ஒரே குழப்பம். சந்திராவிடமே பலமுறை அர்த்தமில்லாமல் எரிந்துவிழுந்தேன்.
சில மாதங்களுக்கு முன்பு, இரவில் திடீரென்று ஏதோ கனவு கண்டு, வியர்த்து விழித்துக்கொண்டவன் சந்திராவையும் உலுக்கி எழுப்பினேன். "சந்திரா, நான் தன்னந்தனியா இருக்கறமாதிரி கனவு கண்டேன். நீ என்ன விட்டுட்டுப் போயிடுவியா? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சந்திரா" என்ற என்னைப் பார்த்து குபீரென்று சிரித்துவிட்டாள். பிறகு, சில நிமிடங்கள் என் முகத்தையே பார்த்தாள். "உன்னவிட்டுட்டு நான் போறதாவது? முடியுமா? இன்னும் பத்து ஜன்மம் எடுத்தும் தீர்க்கமுடியாத கடனில்ல பட்டிருக்கேன் உன்கிட்ட" என்று அவளின் கண்கள் நெகிழ்ச்சியான தருணங்களில் பேசும் வார்த்தைகளைப் பேசின. ஆனால், முதுகில் ஓங்கித் தட்டிக்கொடுத்து," பயமா? ம்..ம்.. படு நல்லா பயப்படு. அந்த பயம் இருக்கறதும் நல்லதுதான்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போர்த்திப் படுத்துவிட்டாள். சீக்கிரமே மிக இயல்பாக தூக்கத்தில் அவள் அமிழ்வதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன். கலாய்க்கவும் மிரட்டவும் சரியான ஒரு பிடி கிடைத்துவிட்டதே அவளுக்கு என்று நினைத்தபோது சிரிப்புத்தான் வந்தது.
அடுத்தநாள் காலையில் "ப்ளஸ் டூ ரிஸல்டும் வரப்போகுது. ஏன் சந்திரா, ரம்யாவ அவங்கப்பாகிட்ட படிக்க அனுப்பறதாத்தான் இருக்கியா?" என்று நான் கேட்டதுமே ஒன்றும் சொல்லாமல் காபியை ஆற்றிக்கொண்டிருந்தாள். கொஞ்சநேரத்தில் "ஒரு பக்கம், அவளப் பிரிஞ்சு இருக்கணுமேன்னு இருக்கு. இன்னொரு பக்கம் அவளோட எதிர் காலத்துக்கு நல்லது, அவ கனவு நனவாகும்னு தோணும்து. ஒண்ணும் புரியல்ல" என்றாள். சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்துவிட்டது. "சந்திரா, ரம்யா புத்திசாலி. அவளே யோசிக்கட்டும். அதுக்கு முன்னாடி நமக்குத் தோணறத அவளுக்குள்ள திணிக்கவேண்டாம். அவளப் பிரிஞ்சு நீ இருந்துடுவியோ என்னவோ, ஆனா அத நெனச்சாலே எம்மனசே சூன்யமாயிடுது. வேலையே ஓடமாட்டேங்குது" என்ற என்னைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே தலையாட்டி விட்டுப் போனாள்.
போன மாதம் பழைய பாஸ்போர்ட்டைக் கொண்டுபோய் புதுப்பாஸ்போர்ட் விண்ணப் பிக்கவும் அதற்கு நிழற்படங்கள் எடுக்கவும், வேண்டிய பொருள்கள் வாங்கவும் என்று இரண்டு நாட்கள் லீவெடுத்துக்கொண்டு அவளை வண்டியில் கூட்டிக்கொண்டு அலைந்தேன்.
ரம்யாவின் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தன. பள்ளியிலேயே இரண்டாமிடம். பொறியியல் கல்லூரி பொதுநுழைவுத் தேர்வில் இன்னும் நல்லபடியாகத் தேர்ச்சிபெற்றிருந்தாள். அதைப்பார்த்ததும் ஏன் இந்தியாவிலேயே படிக்கக்கூடாது என்று உதடு வரை வந்த சிந்தனையை உள்ளுக்குள்ளேயே போட்டு அழுத்திவிட்டேன். ரம்யாவின் கனவான வெளிநாட்டுப் படிப்பை நனவாக்க எனக்கு மட்டும் வெளிநாட்டில் ஒரு வேலை கிடைத்தால், அவளையும் பிரியவேண்டாம் என்றெல்லாம் ஏதேதோ நடக்கமுடியாததை யெல்லாம் யோசித்தேன்.
இத்தனைக்குமிடையில் ரம்யாவின் முகம் சதா யோசனையில் இருந்தாற்போலிருந்தது. வழக்கமாக அவள் முகத்தில் இருக்கும் கலகலப்பைக் காணவில்லை. அம்மாவைப் பிரியப்போகும் வருத்தமோ. திரும்பத் திரும்பச் சந்திரா சொல்கிற மாதிரி ரம்யாவோட எதிர்காலம்தான் முக்கியம் என்று தோன்றினாலும் ரம்யாவைப் பிரியவேண்டும் என்று நினைத்தாலே தலை முதல் கால்வரை என்னில் ஒரு தொய்வை உணர முடிந்தது.
ரம்யா சிங்கப்பூருக்குப் போய்ப் படிக்க அவளுக்கு ஸ்டூடண்ட்ஸ் பாஸ¤க்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அதற்குச் சில தகவல்கள் மற்றும் விவரங்கள் தேவையாயிருந்ததால், சந்திரா சிங்கப்பூருக்குத் தொலைபேசினாள். அவள் ரகுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, ரம்யா மெதுவாக இடத்தை விட்டு நழுவினாள்.
அடுத்த இரண்டு வாரத்தில் விசாவும் வந்துவிட்டிருந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் கிளம்பவேண்டும். ஒரு நாள் ரம்யா சந்திராவிடம் வந்து, "அம்மா, எனக்கு அங்க சரியா வருமா? அங்கயிருக்கற ஆண்டியோட எனக்கு ஒத்துப்போகாட்டி என்ன செய்ய? கொஞ்சம் நெர்வஸாத்தான் இருக்கு எனக்கு" என்று பேச்சை மெதுவாக ஆரம்பித்தாள். சந்திரா என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி மகளைநோக்கி, "ரம்யா அதெல்லாம் சரியாயிடும்மா. ஹாஸ்டல்ல இருக்கறதில்லையா அதமாதிரி நெனச்சுக்கவேண்டியதுதான். நீ நல்லாப் படிக்கணும். மிச்சத்தையெல்லாம் லைட்டா எடுத்துக்கோ. உன் கனவு நனவாகப் போகுது" என்று உற்சாகப்படுத்தினாள். நானும் என் பங்கிற்கு, "ரம்யா, தைரியமா இரு. எவ்ரி திங்க் வில் பி ·பைன்" என்று சொன்னேன். தலையை ஆட்டிவிட்டுத் தன் அறையை நோக்கிப் போய்விட்டாள்.
அடுத்த நாளே ரகு மீண்டும் போன் செய்தபோது, சந்திரா தான் பேசினாள். ஏன் ரம்யா போனில் பேசுவதில்லை என்றும் ஒரு மின்மடல் கூட அனுப்புவதில்லை என்று ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார். சந்திரா ரம்யாவிற்கு நேரமில்லை என்று சொல்லிச் சமாளித்தாள். தன் கையில் போனைத் திணத்துவிடுவாளோ என்று பயந்து கொண்டே ரம்யா 'வேண்டாம்' என்று கையை ஆட்டிச் சைகையால் சொல்லி விட்டு அறைக்குள் குடுகுடுவென்று ஓடிப் போய்விட்டாள்.
போனை வைத்ததுமே முதல் வேலையாக ரம்யாவின் அறைக்குள் போனாள் சந்திரா. "ஏன் ரம்யா அவாய்ட் பண்ற?" என்று ஆரம்பித்ததுமே, "அம்மா, திடீர்னு அவர அப்பான்னு கூப்டணும்னும், ஒடனே ஒட்டிக்கணும்னும் எதிர்பார்த்தா எப்டிம்மா?" என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்து, "ரெண்டு வயசுல பார்த்த அவர எனக்கு நெனப்பேயில்ல. இட் வில் டேக் சம் டைம் மா. அன்னிக்கிப் பேசும்போது அவரு பாட்டுக்குப் படபடன்னு ஏதேதோ பேசறாரு. ஐ நீட் டைம்" என்றாள். உடனே சந்திராவும், "சரி, நானே ரகுகிட்ட சொல்றேன். புரிஞ்சுப்பாரு. ஹீ ஹஸ் பிகம் மோர் பேஷண்ட் நௌ" என்றாள்.
ஒரு முறைகூட ரம்யாவின் வாயில் 'அப்பா' என்ற சொல் வரவில்லை என்பதைச் சந்திரா கவனித்தாளோ தெரியவில்லை. நான் அலாதியான திருப்தியுடன் கவனித்தேன்.
அன்றிரவு தனிமையில் நான் சந்திராவிடம் பேசும்போது, "சந்திரா, ரம்யா போய்த்தான் ஆகணுமா? அவ ரொம்ப சங்கடமா ·பீல் பண்றாளேம்மா" என்றபோது "நீ வேற ஆரம்பிக்காத குமார். நானே ரொம்ப கொழம்பியிருக்கேன். பேசாம தூங்கு" என்று சொல்லிவிட்டுத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள். மகளின் விருப்பத்துக் காக அவளை அனுப்ப நினைத்தாள். ஆனால், ரம்யா புது மனிதர்களோடு புதிய இடத்தில் எப்படியிருப்பாளோ என்ற கவலை அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. மகளுக்குக் கிடைத்த வாய்ப்பை 'பாசம்' என்ற காரணம் காட்டிக் கெடுத்து விடக்கூடாது என்பதில்தான் மிகக் கவனமாக இருந்தாள்.
ஒரு வாரத்திற்கு மேலானது ரகுவின் போன் வந்து. ஏனென்று எல்லோருக்குமே உள்ளூரத் தோன்றிக்கொண்டிருந்தது. வாங்கி அனுப்பியிருக்க வேண்டிய விமானப் பயணச் சீட்டும் வந்தபாடில்லை.
கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் போன் வந்தது. "சந்திரா, ஒரு சின்ன சிக்கல். என் மனைவி ரொம்ப 'அனீஸி'யா '·பீல்' பண்றா போலயிருக்கு. ரம்யாவப் படிக்க வைக்க இங்க கூப்டுகிட்டா, நான் அவளையும் அவளோட மகனையும் விட்டுப் போய்டு வேனோன்னு உள்ளூரக் கொஞ்சநாளா பயப்பட்டுகிட்டேதான் இருந்திருக்கா. ரெஸ்ட்லெஸா இருந்தா. போன வாரம் கொஞ்சம் அதிக டிப்ரெஸ் ஆயிட்டா. டாக்டர் கிட்ட கூட்டிப்போனேன். இப்ப மருந்து சாப்பிடறா. அதான், யோசிச்சேன். சந்திரா, நீ ரம்யாவ அங்கேயே சேர்த்தா, நா வேணா செலவெல்லாம் ஏத்துகிட்டு உதவலாமான்னு பாக்கறேன்" என்று சொன்னார். ஸ்பீக்கர் போனில் எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரம்யா நாட்கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருந் தவள் சட்டென்று தளர்ந்தது போலத் தெரிந்தது.
"அப்பா, கவலையே படாதீங்க. அண்ணா யூனிவர்ஸிடில இடம் கெடைக்கும். நான் இங்கயே படிக்கறேம்மா. இதுவும் நல்லதுக்கே" என்று ரம்யா மகிழ்வுடன் சொன்னதும் சந்திராவுக்கு ஏற்பட்ட நிம்மதி முகத்தில் தெரிந்தது. பழையபடி நான் நானானேன்.
ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் |