ஆகஸ்ட் 15, 2015 அன்று Carnatic Chamber Concerts (CCC), "பாரத தரிசனம்" என்ற நிகழ்ச்சியை மில்பிடாஸ் ஷீரடி சாயிபாபா கோவில் அரங்கத்தில் நடத்தியது. இதில் பங்கேற்ற விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த 15 கர்நாடக சங்கீத வித்வான்கள் சங்கீதத்துக்கு வரம்புகளில்லை என்பதை நிரூபித்தனர். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் சாரி, ஹரி தேவநாத், விவேக் சுந்தரராமன், ஷிவ்குமார் பட், கஸ்தூரி ஷிவ்குமார், அகிலா ஷங்கர், ரமா தியாகராஜன், ஸ்ரீவித்யா ரமேஷ், ஸ்னிக்தா வெங்கடரமணி, கோபி லக்ஷ்மிநாராயணன், ரமேஷ் ஸ்ரீனிவாசன், சரவணப்ரியன் ஸ்ரீராமன், ரவீந்திரபாரதி ஸ்ரீதரன், நடராஜன் ஸ்ரீனிவாசன், அர்விந்த் லக்ஷ்மிகாந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
பலவகைப் பாணிகள் கொண்ட இந்த வித்வான்கள் ஒன்றுசேர்ந்து அபூர்வமான இசைமாலையை இந்தியத் தாய்க்குச் சமர்ப்பித்தது விசேடம். இந்த இசைப்பயணம் ஆந்திராவில் அன்னமாசார்யா கிருதிகளில் தொடங்கி, கேரளாவின் கதகளி விருத்தம், கர்நாடகாவின் ஸ்ரீபாத ராயா கீர்த்தனைகள், மகாராஷ்ராவின் அபங்கம், ஒரிஸாவின் ஜெயதேவர் கீர்த்தனைகள், குஜராத்தின் ஹவேளி சங்கீத், ராஜஸ்தானின் மீரா பஜன், உத்தரபிரதேசத்தின் சூர்தாஸ் பஜன், காஷ்மீர நாட்டுப்புற இசை, பஞ்சாபி கவ்வாலி, மேற்கு வங்காளத்தின் ரபீந்தர சங்கீத் வழியாகத் தமிழ்நாடு வந்தடைந்து மல்லாரியுடன் தொடங்கி கோவில் பாசுரங்கள் இசைத்து, வந்தே மாதரம் பாடி, இறுதியாக எந்தரோ மஹானுபாவ என்று எல்லோருக்கும் வந்தனம் பாடி முடிந்தது. அமைப்பாளர்கள் பத்மா மற்றும் மோகனின் உழைப்பினாலும், CCC தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்பினாலும் சிறப்பாக நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி. இதற்கு தலைமை தாங்கிய இந்திய கான்சல் ஜெனரல் திரு. வெங்கடேசன் அஷோக் அவர்கள் "இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக இருந்தது" எனக் குறிப்பிட்டார். அவர் வித்வான்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
கிருஷ்ணசாமி நரசிம்மன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |