டாலஸ்: 'தாண்டவகோனே' தாளம், இசை, நடன நிகழ்ச்சி
அக்டோபர் 3ம் தேதி, சனிக்கிழமை, 4 மணியளவில் டாலஸ் கார்லண்ட் க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் 'தாண்டவகோனே' என்ற தாளம், இசை மற்றும் நடனங்களின் சங்கமமாகப் புதிய வடிவிலான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் 5வது ஆண்டாக அறப்பணிகளுக்கான நிதி திரட்டும் நிகழ்வாகும் இது. தமிழ் நிகழ்கலைக் கழகத்தின் 'அமெரிக்கப் பறைநடனக் குழுவினர்' இதில் பங்கேற்க செயின்ட் லூயிஸ் மற்றும் அட்லாண்டா நகர்களிலிருந்து வருகின்றனர்.

தமிழர் மக்கள் கலைகளை அமெரிக்கத் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அமெரிக்கப் பறை நடனக்குழுவின் பறையிசை நடனம், பொதுமுறை தாளச் சித்திரம், தமிழர் சமூகக் கூட்டு நடனம் என மூன்று பிரிவுகளாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர்க் குழந்தைகளும் பெரியவர்களும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர் இசைக் கருவிகளான தவில், பம்பை, பறை, உருமி, கடசிங்காரி, தபேலா, மிருதங்கம், டோலக், கஞ்சிரா, துடும்பு இசையில் திருக்குறளையும் திருவள்ளுவரையும் நினைவுகூர்ந்து, அதற்கேற்ப பரதநாட்டியமும் இடம்பெறுகின்ற புதிய கலைவடிவத்தை, முதன்முதலாக இதில் அரங்கேற்ற உள்ளார்கள்.

நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகள், பெரியோர்கள், முதியோர்களுக்கு அடைக்கலமாகச் செயல்பட்டு வரும் 'உதவும் கரங்கள்', அமெரிக்கன் தமிழ்க் கல்விக்கழகம் மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு வழங்கப்படும்.

சின்னமணி

© TamilOnline.com