itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா
விரிகுடாப் பகுதித் தமிழர்கள் Itsdiff வானொலி நிகழ்ச்சியை நன்கு அறிவார்கள். மார்ச் 2005ல் தொடங்கப்பட்ட itsdiff இப்போது பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடுகிறது. இதுவரை ஐநூறுக்கும் மேல் விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. வாரம் 3 மணிநேரம் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, 'ஊர்கூடித் தேர் இழுக்கும் முயற்சி' என்று சொல்லிச் சந்தோஷப்படுகிறார் இதன் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா. பாடல்களை வழங்குவதோடு, மக்களை ஒன்றிணைப்பது, கருத்து/அனுபவப் பரிமாற்றம் இதற்கெல்லாம் மேடையமைத்துக் கொடுப்பது தமது நோக்கம் என்கிறார் ஸ்ரீகாந்த்.

நேயர்கள் இணைந்து வழங்குவது (co-host) நிகழ்ச்சியின் சிறப்பு. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் நீங்காத நினைவுகள், போராட்டங்கள், கனவுகள் இவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும் வினாடிவினா, நிதி நிர்வாகம், கிரிக்கெட், போதைப்பழக்கம் போன்ற சமூகப் பிரச்சனைகள், தமிழக அரசியல் நிகழ்வுகள், தீபாவளி, பொங்கல் போன்ற விழா சார்ந்த நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல், யோகம், ஆரோக்கியம் எனப் பல்சுவை விருந்தாக Itsdiff வருகிறது. திருக்குறள், குற்றாலக் குறவஞ்சி போன்ற இலக்கிய விளக்கங்களும் சுவை கூட்டுகின்றன.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும் பொது அரங்க நிகழ்ச்சியும் உண்டு. நமது கலாசாரம், நம்பிக்கைகள், ஒழுக்கங்கள் இவற்றை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பது உட்படப் பல விஷயங்கள் இதில் இடம்பெறும். இங்கே நேயர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதால் அதில் பிறர் பயன்பெற உதவுகிறது.

"வாராவாரம் எப்படிப் புதிய, சுவையான கருத்தில் நிகழ்ச்சியைக் கொடுப்பது? அதுவே ஒரு சவால்தான்" என்கிறார் ஸ்ரீகாந்த். இணைந்து வழங்க வாரம் ஒரு நேயரைக் கண்டுபிடிப்பது மற்றொரு சிரமம். தன்னார்வத் தொண்டர்களும் தேவைப்படுகின்றனர். சுதா ரகுநாதன், பண்டிட் ஹரிப்ரஸாத் சௌராஸியா, எழுத்தாளர் ஜெயமோகன், பேராசிரியர் ஞானசம்பந்தம், ஓவியர் ம.செ., P.B. ஸ்ரீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சித்ரா, வானொலி தயாரிப்பாளர் அப்துல் ஹமீது போன்ற பிரபலங்களின் பேட்டிகளும் அதிகம் கவர்கின்றனவாம். "ஸ்டான்ஃபோர்டிலிருந்து ஒலிபரப்பாகும் ரேடியோ நிகழ்ச்சிகளில், எங்கள் நிகழ்ச்சிக்குத்தான் அதிகத் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன" என்பதில் ஸ்ரீகாந்த் கொள்ளும் பெருமிதம் நியாயமானதுதான்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்', 'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்', உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', 'காஞ்சி பரமாச்சார்யாள் உபதேசம்' ஆகியவற்றைத் தன் சொந்தக் குரலில் ஒலிநூலாக ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார். இவற்றை முதியோர் இல்லங்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடையாகக் கொடுத்து உதவுகிறார். iTunes, Google Play ஆகியவற்றிலும் கிடைக்கின்றன. ஸ்மார்ட்ஃபோன்கள் போன்றவற்றில், சுலபமாக இவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். "அடுத்த தலைமுறையினருக்கு இவற்றை எடுத்துச்செல்வது எனது நோக்கம்" என்கிறார். வயதானவர்கள் இந்த ஒலிப்புத்தகம் தங்களை வேறு உலகிற்கு இட்டுச்செல்வதாகக் கூறக்கேட்பது இவருக்குச் சந்தோஷ அனுபவம். மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ஒலிநூல்கள் வெளிக்கொணர உதவி தேவை என்கிறார்.

அதற்கு மட்டுமல்ல, இணையதளத்தை நிர்வகிக்க, நிகழ்ச்சி தயாரிக்க, தொகுத்து வழங்க, ஆவணப்படுத்த, நேருக்குநேர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய என்று பலவற்றிற்கும் தன்னார்வத் தொண்டர்களைச் சேர்ந்து பணியாற்ற அழைக்கிறார். ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா ஒரு நடிகரும்கூட. மேடை நாடகங்களில் மஹாகவி பாரதி, கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம், ராமானுஜர், வீரப்பன், சுந்தர சோழர் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளார். itsdiff நிறுவனரும் இயக்குனருமான இவர், பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

தொகுப்பு: மீனாட்சி கணபதி

© TamilOnline.com