சங்கீத் சாம்ராட்-கர்நாட்டிக் ப்ரீமியர் லீக் 2015. உலகின் சிறந்த கர்நாடக இசைக்கலைஞரைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. அபயம் க்ரியேஷன்ஸின் கண்ணன் ஐயர், சுபாஷிணி ஆகியோர் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியுடன் இணந்து இதைத் தயாரிக்கின்றனர். கர்நாடக இசைக்கலைஞர் K.N. சசிகிரண் கருத்தாக்கத்தில் இந்நிகழ்ச்சி, க்ளீவ்லாண்ட் ஆராதனை கழகத்தின் V.V. சுந்தரம் அவர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் தம் இசைத்திறனைக் குறிப்பிட்ட நேரத்திற்குள், நீதிபதிகளின் குறுக்கீடு இல்லாமல், வெளிப்படுத்துவர். வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், தாளவாத்தியம் எனத் தனித்தனிப் பிரிவுகள் உண்டு.
போட்டிகளுக்கான வயதுப் பிரிவுகள்: 1. சங்கீத் பால சாம்ராட்: 12 வயதுக்கு உட்பட்டோர். 2. சங்கீத் யுவ சாம்ராட்: 13 முதல் 30 வயதுவரை உள்ளவர்களுக்கான தனிப்போட்டி. இதில் 13-19 வயதுவரை ஜூனியர் பிரிவு; 20-30 வயதுவரை சீனியர் பிரிவு. 3. கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: இது குழுப்போட்டி. சேர்ந்திசை மற்றும் வாத்தியக்குழுப் போட்டி. ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது 6, அதிகபட்சம் 10 உறுப்பினர் பங்கேற்கவேண்டும். வயது வரம்பு கிடையாது.
ஆரம்பம், இடைநிலை, உயர்நிலை என எந்த நிலையில் உள்ளவரும் போட்டியில் பங்கேற்கலாம். மனோதர்மம் பாடவேண்டிய கட்டாயம் இல்லை. பட்டங்களுக்குப் போட்டியிடுவோர் தமது நேரத்தில் மனோதர்மம் பாடலாம். சிறந்த மூன்று பாடகர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். சிறப்பாகப் பாடப்படும் பாடல்களுக்கு உடனுக்குடன் அங்கீகாரம் கிடைக்கும்.
இந்தியாவில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் 'சங்கீத் யுவ சாம்ராட்' போட்டியாளர்களே பங்கேற்க முடியும். இதில் 60 நிமிடக் கச்சேரி செய்யவேண்டும். மிகத்திறமை வாய்ந்த 'சங்கீத் பால சாம்ராட்' போட்டியாளர்களுக்கு உலகளாவிய அறிமுகம் தரப்படும். 'சங்கீத் பால சாம்ராட்' போட்டியாளர்கள், அமெரிக்காவில் நடக்கும் இறுதிச்சுற்றில் 10 நிமிடங்கள் பாடுவதோடு, கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டும். 'சங்கீத் யுவசாம்ராட்' போட்டியாளர்கள் 20 நிமிட மினிகச்சேரி செய்யவேண்டும்.
வெற்றியாளருக்கு 'சங்கீத் சாம்ராட்' பட்டம், ரூ.3,00,000 பரிசு, தவிர சென்னை டிசம்பர் சீஸன் மற்றும் முக்கிய சங்கீத விழாக்களில் 20 கச்சேரிகள் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். சிறந்த பாடகர்களுக்கு வயதுவரம்பு தளர்த்தப்படும். மண்டலப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுகள் உண்டு. அமெரிக்காவில் நடக்கும் இறுதிச்சுற்றில் முதல் மூன்று இடங்களை வெல்வோருக்குப் பரிசுகள் முறையே 1000, 750, 500 டாலர் வழங்கப்படும். 4,5,6வது இடங்களில் வருவோருக்கு தலா 100 டாலர் பரிசு. பங்கேற்ற அனைவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.
குழுப்போட்டிகளில், இரண்டு பிரிவிலும் வெற்றி பெறும் குழுக்களுக்கு தலா $1000 பரிசு வழங்கப்படும்.
சித்திரவீணை ரவிகிரண், நாகை முரளிதரன், திருவாரூர் வைத்தியநாதன், கர்நாட்டிகா சகோதரர்கள் மற்றும் அமெரிக்காவின் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர்கள் வழிகாட்டி/நீதிபதிகள் ஆகச் செயல்படுவர். வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆரம்பநிலைப் போட்டிகளில் வெற்றி பெறுவோர், டெலவரில் 2015 அக்டோபர் 10-11 தேதிகளில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான இறுதி மற்றும் அதற்கு முந்தைய சுற்றுக்களில் நேரடியாக பங்கேற்கலாம். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி இவற்றை ஒளிபரப்பும்.
போட்டிக்குப் பதிவுசெய்யவும் விதிமுறைகளை அறியவும்: www.sangeethsamraat.com; www.carnaticworld.com
நிதியாதரவு செய்ய விரும்புவோர் தொடர்புகொள்ள மின்னஞ்சல்: knshashikiran@gmail.com; தொலைபேசி: 423-534-9724
தமிழில்: மீனாட்சி கணபதி |