பாரதமெங்கும் வள்ளுவம்
உத்தராகண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறள்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். அது உலகப்பொதுமறை என்பதை நன்குணர்ந்தவர். இவரது வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஹரித்துவாரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க இடம் ஒதுக்கியுள்ளார். சென்னை திருவள்ளுவர் திருநாட்கழகம் இந்த வள்ளுவர் சிலையின் மாதிரியைத் தருண் விஜயிடம் கையளிக்க ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. மாமல்லபுரத்தில் தயாரிக்கப்பட்டுவரும் அந்தச் சிலையின் மாதிரியை உயர்நீதிமன்ற நீதிபதி வெ, ராமசுப்பிரமணியன் அவரிடம் வழங்கினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் திருநாட்கழகத் தலைவர் பேராசிரியர் சாமி. தியாகராஜன், காசி மடத்தின் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள், பேராசிரியை பர்வீன் சுல்தானா, ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தருண் விஜய் முன்னெடுத்து வருகிறார். இக்குரலுக்குச் செவிசாய்த்து. திருக்குறள், திருவள்ளுவர் வரலாறு இரண்டையும் மத்திய அரசின் பாடத்திட்டங்களில் சேர்க்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் வீர்பத்ர சிங், தமது ஹிமாச்சலப் பிரதேசத்தின் அரசுப் பாடத்திட்டத்தில் இவற்றைச் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீரப் பல்கலைக்கழகம் உருது மொழியில் திருக்குறளைத் தந்தால் மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம் என அறிவித்துள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வரும், கல்வி அமைச்சரும் தமது மாநிலத்தில் இவற்றை அரசுக் கல்விப் பாடத்திட்டங்களில் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழரின் ஒருமித்த குரலை வடக்கே எதிரொலிக்கும் தருண் விஜய் அவர்களுக்குத் குறள் வழிநடப்போர் நன்றி பாராட்டியே தீரவேண்டும்.

இது தொடர்ந்தால் திருக்குறள் தேசிய நூலாகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

© TamilOnline.com