கொங்கணவர் ஓர் இளந்துறவி. அவர் கானகத்துக்குச் சென்று 12 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார். அதனால் அவருக்குச் சில அரிய சக்திகள் கிடைத்தன. ஒருமுறை அவர் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து இளைப்பாறும்போது மேலிருந்து சருகுகள் தலைமீது கொட்டின. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். ஒரு கொக்கும் காகமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கவே மரத்தின் சருகுகள் அவர்மேல் கொட்டின.
"என்ன தைரியம் இருந்தால் இப்படியொரு காரியத்தைச் செய்வீர்கள்!" என்பதுபோலக் கோபத்துடன் அந்தப் பறவைகளைப் பார்த்தார். உடனே இரண்டு பறவைகளும் எரிந்து சாம்பலாயின. அதைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு ஆனந்தம் பிறந்தது. "ஆஹா.. என் தவத்தினால் அல்லவா இந்தச் சக்தி எனக்கு வந்தது" என்ற ஆணவம் முளைத்தது.
அதே செருக்குடன் உணவுதேடி இவர் அடுத்த ஊருக்குச் சென்றார். "பவதி பிட்சாம் தேஹி" என்று ஒரு வீட்டின்முன் நின்று யாசகம் கேட்டார். "அம்மா, உணவு தருவாய்" என்று இவர் வேண்டவும், "மகனே கொஞ்சம் காத்திரு" என்று ஒரு பெண்குரல் கேட்டது. நீண்டநேரம் அவள் அவரைக் காக்க வைத்தாள். தன்னுடைய கணவருக்குப் பணிவிடை செய்து முடித்தபின்னரே அவள் வெளியே வந்தாள்.
துறவிக்கோ கோபம் பொங்கியது. என்னுடைய சக்தியை அறியாமல் இவ்வாறு காக்க வைக்கின்றாளே என்ற ஆணவம் எழுந்தது. அந்தப் பெண்மணி வெளியே வந்தவுடன் கோபத்துடன் அவளை விழித்துப் பார்த்தார். உடனே அந்தப் பெண்மணி, "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்றாள் சிரித்துக்கொண்டே. துறவிக்குத் தூக்கிவாரிப் போட்டது. "காட்டில் நடந்தது இவருக்கு எப்படித் தெரிந்தது" என்று யோசித்தார். "எப்படி அம்மா காட்டில் நடந்ததை அறிந்தீர்கள்?" என்று பணிவோடு கேட்டார்.
அதற்கு அவள், "யோகப்பயிற்சி ஏதும் அறியாத சராசரி குடும்பப்பெண் நான். என் கணவர் நோய்ப் படுக்கையில் இருக்கிறார். அவருக்குச் செய்யவேண்டிய பணிகளைச் செய்வது என் முதல்கடமை. அதை முடித்தபிறகே நான் வரமுடியும். மகளாக என் பெற்றோருக்கு என் கடமைகளைச் செய்தேன். மணமானபின் கணவருக்குச் செய்துவருகிறேன். ‘கடமையைச் செய்வதே யோகம்’ என்பதுதான் எனக்குத் தெரிந்தது. என் கடமைகளை நான் முறையாக அன்போடு ஆற்றி வந்ததனால் நான் ஞான ஒளியைப் பெற்றேன். அதனால் எல்லாம் அறிந்தேன்" என்று கூறியவள், "கடமையைக் குறித்து இன்னும் நீ விவரமறிய விரும்பினால் காசிக்குச் சென்று தருமவியாதன் என்கின்ற கசாப்புக்கடைக்காரரை அணுகித் தெரிந்துகொள்வாயாக" என்று சொன்னாள்.
அதைக் கேட்ட கொங்கணவர் அதிர்ச்சி அடைந்தார். "ஒரு மேலான துறவியை ஒரு கசாப்புக்கடைக்காரனிடம் போய் உபதேசம் கேட்கச் சொல்கிறாளே!" என்று சிந்தித்தவாறே, பல நாட்கள் நடந்து காசியை அடைந்தார். அங்கே கடைவீதியில் ஒரு கசாப்புக் கடைக்காரரைப் பார்த்தார். அவர் பெருங்குரலில் மாமிசத்தைக் கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார். "பேய்போலக் கத்திக் கொண்டிருக்கும் இவனிடமா நான் உபதேசம் பெறவேண்டும்?" என்று மருகினார்.
கசாப்புக்கடைக்காரர் துறவியைப் பார்த்து, "ஓ, அந்தப் பெண்மணி அனுப்பினாரா?" என்று விசாரித்தார். "வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன்" என்று சொன்னார். மீண்டும் துறவிக்கு அதிர்ச்சி. பேசாமல் உட்கார்ந்துவிட்டார். அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டுக்கு அவரை அழைத்துப் போனார்.
அங்கே அவருக்கு இருக்கை தந்து உபசரித்தவர், சற்றுநேரம் காத்திருக்கச் சொன்னார். பின் தனது பெற்றோர்களை வணங்கி அவர்களுக்குப் பணிவிடை செய்யத் துவங்கினார். அவர்களைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, உணவு கொடுத்து அவர்கள் மனம் மகிழும்படிப் பணிவிடை செய்தார். பிறகே துறவியிடம் வந்தார்.
"சுவாமி, என்ன வகையில் தாங்களுக்கு நான் உதவவேண்டும்?" என்று கேட்டார். துறவி அவரிடம் உலகவாழ்க்கை பற்றியும், இறைவனைப் பற்றியும் பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு தருமவியாதன் விரிவுரையே நிகழ்த்தினார். அது "வியாதகீதா" என்று இந்தியாவின் உயரிய நூலாகப் போற்றப்படுகிறது. துறவிக்கு ஒரே வியப்பு. "இவ்வளவு ஞானமும் பண்பும் கொண்ட நீ ஏன் இந்தத் தாழ்மையான தோற்றத்தோடு இத்தகைய இழிதொழிலைச் செய்கிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அவன், "ஐயா, எந்த வேலையும் வெறுக்கத்தக்கதோ, இழிவானதோ அல்ல. என் பிறப்பு, சூழ்நிலை, இடம் இவற்றின் நிலையில் நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன். இருந்தாலும் பற்றற்ற நிலையில்தான் இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். என் பெற்றோருக்கான கடமைகளைச் சரியாகச் செய்கிறேன். வேறு எந்த யோகமும் நான் அறியேன். கடமையை இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்து வருவதால்தான் இந்த உள்ளொளியை அடைந்தேன்" என்று கூறினார். இதைக்கேட்ட துறவி தன் 12 வருடத் தவத்தில் பெற்றதைவிட மேம்பட்ட பலனை அடைந்தார்.
(இந்தக் கதை 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டது. வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, TamilNadu, Chennai.)
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |