பக்கவாதம்
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் இருந்து நரம்புகள் வழியே சமிக்ஞைகள் பரிமாறப்பட்டுத் தசைகள் இயங்குகின்றன. இவற்றில் கோளாறு உண்டானால் பக்கவாதம் ஏற்படுகிறது.

காரணங்கள்
பக்கவாதம் பல காரணங்களால் ஏற்படலாம். இவற்றில் முக்கியமானவை
* உயர்ரத்த அழுத்தம்
* நீரிழிவு
* ரத்தத்தில் அதிகக் கொழுப்பு
* இருதயத் துடிப்பு தாறுமாறாக இருத்தல்
* ரத்தக்கசிவு அல்லது ரத்தக்கட்டு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருத்தல்

பக்கவாதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ரத்தக்கசிவினால் ஏற்படுவது; ரத்தம் கட்டுவதால் ஏற்படுவது.

ரத்தக்கசிவு: உயர்ரத்த அழுத்தம் அல்லது தமனி விரிசல் (Aneurysm) என்ற காரணத்தால் ஏற்படலாம். இது மிகக்குறுகிய காலத்தில் மூளையின் செயல்பாட்டைத் தாக்கவல்லது. நம் உடலுறுப்பு ஒவ்வொன்றையும் மூளையின் அதற்கான சிறுபகுதி கட்டுப்படுத்துகிறது. இவை உடலின் இயக்கத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, மூளையின் ஒரு சிறுபகுதி பாதிக்கப்பட்டாலும் உடலின் பெரும்பகுதி ஒன்றின் இயக்கம் பாதிக்கப்படும்.

ரத்தக்கட்டு: நீரிழிவு அல்லது அதிகக்கொழுப்பினால் ரத்த நாளத்தின் உட்புறச் சுவரில் படலங்கள் ஏற்படும். இந்தப் படலம் சிறிது சிறிதாகப் பிரிந்து சென்று சிறிய ரத்த நாளங்களை முழுவதுமாக அடைக்கும்போது ரத்தக்கட்டு ஏற்படுகிறது. இது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்தடுத்து இரண்டு மூன்று அடைப்புகளும் ஏற்படலாம்.

அடைப்பு ஏற்பட்ட பகுதியில் ரத்தக்கசிவும் உண்டாகலாம். ரத்தக்கசிவு போன்ற பின்விளைவுகள் பக்கவாதம் ஏற்பட்ட முதல் ஒருமணி நேரத்திலும், முதல் 24 மணி நேரத்திலும் அதிகம் காணப்படும். முதல் ஒருமணி நேரத்தை 'The Golden Hour' என்று மருத்துவ உலகம் அழைக்கும். இந்த நேரத்துக்குள்
விரைந்து செயல்பட்டால் பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.

அறிகுறிகள்
வாய் கோணுதல்
பேச்சு குழறுதல்
கை, கால் செயல்பாடு பாதிக்கப்படுதல்
நடக்க முடியாமல் கீழே விழுதல்
மனக்குழப்பம்
நினைவு இழத்தல்

இந்த அறிகுறிகள் தற்காலிகமாகச் சிலமணி நேரத்திற்கோ அல்லது நிரந்தரமாகப் பலமணி நேரத்திற்கோ இருக்கலாம். ஆனால் மேலே கூறியதுபோல முதல் ஒருமணி நேரம் பொற்காலம்! உடனடி மருத்துவ உதவி தருவது அவசியம். இது பக்கவாதமாக இருக்கலாமோ என்ற ஐயம் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. ஆம்புலன்ஸ் மூலம் விரைவாகச் செல்வது நல்லது.

சிகிச்சை
பக்கவாதத்துக்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சையும் மாறுபடும். நோயாளியின் வயது, மருத்துவ வரலாறு, நோயின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து மருந்துகள் தரப்படும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். ரத்த ஓட்டம் சீராக இருக்க, ஆஸ்ப்ரின், ப்ளவிக்ஸ் போன்ற மருந்துகளும், ரத்தத்தை ஓடவைக்க குமுடின் அல்லது வார்ப்ரின் மருந்துகளும் தேவைப்படலாம். இவற்றை மருத்துவர் தீர்மானிப்பார். இவை யாவுமே மேலும் பக்கவாதம் வராமல் இருக்க உதவும் தீர்வுகள். ஏற்பட்ட பக்கவாதத்தை நீக்கிவிடச் சில மருந்துகளும், ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும் மருந்துகளும், அறுவை சிகிச்சைகளும் செய்யப்படலாம். இவ்வகை சிகிச்சைகளில் பின்விளைவுகள் இருப்பதால், அவை ஆலோசனைக்குப் பிறகே செய்யப்படும்.

பக்கவாதத்தின் விளைவுகளைச் சரிசெய்ய உடற்பயிற்சி மிகவும் முக்கியம். நடப்பது, உண்பது, குளிப்பது போன்ற அன்றாடச் செயல்களைச் செய்ய Physical Therapist, Occupational Therapist உதவுவார்கள். இவற்றை விடாது தன்னம்பிக்கையுடன் செய்ய வேண்டும். பக்கவாதத்தை முழுதாக நிவர்த்தி செய்ய பயிற்சியால் மட்டுமே முடியும்.

உணவு விழுங்குவதற்குக்கூடப் பயிற்சி தேவை. இல்லையென்றால் உணவு மூச்சுக்குழாய்க்குள் போகும் அபாயம் உள்ளது. இதனால் நிமோனியா வரலாம். பேசுவதற்கும் பயிற்சி தேவை. வாக்கர் வைத்து நடக்கவேண்டி வரலாம். இவர்களுக்கு கோபம், மன அழுத்தம் உருவாகலாம். மனவெறுப்பு தாக்கலாம். மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து இவற்றின் தீவிரம் மாறுபடும்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் பல வாரங்களுக்குச் சிகிச்சை தொடரவேண்டும். மனந்தளராமல் வேளாவேளைக்கு மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நோயாளியின் குடும்பத்தினரும் ஒத்துழைத்து, விடாது பயிற்சி செய்தால், செயல்பாடு முற்றிலும் திரும்ப வாய்ப்பு உண்டு.

இன்னொரு முறை பக்கவாதம் வராமல் இருக்க ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்புச்சத்து இவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com