சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம்
சேலம் மாவட்டம் கொல்லிமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கஞ்சமலை என மலைகளாலும் காவிரி, மணிமுத்தாறு என நதிகளாலும் சூழப்பெற்றது. கிருதயுகத்தில் தேவர்களுடைய பாவத்தைப் போக்கியதால் இத்தலத்திற்கு பாபநாசம் என்றும், எம்பெருமானுக்கு பாபநாசர் என்றும் பெயர். திரேதாயுகத்தில் காமதேனுப்பசு வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும், எம்பெருமானுக்கு பட்டீஸ்வரர் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம் என்றும், எம்பெருமானுக்கு நாகீசர் என்றும் பெயர். கலியுகத்தில் கிளியுருவம் கொண்ட சுகமுனிவர் பூசித்ததால் சுகவனம் என்றும் எம்பெருமானுக்கு சுகவனேஸ்வரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று. (தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், பட்டீஸ்வரம், நாகேஸ்வரம் போன்ற தலங்கள் வேறானவை.)

தேவர்கள், நான்கு வேதங்களை இத்தலத்தில் இறைவனை மரவடிவத்தில் வழிபட்டதால் சதுர்வேதமங்கலம் எனவும், சேரன் ஆண்ட நகரமாதலால் சேரம் எனவும், சேலை நெசவுக்குப் பெயர் போனதால் சேலம் எனவும், சேர, சோழ, பாண்டியர் மூவரும் சேர்ந்து நகரை அமைத்து வழிபட்டதால் மும்முடித்தலை வாயில் எனவும் பெயர்பெற்றது.

இறைவன் நாமம் சுகவனேஸ்வரர். இறைவிக்குச் சுவர்ணாம்பிகை, மரகதவல்லி, பச்சைவல்லி என்னும் திருப்பெயர்கள் விளங்குகின்றன. அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், ஔவையார் ஆகியோர் பாடியுள்ளனர். திருக்கோயிலுக்குள் உள்ள தீர்த்தக்கிணற்றுக்கு அமண்டூக தீர்த்தம் என்று பெயர். இக்கிணற்றுக்குள் தவளைகள் இருப்பதில்லை. இது வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. அவை பாபநாச தீர்த்தம், தேனு தீர்த்தம், மனுசாரனைத் தீர்த்தம், மானசீக தீர்த்தம் என்பவையாகும். தலவிருட்சம் பாதிரி மரம்.

ஒருகாலத்தில் பிரம்மதேவர் பிரம்மலோகத்தில் வீற்றிருந்தபோது தேவர்கள், தவசிகள் அவரது படைப்புத்திறனைப் புகழ்ந்தார்கள். அதற்கு பிரம்மன் என் படைப்பில் உலகில் ஒன்றைப்போல் மற்றொன்றில்லை. ஊர்வன, பறப்பன நீங்கலாக எனது படைப்பின் வல்லமை இத்தகையது என கூறினார். இதைக் கேட்ட சுகர் எனும் கிளிபோல் பேசும் தன்மையுடைய முனிவர் சரஸ்வதியிடம் சென்று பிரம்மதேவர் கூறியதைத் தெரிவித்தார். இதையறிந்த பிரம்மன், சுகமுனிவரிடம், நீ கிளியுருவம் பெற்ற திலோத்தமையின் பிள்ளை, சொன்னதைத் திரும்பச் சொல்லும் கிளியின் தன்மையைக் கொண்ட நீ கிளியாகக் கடவாய் எனச் சாபமிட்டார். முனிவர், பிரம்மனிடம் சாபம் எப்போது நீங்கும் எனக் கேட்க, பாபநாசத்தில் சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானைப் பூஜித்தால் நீங்கும் என்றார்.

முனிவர் கிளியுருவம் பெற்றுப் பலாமரத்தில் பிற கிளிகளுடன் சேர்ந்து காய், கனி, தினைக்கதிர்களைச் சேகரித்ததைக் கவனித்த வச்சிரகாந்தன் எனும் வேடன், கவண்கல்லால் கிளிகளை விரட்டினான். அவை பறந்து சென்று ஊர்ப்புற்றில் ஒளிந்து கொண்டன. கோபமடைந்த வேடன் மண்வெட்டியால் புற்றை வெட்டக் கிளிகள் சிவபெருமான் திருவடியை நினைத்து உயிரைவிட்டன. ராஜகிளி சிவபெருமானின் முடிமேல் சிறகுகளை விரித்துச் சாதித்தது. வேடன் ராஜகிளியையும் வெட்டக் கிளி இறந்துவிட்டது. சிவபெருமான் திருமுடியிலும் வெட்டுப்பட்டு ரத்தவெள்ளம் பெருகியது. இதைக்கண்ட வேடன், மனங்கலங்கி தன்னை வாளால் மாய்த்துக்கொண்டு சிவபெருமான் திருவடியடைந்தான். கிளிக்கூட்டம் கைலாயத்தை அடைந்தன. ராஜகிளி பிரம்மனால் ஏற்பட்ட சாபம் நீங்கி, உடலைப் பெற்று முனிவராகி சிவனைத் துதிக்க மகிழ்ந்த சிவபெருமான் ஏதாவது வரம் கேட்கும்படி முனிவரிடம் சொல்ல, முனிவர் எப்பேர்பட்ட துன்பங்கள் வரினும், உன் திருவடிகளையே கதியாக நான் அடையவேண்டும் என்று வேண்டினார். இறைவன் முனிவருக்கு அருள்செய்ய, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இதனால் இத்தலத்துக்குச் சுகவனம், கிளிவனம் என்ற பெயரும் இறைவனுக்கு கிளிவனநாதர், சுகவனேஸ்வரர் என்ற பெயரும் கலியுகத்தில் விளங்குகின்றன.

சேலம் நகருக்கு நடுவில் சுகவனேஸ்வரர் சுவாமி கோயில் கிழக்குமுகமாக அமைந்துள்ளது. கோயில் செல்லும் வாயில் தெற்குமுகமாக அமைந்துள்ளது. கோயிலின்முன் திருநந்தி மண்டபம், முன்மண்டபம், அடுத்து கோபுரவாயில், முன்மண்டபத்தின் வடபாகத்தில் வாகன மண்டபம், கோயிலின் வாயிலின்மேல் மூன்று கண்களை உடைய ராஜகோபுரம், மேற்புற வாயிலில் மூன்று நிலைகளுள்ள கோபுரம் ஆகியவை உள்ளன. உள்ளே சென்றால் பிரகாரத்தில் அறுபத்து மூவர் சன்னிதி, சமயக் குரவர்கள் நால்வர் சன்னிதி, சப்தகன்னியர் சன்னிதி, மேற்குப் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், இரட்டை விநாயகர், ஐயப்பன், தக்ஷிணாமூர்த்தி, மேற்புற வரிசையில் கங்காள மூர்த்தி, காசி விசுவநாதர், பஞ்சபூத லிங்கங்கள், சரஸ்வதி, கஜலக்ஷ்மி, ஜேஷ்டா தேவி திருச்சன்னதிகள், வடமேற்கு மூலையில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் திருக்கோயில், வெளிச்சுவர்களில் ஆறுபடை வீடு திருமூர்த்திச் சிற்பங்கள் ஆகியவற்றைக் காணலாம்.

வடக்கு பிரகாரத்தில் சண்டேஸ்வரர், சுவர்ண துர்கா, வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபம், அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறையில் மூலவர் சுகவனேஸ்வரர் லிங்கவுருவில் எழுந்தருளி உள்ளார். இவர் சுயம்புலிங்கம். வேடனால் வெட்டப்பட்ட காயம் உள்ளது. மகாமண்டபத்தின் கீழ்க்கோபுர வாயிலை அடுத்து அன்னை சுவர்ணாம்பிகை தனிச் சன்னிதியில் கருணையுடன் காட்சி தருகின்றார். சன்னிதி அருகில் கொடிமரம், நந்தி உள்ளது. மூலவருக்கு வெளியே உற்சவ மூர்த்திகள் திருச்சன்னதிகள், நடராஜர் சன்னிதி, மகா மண்டபத்தில் பள்ளியறை, நவக்கிரகங்கள், நாகர், விகடசக்கர விநாயகர், வேதவியாசர், சிவபக்த ஆஞ்சநேயர், சுகபிரம்மம் முதலியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன.

சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் பதிகம்பாடிச் சிவபெருமானை வழிபட்டார். அப்போது சிவன் ஆணைப்படி சிவகணங்கள் சுந்தரரை வெள்ளையானையில் ஏற்றிக்கொண்டு கைலாயம் சென்றனர். சேரமன்னன் சேரமான் சுகவனேஸ்வரரை வழிபட்டு வந்தார். சுந்தரர் கைலாயம் சென்றதை அறிந்து தமது குதிரையில் ஏறி ஐந்தெழுத்து மந்திரத்தை அதன் காதில் ஓத, குதிரை வெள்ளையானைக்கு முன்பே கைலாயம் சென்றது. இதை அறிந்த ஔவையார், ஆகமவிதிப்படி வலம்புரி விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து துதிக்க, விநாயகர் தமது துதிக்கையில் ஔவையாரை ஏந்திக் கயிலையில் அமர்த்தினார். இன்றுமுதல் வலம்புரி கணேசர் என்று வழங்கும்படி என்னுடைய இடதுகரத்தில் வலம்புரிச் சங்கு விளங்கும் என்றார். ஔவையார் கைலாயம் சேர்ந்தபிறகு சுந்தரரும் சேரமானும் கைலாயம் வந்தடைந்தார்கள். தமக்கு முன்பே வந்துசேர்ந்த ஔவையாரைப் பார்த்து வியப்படைந்தனர். சேரமான் ஔவையாரைப் பார்த்து எனக்கு முன்பே கயிலை வந்தாய், உனக்கு வலிமையான துணை எது என்று கேட்க, ஔவையார், குதிரையில் வந்த உனக்கும் காதவழி, தனித்து வந்த எனக்கும் காதவழி என்று கூறினார். அடியார்கள் எண்ணியதை எளிதில் நிறைவேற்றும் விநாயகர், ஔவையைக் கைலாயம் சேர்த்ததால் ஔவையும் சிவபெருமானை வணங்கிப் பேரின்பம் பெற்றார்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சுந்தரபாண்டிய மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலில் பழமை வாய்ந்த சுமார் 15 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அழகான சிற்பங்கள் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் காலத்தில் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. மாதந்தோறும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடக்கின்றன. வைகாசி மாதத்தில் பெரிய திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. பண்டைக் காலக் கற்றளிக்கோயில் என்ற சிறப்புப்பெயர் பெற்ற இவ்வாலயம் இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்டது. கோயிலின் சார்பில் அன்னதானம், கருணை இல்லம், சமய நூலகம் என பல நற்பணிகள் நடக்கின்றன.

சீதா துரைராஜ்,
ஒஹையோ

© TamilOnline.com