தன்வி ஜெயராமன்
"பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் பேர் முதலாண்டுக் கல்லூரி மாணவியர்" என்று தொடங்குகிறார் அந்த இளம்பெண். அரங்கத்திலுள்ளோர் சற்றே அதிர்ந்து பின் நிமிர்ந்து உட்காருகிறார்கள். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி தன்வி ஜெயராமன் TEDx உரையின் தொடக்கம் இது. "இன்றுமுதல் எனக்கான எந்த முடிவையும் எடுக்கும் முழுஉரிமை எனக்கு மட்டுமே உள்ளது என்ற சுதந்திர உணர்வோடு தன் கனவுக்கல்லூரியில் கால்பதிக்கும் உங்கள் செல்ல மகள் இதை அறிவாளா? கல்வியும் கலைகளும் கற்று, சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் பெண்ணினத்தின் ஒரு துளியாக அவள் போகிறாள் என்ற எதிர்பார்ப்போடும், பெண்ணைப் பிரியும் கவலையோடும் கையசைத்துச் செல்லும் பெற்றோர் இதை அறிவார்களா? 'உங்கள் மகள்களுக்கு நன்றி' என்று நமக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, பொறியாளர்களையும், மருத்துவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும், விஞ்ஞானிகளையும், தொழிலதிபர்களையும் தரும் பல்கலைக்கழகங்கள்தாம், தமக்குள்ளே இந்தப் பெரிய அபாயத்தையும் ஒளித்து வைத்திருக்கின்றன. இந்தப் பூனைக்கு மணி கட்டுவது யார்?

Click Here Enlarge"நாம்தான்" என்கிறார் தன்வி. தன்னை உறுத்திய இந்தப் புள்ளிவிவரத்திற்குள் தானோ, சகமாணவியரோ வந்துவிடாமல் இருக்க, கடந்த 2 வருடங்களாக அவர் ஆராய்ச்சி செய்தார். வருமுன் காப்பதுதான் இதற்குத் ஒரே வழி என்று புரிந்துகொண்டார். முற்காப்பு வழிகளோடு, ஒருவேளை இதற்குப் பலியானால் மீண்டுவரும் வழிகளையும் கற்பிக்க முடிவுசெய்தார். வெறும் பேச்சோடு நிறுத்தவில்லை. பலாத்காரத்தை தூண்டுதல், பாதிக்கப்பட்டோரை அணுகுதல், நடந்ததை ஏற்றல், உதவுதல் போன்ற பல்வேறு காட்சிகளைக் கொண்ட ஒரு நாடகத்தைத் தனது கல்லூரியில் நடத்தி, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வது எப்படி என்று பயிற்றுவித்தார். முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவியர் பார்த்த இந்த நாடகப் பொதுமன்றத்தில், அனைவரும் 3 அருமையான வழிகளைக் கற்றனர்.

1. பெண்களின் உடைபற்றிய ஆபாச வர்ணனை செய்வோர், ஆண் பெண் உறவு பற்றிக் கொச்சையாகப் பேசுவோர் முன் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. இருந்தால், அந்தக் கலாசாரத்தை நாம் ஏற்கிறோம் என்பதோடு, அதைக் கொண்டாடுவதாகவும் பொருளாகிவிடும். ஏனென்றால் பாலியல் பலாத்காரம் என்பது ஒரே ஒரு நாளில் நடந்துவிடுவதல்ல.

2. பாதிக்கப்பட்டோர் நம்மிடம் கூறுவதை மட்டுமல்லாமல், அவர்களின் மனதில் ஓடும் எண்ணங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது முக்கியம். இதற்கு, நண்பர்களோடும் சகமாணவர்களோடும் மனரீதியிலான ஆரோக்கியமான பிணைப்பு அவசியம்.

3. தன் உடல்மீதான கட்டுப்பாட்டைத் தான் முழுமையாக இழந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர் நினைக்கலாம். அந்தச் சமயத்தில் எல்லாக் கவலைகளுக்கும் ஆறுதல் சொல்வதாக எண்ணி கட்டியணைத்துப் பேசுவது தவறு. பயன்தராது.

Click Here Enlarge"பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 95 சதவிகித மாணவியர் தமது நண்பர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்கள், சுற்றியிருப்பவர்கள் ஆகியோரிடம்தான் நடந்ததைக் கூறுவார்கள். ஐந்தில் ஒரு மாணவி இந்தக் கொடுமைக்கு ஆளாகிறார் என்னும்போது, நம் மகளை மனதில்வைத்து யோசித்தால், இதைத் தடுக்கும் வழி நம் கையில், நம் எல்லோரின் கைகளிலும்தான் உள்ளது என்பது புரியும்" உறுதிபடக் கூறுகிறார் தன்வி.

பாலியல் வன்முறைக்கு ஆளாவோரில் 54 சதவீதம் முதலாண்டுக் கல்லூரி மாணவியர் என்பது நிச்சயம் அதிரவைக்கும் உண்மைதான். இதைப்பற்றி மௌனம் சாதிப்பதால் பயனில்லை. வீட்டில் பேசவேண்டும். ஆதரவுக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழ்ச் சங்கங்களும் இதர தன்னார்வ அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெருப்புக்கோழியைப் போலத் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு, 'நமக்கு இது நடக்காது' என்று நினைப்பது மூடத்தனம்.

இந்த விழியத்தில் நமது கண்களைத் திறக்கிறார் தன்வி ஜெயராமன். கண்டிப்பாகப் பாருங்கள்



தமிழில்: ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com