காந்தி கண்ணதாசன்
உள்ளே நுழைந்ததுமே இரு செல்லப் பிராணிகள் உரக்கக் குரைத்து நம் வருகையை அறிவிக்கின்றன. "வாங்க.. வாங்க" என்று புன்னகை தவழ வரவேற்றுத் தன் அலுவலக அறைக்கு அழைத்துச் செல்கிறார் காந்தி கண்ணதாசன். மனைவியருடன் கண்ணதாசன் அமர்ந்திருக்கும் படம் நம்மை வரவேற்கிறது. கவியரசரின் மூச்சுக்காற்று உலாவிய இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்ற நினைவே பிரமிப்பைத் தருகிறது. அறையின் ஒருபுறம் அப்துல் கலாம். மறுபுறம் தெய்வத் திருவுருவங்கள், பிற புகைப்படங்கள். தமிழின் முன்னணிப் பதிப்பாளர்களுள் ஒருவரும் மிக அதிக அளவில் சுயமுன்னேற்ற மொழிபெயர்ப்பு நூல்களைத் தந்தவருமான காந்தி கண்ணதாசன் நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்...

*****


தென்றல்: வழக்குரைஞரான நீங்கள் பதிப்பகத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?
காந்தி கண்ணதாசன்: 1977ல் நான் சட்டக்கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஷிஃப்ட் முறை வகுப்புகள். நிறையநேரம் கிடைத்தது. சிலகாலம் சினிமா, டிராமா, பீச் என்று சுற்றினேன். ஒருநாள், 'பி.ஏ. வரை அப்பாவிடம் காசு வாங்கிப் படித்தோம். இனிமேலும் அப்படிச் செய்வது சரியல்ல' என்று தோன்றியது. அப்பாவிடம் சென்று, "ஏதாவது பிசினஸ் செய்துகொண்டே படிக்கிறேன்" என்றேன். அப்பா 'சரி' என்றார். ஏற்றுமதி பிசினஸ் செய்தேன். அது சரியாகவில்லை. மீண்டும் அப்பாவிடம் நிலைமையைச் சொன்னேன். அவருடன் ஒரு நண்பன் போல்தான் பழகுவது வழக்கம். அப்பா உடனே, "பதிப்பகம் ஆரம்பிக்கலாம்" என்றார். எனக்கு அதில் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை. அது பெரிதாக லாபம்தராத தொழில் என்பது என் எண்ணம். ஆனால் அப்பா எடுத்துச்சொல்லி, அதற்கு 'கீதா சமாஜம்' என்று பெயர் சூட்டினார். "நீ அர்த்தமுள்ள இந்துமதத்தைப் போடு; நான் தொடர்ந்து எழுதுகிறேன்" என்றார். "நாவல்கள் போடலாமே" என்றேன் நான். ஆனால் "நீ இதைப் போடு; நன்றாக வரும்" என்று அப்பா சொன்னார். அவர் கணக்கு ஜெயித்தது. அர்த்தமுள்ள இந்துமதம் நான்காம் பாகத்தை புத்தகமாகக் கொண்டுவந்தோம். 50 ஆயிரம் பிரதிகள் அச்சிட்டோம். பதினைந்து நாட்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. மீண்டும் 50 ஆயிரம் பிரதிகள் அச்சிட அதுவும் ஒரு மாதத்தில் விற்றுத் தீர்ந்தது.

அப்போதுதான் அப்பாவின் தீர்க்கதரிசனம் புரிந்தது. ஏனென்றால் 1977ல், ஒரு லட்சம் பிரதி என்பது மிகப்பெரிய விஷயம். அப்பா பத்திரிகைத் தொழிலில் அனுபவம் மிக்கவர் என்பதால் ஃப்ரூப் பார்ப்பது, அட்டைப்படம், உள்ளடக்கம், நேர்த்தியாக வெளியிடுவது என்று எல்லா நுணுக்கங்களையும் எனக்குக் கற்றுத்தந்தார். அர்த்தமுள்ள இந்துமதத்தின் பத்துப் பாகங்களையும் அவர்தான் சீனி சோமுவிடம் ஆலோசனை சொல்லி வடிவமைத்தார். கிட்டத்தட்ட 70 பதிப்புகள் வந்து, 38 வருடங்கள் ஆன பின்னரும் இன்றைக்கும் அந்த வடிவமைப்பை மாற்றாமல் இருக்கிறோம். காரணம், புத்தகத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது அட்டையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஈடுபாட்டோடு அப்பா உருவாக்கினார்.

பதிப்பகம் நல்ல முறையில் நடந்து, என் கல்லூரிக் கட்டணம் மட்டுமல்ல; தம்பியின் கட்டணத்தையும் என்னால் கட்டமுடிந்தது. அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம். பாண்டிபஜாரில் ரிக்‌ஷாக்காரர்கள் ஒன்றாக உட்கார்ந்து அர்த்தமுள்ள இந்துமதத்தை ஒருவர் படிக்க, மற்றவர்கள் கேட்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். படித்தவர்களிடம் மட்டுமல்ல, பாமரர்களிடமும் அது போய்ச்சேர்ந்தது. 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்று தத்துவம் சொன்ன அப்பாவின் உயரம் தெரிந்தது. அதுவரை ஒரு தந்தையாக மட்டுமே அப்பாவைப் பார்த்து வந்த எனக்கு, கண்ணதாசன் தமிழர்கள் மதிக்கக்கூடிய, ஒரு மிகப்பெரிய மனிதர் என்பது புரிந்தது. ஆனால் திடீரென எல்லாமே தலைகீழாகி விட்டது.



கே: என்ன ஆயிற்று?
ப: 1981 அக்டோபர் 17ம் தேதி அப்பா திடீரென மறைந்துவிட்டார். ஒரு தந்தையாக அல்லாமல் நல்ல நண்பராகத்தான் எங்களுடன் அவர் பழகுவார். எந்தக் குறையும், கஷ்டமும் தெரியாதவர்களாகவே எங்களை வளர்த்தார். நாங்கள் மொத்தம் பதினான்கு குழந்தைகள்; வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவர் திடீரென மறைவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அப்படியே இடிந்து போய்விட்டோம். 12 லட்ச ரூபாய் கடன் இருந்தது. அப்பாவிடம் அவ்வப்போது நான் கேட்பேன், "எவ்வளவு கடன் இருக்கிறது?" என்று. "அது ஒரு 10, 12 லட்சம் இருக்கும். ஒரு சினிமா எடுத்தா அடைச்சிடலாம். இல்லன்னா ஒரு மாசம் ஃபுல்லா உட்கார்ந்து பாட்டு எழுதினா முடிஞ்சது" என்பார். இப்படி நம்பிக்கை கொடுத்தவர் திடீரென மறைந்த அதிர்ச்சியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

12 லட்ச ரூபாய் கடனில் எங்கள் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த ஒருவரே 8 லட்ச ரூபாய் கொடுத்திருந்தார். அவர் எங்கள் குடும்பத்தின்மீது 15 கேஸ்கள் போட்டு அலைக்கழித்தார். மீதி 4 லட்ச ரூபாய் கடனை ஒரு மார்வாடி கொடுத்திருந்தார். அவர் ஒருநாள் என் தம்பி அண்ணாதுரையை அழைத்து, அவரிடம் அப்பா கொடுத்த செக், புரோ நோட்டு என எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தார். என் தம்பி, "இப்போதிருக்கும் நிலைமையில் எங்களால் கடனை அடைக்க முடியாது. ஏன் இதைத் திருப்பிக் கொடுக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "தம்பி, 69-70லிருந்து உங்க அப்பாவுக்கு நான் ஃபைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும்போதெல்லாம் நான் பணம் கொடுத்திருக்கிறேன். அவரும் தன்னிடம் பணம் வந்தபோதெல்லாம் அடைத்திருக்கிறார், வட்டி கட்டியிருக்கிறார். உங்க அப்பாவால நானும் நிறைய சம்பாதித்திருக்கிறேன். நானும் உங்க அப்பாவும் சகோதரர்கள் மாதிரிதான் பழகினோம். பணத்துக்காக இப்ப உங்க நிலைமையை வச்சு நான் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நான் நன்றாக இருக்கமாட்டேன். என் குடும்பமும் நன்றாக இருக்காது. நீங்கள் எதுவும் எனக்குத் திருப்பித் தரவேண்டாம்" என்று சொல்லிவிட்டார். ஆனால் மற்ற கடன்களை அடைக்கவேண்டி இருந்தது. அதற்காக நான் கடுமையாக உழைக்க நேர்ந்தது. இதற்காக வேலைக்குப் போனேன். சட்டம் படித்த நான் ஹெச்.எம்.வி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். உண்மையில் அது எனக்கு நல்லதொரு வாய்ப்பானது.

கே: எப்படி?
ப: எத்தனை முறை விழுந்தோம் என்பது பெரிதில்லை; எத்தனை முறை எழுந்தோம் என்பதுதான் முக்கியம் என்று சொல்வார்கள். அப்படி நான் கீழே விழுந்து எழுந்தபோது எனக்குக் கிடைத்த வாய்ப்பும் இறைவனின் அருளால் நல்லதாகவே அமைந்தது. ஹெச்.எம்.வி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததால்தான் எம்.எஸ். அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. பல பிரபல பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகையாளர்களின் நட்பு ஏற்பட்டது. நான் வழக்கறிஞராக இருந்திருந்தால் வெறும் வழக்கறிஞராகத்தான் இருந்திருப்பேன். பலருக்கும் கண்ணதாசனின் மகன் என்று ஆரம்பத்தில் என்மீது ஓர் இரக்கம் இருந்தது. அதுவே பின்னர் மட்டற்ற அன்பாக மாறியது.

அப்பா இருந்தபோது எங்கள் வீட்டில் 14 கார்கள் இருந்தன. அப்பாவின் மறைவுக்குப் பிறகு ஓடாத ஒரு காரும், என் தம்பிகளின் ஜாவா மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும்தான் எங்கள் உடைமை. பலவிதமான கஷ்டங்களுடன் வாழ்க்கை நடந்தது. பதிப்பகத்திலும் என் கவனம் இல்லாமல் இருந்தது. அப்போதுதான் ஒருநாள், 'ஏன் வேலை பார்த்துக்கொண்டே பதிப்பகத்தை நடத்தக்கூடாது?' என்று தோன்றியது. கண்ணதாசன் பதிப்பகம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் 1982 முதல் அந்தப் பெயரில் புத்தகங்களை வெளியிட்டேன். அதுதான் கண்ணதாசன் பதிப்பகத்தின் ஆரம்பம்.



கே: தமிழில் சுயமுன்னேற்ற மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் கொண்டுவந்தது நீங்கள்தான். அதுபற்றிச் சொல்லுங்கள்...
ப: மீண்டும் பதிப்பகம் வந்தாலும் எனக்குப் பல சிக்கல்கள். கண்ணதாசனின் புத்தகங்கள் என்ற தளம் என்னிடம் இருந்தாலும் சில புத்தக உரிமைகள் மட்டுமே என்னிடம் இருந்தன. தந்தையாரின் பல புத்தகங்களின் உரிமை வானதியிடம் இருந்தது. அவற்றின் உரிமையை என்னால் வாங்கமுடியாத நிலை. அதனால் ஆரம்பத்தில் நானும் பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள் என்றுதான் வெளியிட்டேன். பொதுநூலக ஆணைக்காக ஒவ்வொரு அலுவலகத்தின் வாசலிலும் சென்று காத்திருக்க வேண்டியிருந்தது.

அப்போதுதான் வேறுவகைப் புத்தகங்களைக் கொண்டுவரலாமே என்று தோன்றியது. நான் ஹிக்கின்பாதம்ஸ் சென்று ஆங்கிலத்தில் சுயமுன்னேற்றப் புத்தகங்களை வாங்கிப் படித்துத்தான் எனது எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உயர்த்திக்கொண்டேன். அவை பிறருக்கும் உதவியாக இருக்குமே என்று நினைத்தேன். நான் படித்த ஆங்கிலப் புத்தகங்களின் உரிமைகளை வாங்கித் தமிழில் பதிப்பிக்க முடிவுசெய்தேன். அப்போது இமெயில் எல்லாம் இல்லை. ஆகவே வெளிநாட்டு எழுத்தாளர்களிடம் ஏர்மெயில் மூலம் தொடர்பு கொண்டு தமிழில் அவற்றைப் பதிக்கும் உரிமையைப் பெற்றேன். வெளிநாட்டுக்குப் பணம் அனுப்ப ரிசர்வ் வங்கியின் அனுமதி என்று பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி முதல் புத்தகத்தை வெளிக்கொண்டுவந்தேன். அது காப்மேயர் எழுதிய 'எண்ணங்களை மேம்படுத்துங்கள்'.

இதே காலகட்டத்தில் குமுதத்தில் காப்மேயரின் "நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?" என்ற தொடர் வெளியானது. ஐந்து லட்சம் வாசகர்களிடம் காப்மேயரைக் கொண்டு சேர்த்த பெருமை குமுதத்திற்கு உண்டு. அவருடைய பிற நூல்கள் எங்கு கிடைக்கும் என்று வாசகர்கள் தேடியபோது, குமுதமே காப்மேயரின் பிற நூல்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில் கிடைக்கும் என்று அறிவித்தது. எங்கள் நூல்கள் நிறைய விற்க ஆரம்பித்தன. தொடர்ந்து பல ஆங்கில நூல்களை உரிமை வாங்கி, மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கினேன். அது இன்றைக்கும் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கே: அப்துல் கலாமின் 'அக்னிச் சிறகுகள்' வெளியிட்ட அனுபவம் குறித்து...
ப: ஒருமுறை லேண்ட்மார்க் சென்றபோது அப்துல்கலாம் அவர்களின் சுயசரிதையான 'Wings of fire' நூலை வாங்கிவந்தேன். படிக்கப் படிக்க அதிலுள்ள உண்மை, நேர்மை, கலாமின் எளிமைத்தன்மை என்னைக் கவர்ந்தன. இதைத் தமிழில் கொண்டுவந்தால் பலருக்கு உந்துசக்தியாக இருக்குமே என்று நினைத்தேன். ஹைதராபாதில் இருந்த அதன் பதிப்பகத்திற்கு தமிழ் மொழிமாற்ற உரிமைகோரி விண்ணப்பித்தேன். கிடைத்தது. திரு. மு. சிவலிங்கம் அவர்களைக் கொண்டு தமிழில் பெயர்த்து, ஒரு பிரதியை திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். கலாம் அப்போது டில்லி விஞ்ஞான் பவனில் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மாலை நான் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு ஃபோன் வந்தது. யாரென்று பார்த்தால் கலாமின் உதவியாளர் ஷெர்டன் என்பவர் பேசினார். கலாம் பேச விரும்புகிறார் என்று சொன்னார். எனக்குப் பதட்டமாகிவிட்டது. காரை ஓரத்தில் நிறுத்தி படபடப்புடன் காத்திருந்தேன். அவருடைய சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்து அவருக்கு அனுப்பியிருக்கிறேன்; அவர் என்ன சொல்வாரோ, அவருக்குப் பிடித்திருக்குமோ, திட்டுவாரோ என்றெல்லாம் மனதில் எண்ணங்கள். கலாம் பேசினார். என்னை அவர் பேசவே விடவில்லை. அப்படியே பாராட்டித் தள்ளிவிட்டார். "அற்புதமான மொழிபெயர்ப்பு. நான் ஆங்கிலத்தில் எழுதியதைவிட இது மிக நன்றாக வந்திருக்கிறது. நானே தமிழில் எழுதியிருந்தால்கூட இப்படி வந்திருக்குமா என்று தெரியவில்லை. பிரமாதம்" என்றெல்லாம் சொன்னார். எனக்குத் தெம்பு வந்தது. சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம்; சரியான பணியை, சரியான நேரத்தில் செய்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது.

இன்றுவரை 'அக்னிச் சிறகுகள்' ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. கண்ணதாசன் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் இரண்டு நூல்கள்: ஒன்று, கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்'. மற்றொன்று, அப்துல் கலாமின் 'அக்னிச்சிறகுகள்'.

கே: பதிப்புத்துறையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?...
ப: எங்களைப் பின்பற்றி பலரும் இன்றைக்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்வது ஒருவிதத்தில் சவால்தான். குறிப்பாக, தமிழில், நாங்கள் வெளியிட்டு வரும் நூல்களால் உண்டாகியிருக்கும் விற்பனைச் சந்தையை அறிந்துகொண்டு, அதேபோன்று மொழிமாற்ற நூல்களை வெளியிடும் வட இந்திய நிறுவனங்கள் சவாலாக இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்கள் தாய்மொழியில் இவ்வகை நூல்கள் ஒன்றைக்கூட வெளியிடவில்லை. காரணம், அவற்றுக்கு அங்கே சந்தை இல்லை என்பதுதான். இவர்களை எதிர்கொள்வதையும், வாசகர்களின் தேவை அறிந்து வெளியிடுவதையும் நாங்கள் சவாலாகக் கருதுகிறோம்.

வாசகன் தேடுவது இன்றைக்கு அமைதியைத்தான். அதை ஆன்மீகத்திலும், தத்துவத்திலும் அவன் தேடிக் கொண்டிருக்கிறான். அவர்களுக்காகவே அர்த்தமுள்ள இந்துமதத்தை ஒரே தொகுப்பாக கொண்டுவந்தோம். அடுத்து சுவாமி ராமா, பால் பிரண்டன், ஓஷோ என்று நிறையக் கொண்டு வந்திருக்கிறோம். இதில் எங்களுடன் போட்டிபோட வட இந்திய நிறுவனங்களால் இயலவில்லை. காரணம், தமிழன் என்ன சிந்திப்பான், அவனுக்கு என்ன தேவை என்பது தமிழனான எனக்குத்தான் தெரியும். அவர்களால் அதை உணர்ந்து நூல்களைக் கொண்டுவர முடியவில்லை. அப்படிக் கொண்டுவந்த சில நூல்களையும் விற்பனை செய்யமுடியவில்லை.

கே: பபாஸி (The Book Sellers and Publishers Association of South India - BAPASI) தலைவராக இருந்தபோது நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்து...
ப: அதை உருவாக்கி, பல ஆண்டுகாலம் தொடர்ந்து நடத்தியவர்கள் மேத்யூஸ், கே. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள். அதில் நான் ஜாயிண்ட் செக்ரட்டரி, புத்தகச்சந்தைக் கமிட்டி மெம்பர் என பல பொறுப்புகளில் இருந்திருக்கிறேனே தவிர ஆக்டிவாக எதிலும் இல்லை. பின்னால் தலைவராக வந்ததை ஒரு விபத்து என்றுதான் சொல்லவேண்டும். 23வது புத்தகச்சந்தை நடந்தபோது சோப்ரா (ஜெய்கோ பப்ளிகேஷன்ஸ்) செயலாளர், நான் வைஸ் பிரசிடென்ட். அப்போது புத்தகச்சந்தை பற்றி நாளிதழ்களில் விளம்பரம் செய்யக்கூடப் பணமில்லாத நிலை. அதனால் உதவி வேண்டி நல்லி குப்புசாமிச் செட்டியாரைச் சென்று பார்த்தோம். அவரும் விளம்பரச் செலவை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பல உதவிகளைச் செய்தார். அதுமுதல் பலரும் என்னைத் தலைவராகப் பொறுப்பேற்று நடத்துமாறு சொன்னார்கள். பதிப்பகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நான் இருந்ததால் மறுத்தேன். ஆனால் துணைத்தலைவராகப் பணிகளை முறையாகச் செய்துகொண்டிருந்தேன். 25வது புத்தகச்சந்தையைத் துவக்கி வைக்க அப்துல் கலாம் அவர்களிடம் வேண்டிக்கொண்டேன். அவரும் வந்தார். அதற்கு அடுத்த வருடம் அவர் ஜனாதிபதி ஆகிவிட்டார்.



தொடர்ந்து நண்பர்களின் வலியுறுத்தலால் தலைவர் பொறுப்பேற்றேன். அந்த ஆண்டு புத்தகச்சந்தையை அப்போதைய சபாநாயகர் திரு. காளிமுத்து அவர்கள் துவக்கி வைத்தார். நல்லி செட்டியார் உள்ளே வந்ததுமுதல் புத்தகச் சந்தைக்கு ஏறுமுகம்தான். நல்ல வளர்ச்சி. பலர் புதிதாகப் பங்கேற்க விண்ணப்பித்தார்கள். காயிதே மில்லத் கல்லூரியில் இடம்போதவில்லை. அதனால் அடுத்த ஆண்டு பெரிய இடத்தில் நடத்த முடிவு செய்தோம். பல இடங்களையும் பார்த்து, இறுதியில் செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடத்த முடிவு செய்தோம். தென்சென்னையில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள். மத்திய சென்னைப் பகுதியில் இந்த இடத்திற்கு மக்கள் வரமாட்டார்கள் என்று சிலர் சொன்னார்கள். எனக்கும் கொஞ்சம் அச்சம்தான். இருந்தாலும் துணிவுடன் அங்கு 450க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்தோம். குழந்தைப் புத்தகங்கள் போடும் பல பதிப்பாளர்களுக்கு இடமளித்தோம். புத்தகச்சந்தை ஆண்களுக்கானது மட்டுமல்ல; பெண்களும், குழந்தைகளும்கூட குடும்பத்துடன் வந்து புத்தகங்கள் வாங்கிச் செல்ல வேண்டிய நிகழ்வு என்ற மனநிலையை இதழ்கள், விளம்பரங்கள், ஊடகங்கள் மூலம் உருவாக்கினோம். அதற்கு வெற்றி கிடைத்தது.

கலைஞர் அப்போது முதல்வராக இருந்தார். அவரை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கக் கேட்டு அணுகினோம். ஒப்புக்கொண்டார். அதிகச்செலவு செய்யாமலேயே பரவலாக மக்களுக்குப் புத்தகச்சந்தை பற்றித் தெரியவந்தது. கலைஞர் வந்து, துவக்கி வைத்ததுடன் பபாஸிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும் கொடுத்தார். அதுமுதல் புத்தகச் சந்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. அதுவரை ஆறாவது, ஏழாவதாக இருந்த சென்னை புத்தகக் காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கும் கல்கத்தா புத்தகக் காட்சியை அடுத்து இரண்டாமிடத்திற்கு வந்தது. இதை இறைவனின் கருணையாகத்தான் நான் பார்க்கிறேன். இதில் எங்கள் பங்கு திட்டமிடலும், உழைப்பும்தான். அவற்றை வெற்றிகரமாக ஆக்கித்தருவது இறைவனின் அருள்தான்.

கே: எழுத்தாளர்களின் 'ராயல்டி' என்பது அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் விஷயமாய் உள்ளது. உங்கள் கருத்தென்ன?
ப: நான் ஒரு எழுத்தாளரின் மகன். என் தந்தையும் "கண்ணதாசன்", "தென்றல்", "இனமுழக்கம்" என்று பல பத்திரிகைகளை நடத்தியிருக்கிறார். எழுத்தாளர்களின் நிலை என்னவென்பது எனக்குத் தெரியும். பதிப்பகத் தொழிலைப் பொறுத்தவரை நாம் நேர்மையாக இருப்பதோடு, அப்படி இருக்கிறோம் என்பதை எழுத்தாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவதும் அவசியம். புத்தக வியாபாரிகளுக்கு 30%-35% கழிவு கொடுக்கும்போது 10%-15% எழுத்தாளர்களுக்குக் கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது? எழுத்தாளர் எழுதித் தருவதால்தானே இவர்கள் புத்தகம் போடுகிறார்கள்; விற்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். எழுத்தாளன் இல்லாவிட்டால் இவர்கள் இல்லையே! அப்படியிருக்க அவனை ஏமாற்றலாமா? அது அறமாகுமா? இது ஒவ்வொருவரும் மனச்சாட்சியோடு சிந்திக்க வேண்டிய விஷயம். மற்றபடி ராயல்டி விவகாரத்தில் எங்களிடம் பிரச்சனைகள் எதுவும் வராது. காரணம் எல்லா புத்தகங்களுமே எத்தனைமுறை அச்சிடப்பட்டது, எவ்வளவு அச்சிடப்பட்டது, எங்கே எத்தனை பிரதி சென்றிருக்கிறது, எத்தனை விற்றிருக்கிறது, கைவசம் எத்தனை பிரதி இருக்கின்றது என்பதெல்லாம் கணினியில் அப்டுடேட் ஆக வைத்திருக்கிறோம். அதை எப்போது வேண்டுமானாலும் எங்கள் எழுத்தாளர்கள் வந்து பார்க்கலாம். சந்தேகம் இருந்தால் எவ்வளவு ஸ்டாக் கையில் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கலாம். இப்படி இருப்பதால் 'ராயல்டி' பிரச்சனை எதுவும் எங்களுக்கில்லை.



கே: பதிப்புலகின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ப: Go with the Technolgy என்பதுதான் பதிப்புலகின் எதிர்காலமாக இருக்கும். வீடுகளில் புத்தகங்களை வாங்கி சேகரிக்க இடமில்லாத சூழ்நிலை இன்று. அதுபோலப் புத்தகத்தைத் தபாலில், கொரியரில் அனுப்புவதும் செலவு பிடிக்கக்கூடியதாக ஆகிவிட்டது. உதாரணமாக எல்லிஸ் ஆர். டங்கன் எழுதிய An American in India என்னும் சுயசரிதை நூல் இந்தியாவில் கிடைக்கவில்லை. என் மகன் அமெரிக்காவில் வாங்கி இங்கே அனுப்பிவைப்பதற்கான செலவு, புத்தக விலையைவிட அதிகமானது. இங்கேயிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பினாலும் இதே நிலைமைதான். ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்குத் துணையாகத்தான் இன்றைக்கு மின்னூல் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. அது இன்னமும் இங்கே அதிக வரவேற்புப் பெறவில்லை. பல பதிப்பாளர்களுக்கு ஒருவித பயம், தயக்கம் இருக்கிறது. மின்னூல் விற்றால் எங்கே பணம் வந்துசேராதோ, 100 புத்தகங்களை விற்றுவிட்டு 10 புத்தகங்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் என்ன செய்வது என்பது போன்ற அச்சங்கள் இருக்கின்றன. இந்த நிலைமை மாறவேண்டும்.

"எனக்கு மூன்று மகன்கள். பெரியவர் கார்த்திக் கண்ணதாசன் ஆஸ்திரேலியாவில் ஐ.டியில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகன் முரளி கண்ணதாசன் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படித்தபின் என்னோடு சேர்ந்து தொழிலில் பணியாற்றுகிறார். மூன்றாவது மகன் சரவணா கண்ணதாசன் பாஸ்டனில் இருக்கிறார். முரளி கண்ணதாசன் தொழில்நுட்ப விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளுகிறார். இளைய தலைமுறையோடு சிந்தித்துச் செயலாற்றுவது இன்னமும் சுவாரஸ்யமாய் இருக்கிறது" சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் காந்தி கண்ணதாசன். நாமும் ஒரு புன்னகையை விடையாகத் தந்து விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


விற்காத சிக்கன் சூப்
'Chicken Soup for the Soul' என்பது ஆங்கிலத்தில் பெரிய வெற்றிபெற்ற புத்தகம். 5 பாகங்கள். மொழிமாற்ற உரிமை, மொழிபெயர்ப்பு என்று 3, 4 லட்சம் செலவு செய்து, மிகவும் ஆசைப்பட்டு அந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவந்தேன். அது விற்கவே இல்லை. அப்படியே தேங்கிக் கிடந்தது. ஏனென்று பார்த்தபோதுதான், அதிலுள்ள சம்பவங்கள், தத்துவங்கள் எல்லாம் அன்னிய நாட்டுக்கானவையாக இருந்தது. அதை நம் மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களுக்குத்தான் அப்படி நடக்கும், நமக்கு நடக்காது என்ற எண்ணம்தான் காரணம். நாம் எதிர்பார்ப்பது ஒன்றாகவும், வாசகர் எதிர்பார்ப்பு வேறாகவும் சமயத்தில் அமைந்துவிடக் கூடும். எனவே ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்யும்போது அதை வாசகர் கண்ணோட்டத்தில் தேர்வு செய்யவேண்டும் என்ற அனுபவம் எனக்கு இந்தப் புத்தகத்தில் கிடைத்தது.

- காந்தி கண்ணதாசன்

*****


அப்துல் கலாம்: குழந்தையுள்ளம் கொண்ட மாமேதை
கலாம் அவர்களின் 'அக்னிச் சிறகுகள்' நூலை நான் பதிப்பித்தபோது அவர் ஜனாதிபதி ஆகியிருக்கவில்லை. நகரங்களில் அவரைப்பற்றி ஓரளவு அறிமுகம் இருந்தது, கிராமப்புறங்களில் இல்லை. "நீங்கள் சென்னை வரும்போது இந்தப் புத்தகத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் இதை வாங்கும் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுத் தரவேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். 1999 ஜூலையில் சென்னை ஹிக்கின்பாதம்ஸில் புத்தக வெளியீடு நடந்தது. மிகவும் சிம்பிளாக விழாவிற்கு வந்திருந்தார். காலை 10 முதல் 12 மணிவரை அவர் கையெழுத்துப் போட்டுத் தருவதாக ஏற்பாடு. ஆனால் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துவிட்டனர். வட இந்திய, தென்னிந்திய சேனல்களும் நிகழ்ச்சியைப் படம் பிடிக்க வந்திருந்தனர். கலாம் அவர்களிடம், "நான் உங்களுக்குப் பேட்டி தருவதற்காக இங்கே வரவில்லை. இதோ, இந்தக் குழந்தைகளுக்காக, இளைஞர்களுக்காக வந்திருக்கிறேன்" என்று சொன்னார். சேனல்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு புத்தகங்களில் கையெழுத்திட ஆரம்பித்தார். நாங்கள் கொண்டு சென்றிருந்தது வெறும் 1200 பிரதிகள் தான். ஆனால் 4000 பேருக்கு மேல் வந்துவிட்டனர். எங்கள் புத்தகங்கள் போக பிற புத்தகங்களை வாங்கி அவர்கள் கலாமிடம் கையெழுத்துப் பெற்றனர். கையெழுத்தோடு ஒவ்வொருவரும் அவருடன் தனித்தனியாகப் படம் எடுத்துக் கொள்ளவும் ஆசைப்பட்டனர். புன்னகை மாறாமல் கலாம் அதையும் செய்தார். முன்னரே ஒப்புக்கொண்ட மற்றொரு நிகழ்ச்சியை மதியம் 3.00 மணிக்குமேல் மாற்றி வைத்துவிட்டு 2.00 மணிவரை அங்கு இருந்தார். உண்மையில் அவர் ஒரு குழந்தையுள்ளம் கொண்ட மகாமேதை என்பது அவரோடு பழகிய பின்புதான் தெரிந்தது.

- காந்தி கண்ணதாசன்

*****


விருதுகள்
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட நூல்களுக்காக, தமிழக அரசு விருது, மத்திய அரசு விருது உட்படப் பல விருதுகள் பெற்றுள்ளோம். FIP (Federation of Indian Publishers) மற்றும் FPBA (Federation of Publishers and Booksellers Association) வழங்கும் Best Publisher விருது 2007ம் ஆண்டு கிடைத்தது. என்பது எங்கள் இணையதளம்.

© TamilOnline.com