டொக், டொக், டொக் எனக் கதவு தட்டும் ஓசை கேட்டவுடன் கார்த்திக் தனது மடிக்கணினியை ஓரமாக எடுத்து வைத்து விட்டுக் கதவைத் திறந்தான்.
வெளியே அவனுடைய நண்பன் மாதவனும், அவன் தங்கை ஆர்த்தியும்!
கார்த்திக் மிகுந்த சந்தோஷத்துடன், ''வாடா மாதவா. என்ன இந்த பக்கம்! ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..'' என்றான்.
மாதவன், ''பக்கத்து வீட்லே ஒரு பிறந்த நாள் பார்ட்டி. அதை முடிச்சுட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு வந்தேன்'' என்றான்.
கொஞ்சம் பேசிக்கொண்டிருந்த பின் மாதவன், ''என்னடா கார்த்திக், ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் 4 மணிக்கு லேப்டாப்புல என்ன பண்ணிக்கிட்டு இருக்கே. படம் ஏதாவது பார்க்கிறியா?'' என்றான்.
கார்த்திக், ''உனக்குத்தான் தெரியுமே எனக்கு சினிமாவெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காதுன்னு. நாளைக்கு என்ன ஷேர்ஸ் வாங்கலாம்னு பார்க்கறேன்.''
''என்ன கார்த்திக், அதுக்குள்ளே இப்படிப் பணத்தோட விளையாடறே. ரொம்ப ரிஸ்க் பார்ட்டியா நீ?'' ஆர்த்தியின் கண்ணில் கேள்வி.
''அதெல்லாம் ஒன்றுமில்லை ஆர்த்தி. இப்பதான் எனக்கு போனஸ் பணம் சுளையா இருபதாயிரம் வந்தது. அதை பாங்கில் போட இஷ்டமில்ல. அதனால ஷேர்ஸ் வாங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...'' என்றான் தீர்மானமாகக் கார்த்தி.
''என்னமோ, ஜாக்கிரதையா இருடா..'' என்று எச்சரித்தான் மாதவன்.
ஆர்த்தி, ''அண்ணா, நீ கொஞ்சம் சும்மா இரு'' என்று சொல்லிவிட்டுக் கார்த்திக்கிடம், ''ஏன் கார்த்திக், உனக்கு பயம் இல்லையா பணத்தை விட்டுடுவோம்னு..'' என்றாள்.
''எதுக்கு பயப்படணும்? பாங்கில் பணத்தை கொடுத்தா 2 அல்லது 3 சதவீதம் கொடுக்கிறான். 3 சதவீத வட்டியிலே நான் எப்படி என் செலவு எல்லாம் சமாளிக்கறது? ஒரு தடவை இந்தியாவுக்குப் போயிட்டு வந்தா எனக்கு மூவாயிரம் டாலர் ஆறது. அடுத்த வருஷம் ஜனவரியில இந்தியா போறதுக்கு நான் பங்குகளிலிருந்து வர லாபத்தை உபயோகிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.''
''அது எப்படி நீ லாபம்தான் வரும்னு முடிவு பண்றே! நீ இதுல எல்லாத்தையும் தொலைச்சுட்டா என்ன பண்ணுவே?'' கேட்டது மாதவன்.
ஆர்த்தியும், ''ஆமா கார்த்திக். நீ கூட Enron, Worldcom எல்லாம் கேள்விப்பட்டிருப்பியே'' என்றாள்.
கார்த்திக், "சரி வாங்க, ஸ்டார்பக்ஸில ஒரு காபி குடிச்சிக்கிட்டுப் பேசலாம்'' என்று அழைத்தான். மூவரும் கிளம்பினார்கள்.
ஸ்டார்பக்ஸ் ஒரு பெரிய மாலுக்குள் இருந்தது. கார்த்திக்கின் டொயோடா காரில் போகும்போது அவர்கள் இருவரையும் வழியிலிருந்த கடைகளின் பெயரைச் சொல்லச் சொன்னான்.
"சரி, இந்த மால்ல இருக்கற எல்லாக் கடைகளையும், அதில விக்கற பொருட்களையும நாம பார்க்கலாம்'' என்றான் கார்த்தி.
"ஐ.. ஜாலி, எனக்கு விண்டோ ஷாப்பிங் பிடிக்கும்'' என்று கூவினாள் ஆர்த்தி.
''ஒண்ணு கவனீச்சிங்களா? இங்கே ஜே. சி. பென்னி, மேசிஸ், ஸ்டார்பக்ஸ், பார்ன்ஸ் அண்ட் நோபிள், விக்டோரியாஸ் சீக்ரெட், ஆபர்கோம்பி, சிபிஎஸ் எல்லாமே பொதுத்துறைக் கம்பெனிகள்தாம். நீங்க வெச்சிருக்கிற மொபைல் தொலைபேசி வெரைசன்கூட பப்ளிக் கம்பெனிதான்'' என்று தொடங்கி, கார்த்திக் ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டு வந்தான்.
ஆச்சரியத்தோடு இதைப் பார்த்த ஆர்த்தி, ''நான் ஒரு முட்டாள். அமெரிக்காவில் பெரும்பாலான கம்பெனிகள் பொதுத்துறை தான் என்று எப்படித் தெரியாமப் போச்சு! இந்த அழகுல நான் இப்ப J.P. மார்கன்ல பயிற்சி எடுத்துக்கிட்டு வேற இருக்கேன். J.P. மார்கனே ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனம்தானே. அதை மறந்துட்டேன்'' என்றாள்.
மாதவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ''அப்ப சரியான பப்ளிக் கம்பெனிப் பங்குகளை வாங்கினா நல்லா பணம் பண்ணலாம்கிறயா?'' என்றான் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு.
கார்த்திக்கும், ''மிகச் சரி. உதாரணத்துக்கு நாம்ப 'வால்மார்ட்'லே பொருள் வாங்கறோம். பத்தாயிரம் டாலருக்கு 1975-ல வால்மார்ட் ஷேர்ஸ் வாங்கியிருந்தா இன்னிக்கு அதோட மதிப்பு என்ன தெரியுமா? மயங்கி விழுந்துடாதே, 15 மில்லியன் டாலர்! நம்பமுடியுதா? சரியான பங்குகளை வாங்கினா நல்ல லாபம் சம்பாதிக்கலாம். பணம் குட்டி போடும். தெரியுமா? அதனால தான் சொன்னேன். நான் பணத்தோட விளையாடல. ஆனா வேட்டையாடறேன்.''
ஆர்த்தி கார்த்திக்கைப் பார்த்த பார்வையில் ஆச்சர்யம் மட்டுமல்ல, கொஞ்சம் காதலும் இருந்தது.
சிவாநாரா |