நான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி, என்னைக் கட்டாயம் சேரவேண்டும் என்று சொல்லி 'விஞ்ஞானி B' பணிநியமன ஆணையில் கையெழுத்திட்டார்.
அவர் அப்போது ஹைதராபாதில் இயக்குனர். என் பணியிடம் பெங்களூரு. ஆனாலும் அவருடைய புகழ் பெங்களூரிலும் பரவியிருந்தது. அவர் இரவு உணவுக்குப் பிறகு நடந்து கணினி மையத்துக்குப் போவாராம். அங்கிருந்த இளம் விஞ்ஞானிகளிடம் சகஜமாகப் பேசிவருவாராம். அதனால் ஆய்வறிக்கை அவர் மேசைக்குப் போதற்கு முன்னதாகவே அதன் சாரம்சம் அவருக்குத் தெரியும். இளம்விஞ்ஞானிகள் வேறொருவர் தமது உழைப்பைச் சொந்தம் கொண்டாடிவிடுவாரோ என்ற பயமின்றிச் செயல்படுவார்கள்.
அவர் குடியரசுத் தலைவர் பதவி முடிந்தபின்னர், பிட்ஸ்பர்கில் கார்னெகி பல்கலைக்கழகத்தில் விருதுபெற வந்திருந்தார். அப்போது அவரைச் சந்தித்துப் பேசவும் படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் படித்த சுவார்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நானும் படித்தேன் என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் சைவம் உண்பவர். இட்டலி பிடித்த உணவு. அன்று அவருக்கு இட்டிலி செய்துதரும் வாய்ப்பும் கிடைத்தது எங்களுக்கு.
ரவி சுந்தரம், பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா |