காலத்தை வென்ற கலாம்
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய்
உறங்க வைத்தல்ல
ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி

பொக்ரான் பாலைவனத்தில் அணுகுண்டு வேட்டுவைத்தாய்
உலகின் கண்ணில்
பாரதத்தின் பராக்கிரமத்தைப் போட்டுடைத்தாய்

வீணைமீட்டிய வெள்ளிக்கேச விண்வெளி நாயகனே
மாணவர்களின் எண்ணங்களைச்
சாணைதீட்டப் பள்ளிதோறும் சென்ற சேவகனே

எல்லா ஜனாதிபதிகளும் முப்படைகளின் தளபதி
நீ மட்டுமே
எங்கள் ஜனங்களின் மனங்களின் அதிபதி

ஏழைநாடு இந்தியா என்று எல்லோரும் நினைத்தபோது
ஏவுகணைகள் எய்து
புகழைத்தேடிக் கொண்டுவந்த சூத்திரதாரி

இரண்டாயிரத்திருபதில் இந்தியாவை வல்லரசாக்கக் கேட்டாய்
அதைக் காணுமுன்னே
மீண்டெழுந்திடாத உறக்கம் ஏன் கொண்டாய்!

குறிஞ்சி. சுரேஷ் செல்வராஜ்,
ட்ராய், மிச்சிகன்

© TamilOnline.com