எம்.எஸ். விஸ்வநாதன்
தமிழகத்தின் மூத்த திரையிசைக் கலைஞரும், முன்னோடி இசையமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (87) சென்னையில் காலமானார். மலையங்கத்து சுப்ரமணியம் விஸ்வநாதன் என்னும் எம்.எஸ்.வி., 1928 ஜூன் 24ல் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்த இவர், தாயாருடன், பாட்டனாரின் கண்காணிப்பில் வளர்ந்தார். வறுமையின் காரணமாகச் சிறுவன் விஸ்வநாதன் திரையரங்குகளில் முறுக்கு, சோடா விற்கத் தொடங்கினான். இவனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு பாட்டனாரின் நண்பரான நீலகண்ட பாகவதர் இசை கற்றுத்தர முன்வந்தார். 13 வயதில் எம்.எஸ்.வி.யின் முதல் மேடைக்கச்சேரி திருவனந்தபுரத்தில் அரங்கேறியது. சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு, ஜெயிலராக இருந்த தாத்தாவின் சிபாரிசால் 'ஹரிச்சந்திரா' நாடகத்தில் லோகிதாசனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்து கோவையில் உள்ள ஜூபிடர் பிக்சர்ஸ் வாசலைத் திறந்தது. 'கண்ணகி' படத்தில் சிறுவயது கோவலனாக நடித்தார். ஆனால் கண்ணகியாக நடித்த பெண்ணைவிட, உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அந்த வாய்ப்பு நழுவியது. மனதைத் தேற்றிக்கொண்டு அங்கு ஆஃபிஸ் பாய் வேலையை ஏற்றுப் பணியாற்றினார்.

எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற ஜாம்பவான்களின் அறிமுகம் கிடைத்தது. எஸ்.எம். சுப்பையா நாயுடு அங்கே இசையமைப்பாளராகப் பணியாற்றினார். அவரிடம் எம்.எஸ்.வி. உதவியாளராகச் சேர்ந்தார். தான் இசையமைக்கும் படத்தில் ஓரிரு பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைத் தந்தார். பின்னர் ஜூபிடர் பிக்சர்ஸ் மூடப்பட்டபோது, இசைமேதை சி.ஆர். சுப்பராமனிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார். சுப்பராமனிடம் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றிய டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டார். மணமகள் படத்தில் இடம்பெற்ற பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடலில் எம்.எஸ்.வி.யின் பங்கும் உண்டு. சி.ஆர். சுப்பராமன் மறைந்ததும், அவர் பாதியில் விட்டுப்போன படங்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைத்தார். கலைவாணர் நடித்த "பணம்" படத்திற்கு ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்தார்.

1952ல் தொடங்கிய விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையின் இசைப்பயணம், 1965ல் இவர்கள் பிரியும்வரை தொடர்ந்தது. எம்.எஸ்,வி தனித்து இசையமைக்கத் துவங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்த விஸ்வநாதன், அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் இருவருக்கும் இசையமைத்து மேதைமையை நிரூபித்தார். பாடல் புரியும் வண்ணம் இசையமைப்பது, விதவிதமான மெட்டுக்களைப் பயன்படுத்துவது, நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது, மூன்றே மூன்று இசைக்கருவிகளை மட்டும் பயன்படுத்துவது என்று பல புதுமைகளைச் செய்தார். இசையில் ஜனரஞ்சகத் தன்மையைக் கொண்டு வந்தவர் எம்.எஸ்.வி.தான்.

"அச்சம் என்பது மடமையடா..."வும், "நிலவே என்னிடம் நெருங்காதே"வும் ஒரே மெட்டின் இருவேறு பரிமாணங்கள் தான். "பாலும் பழமும் கைகளில் ஏந்தி.." பாடலை இறுதிவரை அந்த ஒரே ஒரு வரியைக் கொண்டே பாடி முடிக்க முடியும். "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் இடம்பெற்ற "முத்தான முத்தல்லவோ" பாடலுக்கு இருபதே நிமிடங்களில் மெட்டமைத்த இவர், "நெஞ்சம் மறப்பதில்லை" பாடலுக்கு இரண்டு மாதம் எடுத்துக்கொண்டார். எகிப்திய, லத்தீன், ஜப்பானிய, ரஷ்ய, அமெரிக்க இசையை தனது பாடல்களில் எம்.எஸ்.வி. பயன்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்க்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சி நடத்தியவர் எம்.எஸ். விஸ்வநாதன்தான். புலமைப்பித்தன், முத்துலிங்கம் எனப் பல கவிஞர்களையும், வாணி ஜெயராம், ஜயச்சந்திரன், கல்யாணி மேனன், வசந்தா, எம்.எல். ஸ்ரீகாந்த் எனப் பல பாடகர்களையும் இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மனிதனின் பிறப்புமுதல் இறப்புவரை தாலாட்டு, காதல், சோகம், வீரம், நகைச்சுவை, பக்தி, அன்பு என்று பல்வேறு உணர்ச்சி நிலைகளைக் காட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. ஆனால் அதுபற்றிய கர்வம் இல்லாமல், "அனைத்தும் என் முன்னோடிகளின் வழி வந்தது. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்குழுவினர் என எல்லாருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு" என்றே எப்போதும் சொல்லிவந்தார். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் இவரிடம் உதவியாளராகப் பணியாற்றிவர்கள்தான்.

"மெல்லத் திறந்தது கதவு", "செந்தமிழ்ப்பாட்டு" போன்ற படங்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்துள்ள எம்.எஸ்.வி., "தில்லு முல்லு" படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்ததுண்டு. ராமமூர்த்தியுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என 1,200 திரைப்படங்களில் இவர் கைவண்ணம் காட்டியதுண்டு. தனித்து இசையமைத்த படங்கள் 500க்கு மேல். "அல்லா... அல்லா..", "சொல்லத்தான் நினைக்கிறேன்..", "ஆலால கண்டா..", "விடை கொடு எங்கள் நாடே.." என்று பல பாடல்களைப் பாடியிருக்கும் எம்.எஸ். விஸ்வநாதன், "காதல் மன்னன்", "காதலா காதலா" போன்ற படங்களி நடித்தும் இருக்கிறார்.

விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி. கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், ஹரிதாஸ் மகன்கள். லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் மகள்கள். திரையிசைப் பிதாமகருக்கு தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com