மே 9, 2015 சனிக்கிழமை அன்று பர்மிங்ஹாம், குரோவ்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்திர ஈகைவிழா மற்றும் 40வது ஆண்டு நிறைவு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சங்கத்தலைவர் பெ. முருகப்பன் வரவேற்புரை நல்கினார்.
விழாவின் துவக்கத்தில் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற திருக்குறள் போட்டி, மாறுவேடப் போட்டி, சொல்வதெழுதுதல் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு முனை. பாலநேத்திரம், அவரது துணைவியார் விஜி பாலநேத்திரம் இருவரும் பரிசுகள் வழங்கினர். விழாவின் சிறப்பு அம்சமாக, சி.எஸ். ஐங்கரன் இசைக்குழுவினருடன் 'சூப்பர் சிங்கர்' புகழ் பிரகதி, ஜெசிகா, விஜய் கிருஷ்ணன் மற்றும் உள்ளூர்க் கலைஞர் சித்ரா ஸ்ரீதர் இணைந்து வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகர், இயக்குனர் திரு. ஆர். பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பாண்டியராஜனின் இயல்பான நகைச்சுவைப் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
சங்கத்தின் 40 வருடப் பணிகளை முந்தைய ஆண்டுகளின் சங்கத்தலைவர்களும், பிரதிநிதிகளும் நினைவு கூர்ந்தனர். இதனைக் கொண்டாடும் விதமாகச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதியிலிருந்து சங்கர நேத்ராலயா (சென்னை) மற்றும் நேபாளத்தின் பூகம்ப நிவாரண நிதிக்காக நன்கொடை தரப்படுமென அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை வித்யா சதீஷ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
ராஜ் பழனிவேல், கேன்டன், மிச்சிகன் |