ஆண்டுவிழா: சிமி வேல்லி தமிழ்ப்பள்ளி
மே 17, 2015 அன்று சிமி வேல்லி தமிழ்ப்பள்ளியின் மூன்றாவது ஆண்டுவிழா, அட்வென்டிஸ்ட் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் திருமதி. சுபாஷிணி ரங்கநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர், பள்ளி மாணவியர் 'வாழ்க தமிழ்' என்ற பாடலுக்கு பாரதநாட்டியம் ஆடினர். ஓய்வுபெற்ற புவியியல் விஞ்ஞானி திரு. தி.நா. பார்த்தசாரதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பட்டமளித்தார். தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வென்றோருக்கும், முழு வருகைப்பதிவு கொண்டோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பிறகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திருமதி. சக்தி அருள்மணி வகுப்பு மாணவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப்பற்றி மூவேந்தர்களே விளக்குவதாக ஒரு தொகுப்பு வழங்கினார்கள். திருமதி. ஜெயஸ்ரீ கல்யாண் வகுப்பு மாணவர்கள், அமெரிக்காவாழ் தமிழர் நடுவே தமிழின் நிலையை ஒரு நாடகத்தின் வாயிலாக விளக்கினார்கள். திரு. மு. நாச்சியப்பன் வகுப்பு மழலைகள் பாடல்களை இசைத்து நெஞ்சைக் கொள்ளை கொண்டனர்.

திரு. ரெ. சண்முகசுந்தரம் வகுப்பு மாணவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை 'ஆழிப் பேரலையிலும் அசையாத இந்தியா' என்ற நாடகத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்கள். திருமதி. த. வித்யாலக்ஷ்மி வகுப்பு மாணவர்கள் பாரம்பரிய கிராமிய நடனம் ஆடி மகிழ்வித்தனர். திருமதி. மகாலட்சுமி ஆல்வின் வகுப்பு மாணவர்கள் மகாகவி பாரதியாரின் கவிதைகளைக் கூறினார்கள். திருமதி. காந்திமதி திருமூர்த்தி வகுப்பு மாணவர்கள் தமிழின் சிறப்பையும், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் ஏன் தமிழ் கற்கவேண்டும் என்பதையும் தெருக்கூத்து வாயிலாக விளக்கினார்கள்.

துணைமுதல்வரும் பொருளாளருமான திருமதி. நிர்மலா விஜயரங்கம் பள்ளியின் நிதியறிக்கையை வழங்கினார். நிர்வாக அலுவலர் திரு. யோகானந்த் கந்தசாமி நன்றியுரை வழங்கினார். தேசியகீதத்துடன் விழா நிறைவடைந்தது.

ரெ.சண்முகசுந்தரம்,
சிமி வேல்லி, கலிஃபோர்னியா

© TamilOnline.com