ஜூன் 20, 2015 அன்று பாரதி தமிழ்ப்பள்ளி துவக்கவிழா கலிஃபோர்னியாவின் ஆர்டீசியா நகரில் இருக்கும் வுட்லேண்ட்ஸ் உணவக அரங்கில் நடைபெற்றது.
கடவுள் வாழ்த்துடனும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் விழா துவங்கியது. ஆசிரியை திருமதி. தீபா சுவாமிநாதன் வரவேற்புரையாற்றி, விருந்தினர்களை அறிமுகம் செய்தார். லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளி முதல்வர் திரு. ராஜ் மல்லிசெட்டி பாரதி தமிழ்ப்பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். பள்ளிக்குழந்தைகள் தங்கள் தமிழறிவை வெளிப்படுத்தும் விதமாக நாடகம், பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராக சேர்ரிடோஸ் நூலகத்தின் நூலகர் திருமதி. பத்மினி பிரபாகர் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். பரதநாட்டியக் கலைஞர் திருமதி. பாவ்லோமி பண்டிட் பாரதி தமிழ்ப்பள்ளி வெற்றிபெற வாழ்த்திப் பேசினார். திரு. சபரி கோவிந்தன் தமது உரையில் தமிழ்மொழியின் தொன்மை, திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களின் சிறப்பு ஆகியவைபற்றி விளக்கினார். லாஸ் ஏஞ்சலஸ் தமிழ்ப்பள்ளிப் பொருளாளர் திரு. பாலாஜி கிருஷ்ணமுர்த்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியர் திரு. பாபநாசம் வீரபாகு நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிகளைத் திருமதி. சுனிதா சுதர்சன் சுவாரஸ்யமாகத் தொகுத்தளித்தார். தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.
பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் தொடர்புகொள்ள பாபநாசம் வீரபாகு - 323-229-9257 பாலாஜி முத்துராமலிங்கம் - 818-913-9067
தீபா சுவாமி, ஆர்டீசியா, கலிஃபோர்னியா |