அரங்கேற்றம்: அர்ச்சிதா ராஜகோபாலன்
ஜூன் 27, 2015 அன்று கனெக்டிகட் அப்சரஸ் நாட்டியப்பள்ளி மாணவி அர்ச்சிதா ராஜகோபாலனின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெடரன்ஸ் மெமோரியல் அரங்கில் நடந்தது. இவர் குரு ஜயந்தி சேஷன் அவர்களின் மாணவி.

புஷ்பாஞ்சலி, கிருஷ்ண கவுத்துவம், ஆடிக்கொண்டார், ஆண்டாளின் வாரணமாயிரம், முத்துசுவாமி தீக்ஷிதரின் ஆனாந்தாமிர்தவர்ஷிணி கீர்த்தனம் எனப் பற்பல ராகங்களில் அமைந்த கிருதிகளுக்கு நடனமாடினார் அர்ச்சிதா. அமிர்தவர்ஷிணி பாடிய அன்று மழைபெய்தது குறிப்பிடத்தக்கது. பாரதியாரின் 'சொல்லவல்லாயோ கிளியே' பாடலுக்கு நளினமாகவும், பாவபூர்வமாகவும் பாடியது சிறப்பு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்னும் ஆபேரி ராகப் பாடலுக்கு அவர் அபிநயித்தது மனம் கவர்ந்தது. மங்களமாக பத்ராசல ராமதாஸர் மீதான பாடலுடன் நிறைவுசெய்தார்.

அபிநயம், முகபாவம், லாகவமான உடல்மொழி என நாட்டியத்தின் சகல பரிமாணங்களையும் அர்ச்சிதா வெளிப்படுத்தினார். பக்கம் வாசித்த திரு. பாபு பரமேஸ்வரன் குழுவினரும், நட்டுவாங்கம் செய்த குரு ஜயந்தியும் நிகழ்ச்சியின் சிறப்புக்கு உறுதுணையாக இருந்தனர். முடிவில் அர்ச்சிதாவின் குரு ஜயந்தி, அர்ச்சிதா படித்த பள்ளியின் தலைவர், ஆசிரியர் எனப் பலரும் பாராட்டிப் பேசினர். அர்ச்சிதா யேல் பல்கலை மாணவி. திருமதி கலாம் ராஸாத்திடம் சங்கீதம் கற்றுக் கொள்கிறார். படகுப்போட்டி உட்படப் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகள் வென்றிருக்கிறார். அர்ச்சிதாவின் முயற்சிகளுக்கு அம்மா ஜயஸ்ரீ, அப்பா ரமேஷ், சகோதரன் ஆதித்யா எனப் பலரும் ஆதரவாக உள்ளனர்.

பத்மாசினி ராஜகோபாலன்,
கனெக்டிகட்

© TamilOnline.com