2015 ஜூலை 3-4 தேதிகளில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA (Federation of Tamil Sangams of North America) கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் ஹோசே நகரில் வெகுசிறப்பாகத் தமிழ் விழாவை நடத்தியது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 2500 பேர் கலந்துகொண்டார்கள்.
முதல்நாள் தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புப் பாடலோடு, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன், சங்கப் பாடல்கள் போன்றவற்றை வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றக் குழந்தைகள் பாடி ஆடினார்கள். பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், குழந்தைகள் பங்கேற்ற 'திருக்குறள் தமிழ்த்தேனீ' போட்டி சிறப்பாக நடந்தேறியது. முதல்பரிசு பெற்ற சிறுமி அஞ்சலி ஜெயகாந்தன் ஐபேட் (iPad) கருவியைப் பரிசாகப் பெற்றார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை வடமாகாண முதல்வர், மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழின் முக்கியத்துவம், தமிழர்களின் எதிர்கால நலன், தமிழைப் பேணுதல் காலத்தின் கட்டாயம் என்பவற்றை ரத்தினச் சுருக்கமாகப் பேசினார்.
"இலங்கையில் நடந்தது ஓர் 'இனப் படுகொலையே' எனச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதை அமெரிக்காவாழ் தமிழர்கள் பாராட்டினார்கள்.
தமிழறிஞர் முனை. ராஜம் அவர்களுக்குப் பேரவை மரியாதை செய்தது. அவர் பேசுகையில் வீட்டில் வளரும் குழந்தைகள் எந்தத் துறை எடுத்தாலும், இல்லத்தில் நம்மோடு தமிழில் உரையாடுவது மிகமிக முக்கியம் என்றார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வரவிருக்கும் தமிழ் இருக்கைக்குத் தன்னிடமிருந்த நிதியைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லை குமரனிடம் வழங்கினார். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள திருமதி. வைதேகி ஹெர்பெர்ட் மற்றும் சில கல்வியாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடம் தமிழ் இருக்கை ஏற்படுத்த வேண்டுமென வைத்த கோரிக்கைக்குப் பல்கலை ஒப்புதல் வழங்கியதை வைதேகி அறிவித்தார். இதற்கெனப் பல்கலைக்கு ஆறு மில்லியன் டாலர் முன்பணமாகக் கட்டவேண்டும். இரண்டு அன்பர்கள் இணைந்து ஒரு மில்லியன் கொடுக்கவிருப்பதையும் அறிவித்தார். எஞ்சிய தொகையை இரண்டாண்டுக்குள் செலுத்தவேண்டும்.
விழாவில் முனைவர் செளம்யா, மகிழினி மணிமாறன் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது. மகிழினி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரே பாடலை இரண்டு முறை பாடினார்! கவிமாமணி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் அற்புதமான கவிதைகளை வழங்கினார்கள். இலக்கிய வினாடி வினா, கருத்துக்களம், பேச்சரங்கம் போன்றவையும் சிறப்பாக இருந்தன. இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களுக்கு நினைவஞ்சலி பாமாலையாக வழங்கப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் மூலம் இசை நிகழ்ச்சியைச் சுகி ஷிவா, வித்துவான் முல்லைவாசல் சந்திரமௌலி தயாரிப்பில் வழங்கினார்கள்.
தமிழிசைப் பாடல்களை விளக்கியதுடன் முனை. செளம்யா கணீரென்று பாடவும் செய்தார். முல்லைவாசல் சந்திரமௌலி வயலின், வினோத் சீதாராம் மிருதங்கம் வாசித்தார்கள்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் நாடகத்துக்கு பாகீரதி சேஷப்பன் மேடைவடிவமைக்க, ஸ்ரீதரன் மைனர் இசையில் சிறப்பாக அரங்கேறி நல்ல வரவேற்புப் பெற்றது.
சமூக ஆர்வலர் 'பூவுலகின்' சுந்தரராஜன் பேசுகையில் இயற்கையைப் பாழ்படுத்துவது சமுதாயத்திற்கு முரணான செயல் என்று கூறினார். தமிழ்ச் சங்கங்களின் வண்ணமிகு அணிவகுப்பில் திருக்குறள் சார்ந்த நடனம், கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம் அனைத்தும் இடம்பெற்றன. சுமதிஸ்ரீ தலைமையில் "மொழியா, கலையா" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் கலையைவிட மொழியுணர்வு முக்கியம் எனத் தீர்ப்பு வழங்கினார். முனை. பேச்சிமுத்து தமிழனின் மொழியுணர்வு, கலையுணர்வுபற்றி எடுத்துரைத்தார். சிறந்த குறும்படம், திரைப்படம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது நாள் விழாவில் ஹரிசரண், பூஜா, ரோஹிணி, ஆலாப் ராஜ் திரையிசை நிகழ்ச்சியில் இளையராசா பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. B.H. அப்துல் ஹமீது சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். 600க்கு மேற்பட்டோர் தமிழ் தொழில்முனைவர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தியாகராசர் பொறியியல் கல்லூரி தாளாளர் திரு. கருமுத்து கண்ணன் இதில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
அடுத்த ஆண்டு தமிழ்ச்சங்கப் பேரவை விழா நியூ ஜெர்சி மாநிலத்தில் நடைபெறவுள்ளது. விரிகுடாப் பகுதியில் நடைபெற்ற இந்த விழா பெரும்வெற்றியடைந்தது என்றால் மிகையல்ல. மேலும் விவரங்களுக்கு: www.fetna2015.org அல்லது www.fetna.org
சுகி சிவா, சான் ஹோசே, கலிஃபோர்னியா |