அரங்கேற்றம்: ஸ்ருதிஸ்ரீ
ஜூலை 4, 2015 அன்று ஸ்ருதிஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு விஷால் ரமணியின் வழிநடத்தலில் (ஸ்ரீக்ருபா நடனப்பள்ளி) சாரடோகா மெக்கஃபீ அரங்கில் விமரிசையாக நடந்தேறியது. தேர்ந்தெடுத்த நடன உருப்படிகளை குரு விஷால் ரமணியின் நேர்த்தியான வடிவமைப்பில், ஸ்ருதிஸ்ரீ சற்றும் குறைவில்லாமலும், தொய்வில்லாமலும் வெகுநேர்த்தியாக வழங்கினார்.

ராகம் ஜோகில் புஷ்பாஞ்சலி, பிருந்தாவன சாரங்காவில் கணேச வந்தனம், பைரவியில் கண்டமட்ய தாளத்தில் ஜதிஸ்வரம் என்று துவக்க உருப்படிகளுக்குப் பின் வந்த குரு கல்யாணசுந்தரம் பிள்ளையின் காம்போஜி ராக வர்ணமான "நாதனை அழைத்துவாடி"யில் ஸ்ருதிஸ்ரீயின் சஞ்சாரி பாவங்களும், பாத விந்நியாஸங்களும், அரங்கேற்றத்திற்கும் பல படிகளைத் தாண்டிய நாட்டிய வெளிப்பாடாகக் காட்டின. குருவருளும், திருவருளும் கூடி, கடின உழைப்பும் இருந்தால் பட்டைதீட்டிய வைரமாக ஜொலிப்பது இயற்கைதானே.

இடைவேளைக்குப் பின் வந்த ஊத்துக்காடு மஹாகவியின் மணிரங்கு ராக "யாரென்ன சொன்னாலும்", பாரதியின் "சின்னஞ்சிறு கிளியே", பெரியசாமி தூரனின் "அழகு தெய்வமான" என்னும் காவடிச் சிந்து, தேஷ் தில்லானா என்று, ஸ்ருதிஸ்ரீ துடிப்பான லயம், பாவம், அங்கத்தெளிவு என்று எவ்வகையிலும் குறைவில்லாமல் ஆடி வந்திருந்தோரைக் கட்டிப்போட்டார்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த இசைக்குழு வாசுதேவன் கேசவலுவின் நட்டுவாங்கம், தனம்ஜெயனின் மிருதங்கம், கௌசிக் சம்பகேசனின் பாவபூர்வமான பாட்டு, வீரமணியின் வயலின் வாசிப்பு என்று அரங்கேற்றம் அற்புத அனுபவமாக அமைந்தது. குருவுக்குத் தக்க மாணவியாக பரதநாட்டிய உலகில் ஸ்ருதிஸ்ரீ வலம்வருவார் என்பதில் ஐயமில்லை.

'அவனிவன்',
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com