அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
ஜூலை 11, 2015 அன்று நர்த்தனா நடனப்பள்ளி மாணவி காஷ்வி லால்குடியின் பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ணனை மையமாகக் கொண்டிருந்தது. யூனியன் சிடி ஜேம்ஸ் லோகன் உயர்நிலைப்பள்ளி அரங்கில் குரு ஜனனி ஜெயகுமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சி 'பயிர்' என்னும் சேவை நிறுவனத்துக்கு நிதிதிரட்டும் விழாவாகவும் அமைந்தது.

கம்பீர நாட்டையில் 'மூஷிக வாஹன' புஷ்பாஞ்சலியில் துவங்கி, 'இந்திரசந்தி' என்னும் நவசந்தி கவுத்துவத்தைத் தொடர்ந்து அழகான அபிநயங்களுடனும், முத்திரை பதிக்கும் அடவுகளுடனும் ஆடினார் காஷ்வி. கண்ணனின் சாகசங்களை விளக்கும் ராகமாலிகை வர்ணத்தில் ஜதிக்கோர்வை நேர்த்தியாகவும், பகடையாட்டம், கவசதானம் போன்றவற்றில் அபிநயம் துல்லியமாகவும் இருந்தன. அடுத்து வந்த "ஜகதோத்தாரண", "விஷமக்காரக் கண்ணன்" பதங்கள் கைத்தட்டலை அள்ளின. "குழலூதி மனமெல்லாம்" பதத்தில் இளைய மாணவியர் அதிதி, அசாவேரி மயிலாக மாறி காஷ்வியுடன் இணைந்து ஆடியது கண்களுக்கு விருந்து. மதுவந்தியில் தில்லானாவும், விடைகொடுக்கும் வண்ணம் ஆடிய குறத்தி நடனமும் முத்தாய்ப்பாக அமைந்தன.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி. கீதா சங்கர் (வாய்ப்பாட்டு), திருமதி. மாலினி மஹேஸ் (வயலின்), செல்வன் அக்ஷய் வெங்கடேசன் (மிருதங்கம்), குரு ஜனனி (நட்டுவாங்கம்) நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர். முன்னாள் குரு திருமதி. சிவகாமி வெங்கா, சிறப்பு விருந்தினர் திருமதி. நவ்யா நடராஜன் ஆகியோர் காஷ்வியை வாழ்த்திப் பேசினர். திருமதி. அபர்ணா குமார் நன்றியுரை வழங்கினார்.

கூடுதல் விவரங்களுக்கும், நிதியளிக்கவும் பார்க்க: www.payir.org

© TamilOnline.com