வடகரோலினா: எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
ஜூலை 11, 2015 அன்று மாலை தமிழ் கலாச்சார சங்கம், நார்த் கரோலினாவின் சார்பில் 'எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இனிய மாலைப்பொழுது' நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. "வேறொரு நாட்டில் வேர்விடுதல் - இந்திய கலாச்சாரத்தின் பெருமையை அமெரிக்க விழுமியங்களின் உதவியுடன் உலகறியச்செய்வது எவ்வாறு?" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

பிரக்யா ஜெயராம் மற்றும் சுருதி சுரேஷ் ஆகிய இரு சிறுமியரும் நடன வரவேற்பு வழங்கினர். ஜெயமோகன் உரைக்குப்பின் கேள்விநேரம் இடம்பெற்றது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. அனுஷா கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எழுத்தாளருடனான தனது அனுபவங்களைத் திரு. ராஜன் சோமசுந்தரம் பகிர்ந்துகொண்டார். முத்தாய்ப்பாக ஜெயமோகனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

சில சுவையான கேள்வி-பதில்கள்:
கே: எவ்வாறு இந்திய கலாசாரத்தை அமெரிக்காவாழ் இந்தியக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது?
ஜெ.மோ: நாம் இதை நமது டைனிங் டேபிளிலிருந்து தொடங்க வேண்டும். எந்த இந்தியராலும் பத்துநிமிடம் சேர்ந்தாற்போல் இந்திய கலாசாரத்தைப் பற்றி பேசமுடியுமா? அந்த நிலை இனிவரும் தலைமுறைக்கு இருக்கக்கூடாது. உதாரணமாக, நம் குழந்தைகள் சைவசித்தாந்தம் பற்றித் தெளிவாகவும், பெருமையுடனும் பேசவேண்டும். ஜென் தத்துவம் பரவியதுபோல் நமது கலாசாரக் கருத்துகள் பரவவேண்டும்.

கே: தமிழ்நாட்டில் இந்த கலாசார பெருமை எவ்வாறுள்ளது?
ஜெ.மோ: தமிழ்நாட்டிலும் மிக அவல நிலையிலேயே உள்ளது.

கே: தமிழிலும், மலையாளத்திலும் பல நாவல்கள், சிறுகதை எழுதிய பெருமை உங்களுக்கு உண்டு. நீங்கள் எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள்?
ஜெ.மோ: தவறு. நான் தமிழில் நூற்றுக்கணக்கான நாவல்கள் எழுதியுள்ளேன். ஆனால் மலையாளத்தில் 3 மட்டுமே எழுதியுள்ளேன். மலையாளத்தில் நான் எழுதிய நாவல்களை எடிட்டிங் செய்தபோது நான் பல தமிழ் வார்த்தைகளை உபயோகித்திருந்தது தெரிந்தது. ஆகவே, என் சிந்தனை தமிழில்தான் இருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

ஸ்ரீவித்யா ஜெயராம்,
ஷார்லட், வடகரோலினா

© TamilOnline.com