அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
ஜூலை 18, 2015 அன்று அட்லாண்டா மவுன்டன்வியூ உயர்நிலைப்பள்ளியில் தீபிகா தங்கராஜின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் குரு சவிதா விஸ்வநாதன் நடத்திவரும் நிருத்ய சங்கல்பா கலைக்கூடத்தின் மாணவியாவார்.

கம்பீர நாட்டையில் சந்திர கவுத்துவத்துடன் நிகழ்வு தொடங்கியது. அடுத்து கிருதி ஹம்சத்வனியில் துங்கதரங்க கங்காவாக பிரவாகித்தது. கங்கை மலையிலிருந்து வீழ்வதையும், கரை புரண்டோடும் வெள்ளமாகத் துள்ளிச் சென்று சாகரத்தில் சங்கமிக்கும் அழகினை தீபிகா பிரதிபலித்தார்.

"சுவாமி நீ மனமிறங்கி" (ஸ்ரீரஞ்சனி) வர்ணத்தில், தீபிகாவின் அபிநயம் மால்மருகனைக் கண்முன் ஒளிரச்செய்தன. வர்ணத்தில் இடம்பெற்ற வயலின் தனி ஆவர்த்தனம் அவையோரைக் கவர்ந்தது. சுவாதித்திருநாள் இயற்றிய த்விஜாவந்தி பதம், "ஸ்ரீசக்ரராஜ" கீர்த்தனம், கமாஸ் ராக "ஏரா ரா ரா" என்ற ஜாவளி என்று நிகழ்ச்சி ராஜநடை போட்டது. லால்குடியின் மதுவந்திராகத் தில்லானாவுக்கு ஜதியும், தாளமும் பின்னிப் பிணையச் சுழன்றாடினார். லிங்கபைரவியை வணங்கி நிகழ்ச்சி மங்களமாக நிறைவுற்றது. திருமதி. ஜோதிஷ்மதி ஷீஜித் (வாய்ப்பாட்டு), திரு. ஷீஜித் கிருஷ்ணா (மிருதங்கம்), திருமதி. ப்ரீதி சுந்தரேசன் (புல்லாங்குழல்), திருமதி. கல்பனா பிரசாத் (வயலின்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர். தீபிகாவின் தாய் திருமதி. கல்பனா தங்கராஜ் நன்றி கூறினார். திரு. ஶ்ரீகுமார் நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினார்.

தீபிகா ஐந்து வயதில் கலைப்பயணத்தைத் துவங்கினார். ARPAN, GATS, GAMA, Sankara Nethralaya Trust போன்றவற்றில் நடன நிகழ்ச்சிகள் தந்திருக்கிறார். வீணையும் கற்றுவரும் இவர் ஜூனியர் சின்மயா யுவகேந்திரத்தில் (JCHYK) தன்னார்வப் பணிசெய்கிறார். அவரது முயற்சிகளுக்குப் பெற்றோர் கல்பனா மற்றும் தங்கராஜ் உறுதுணையாக இருக்கின்றனர்.

குரு சவிதா கலாக்ஷேத்ராவில் பயின்றவர். நிருத்ய சங்கல்பா கலைக்கூடத்தை நிறுவி 20 வருடங்களாக நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி, ஈஷா வித்யா திட்டத்தின்மூலம் தமிழக ஊரகக் கல்வித் திட்டத்திற்குச் செலவிடப்படும்.

ஹேமா இராமச்சந்திரன்,
அட்லாண்டா.

© TamilOnline.com