ஜூன் 27, 1980
அன்புள்ள அம்மாவுக்கு,
நலமா? அங்கு அண்ணா, மன்னி, அவர்கள் பிள்ளை நட்டு எல்லாரும் சௌக்கியமா? நட்டு இந்த வருடம் இஞ்சினியரிங் முடிக்கிறானே, ஏதாவது கேம்பஸ் இன்டர்வியூ வந்ததா? இங்கும் நான் ஏதோ இருந்துண்டிருக்கேன். பணம் காசு வசதிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. கார்த்தால இவர் கிளம்பிப் போனால், திரும்ப ராத்திரி எத்தனை மணிக்கு வர்றார்னு தெரியவே மாட்டேங்கிறது. மதியத்துக்குமேல் சமையல் மாமியும் போயிடறா. அவ்ளாம் பெரிய வீடு. வெறிச்சுனு இருக்கு. இன்னும் இவர் எப்படி என்றே தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் கொஞ்சம்போல பேசமுடியறது. அதுவும், அவர் பிஸினஸ் பற்றியே ஜாஸ்தி பேசறார். எனக்கு ஒண்ணும் புரியலை. எனக்கு இங்கு ஒரு வேலையும் இல்ல. எல்லாவற்றுக்கும் வேலை ஆட்கள் இருக்கிறார்கள். சும்மா சாப்பிட்டுக்கொண்டு, ரேடியோ கேட்டுண்டு எத்தனை நாள்தான் இருப்பது? எனக்கு இங்கே ரொம்பப் போர் அடிக்கிறது.
அன்னிக்கு ஒரு நாள் போதுபோகாம, இவரோட கர்சீப்ல "சாரு சங்கர்"னு ஒரு சின்ன எம்பிராய்டரி டிசைன் போட்டு அவருக்குக் காமிச்சேன். அதைப் பார்த்துட்டு வெறும் 'நைஸ்'னு ஒரு வார்த்தை, அதுவும் மெதுவா சொல்லிட்டுப் போயிட்டார். வேற ஒண்ணுமே சொல்லலை. எனக்கு அழுகையா வந்தது. வேற ஒண்ணுமே பேசமாட்டேங்கறார். எதிலுமே ஒரு ரசனை இல்லை. நீயும், அண்ணாவும் எனக்கு எத்தனை விஷயங்கள் கற்றுக்கொடுத்து ரொம்ப ரசனையுள்ளவளா வளர்த்தேள்! பாட்டு, பரதம், வீணை, தையல், சமையல்னு எவ்வளவு கத்துண்டேன். இவருக்கு இந்தப் பாட்டு, டான்ஸ் எல்லாம் அவ்வளவா இஷ்டமில்லை போலிருக்கு.
நமக்கெல்லாம் ரொம்பப் பிடிச்ச ஒரு பாட்டு அடிக்கடிக் கேப்போமே, அண்ணாகூட சொல்வானே, ஏ.பி. கோமளாவுடன், டி.ஆர். மகாலிங்கம் கீழ்ஸ்ருதில பாடின அற்புதமான பாட்டு, "நான் அன்றி யார் வருவார்...", ஒரு நாள் ரேடியோல வந்தது. நான் அதைப் பெரிசாவச்சு அந்தப் பாட்ல ஆபோகியும், வலஜியும் கொஞ்சறதைக் கண்ணைமூடி ரசித்துக் கேட்டுண்டு இருந்தேன். திடீர்னு பாதில பாட்டு நின்னுபோச்சு. கரண்ட் கட்டோன்னு மொதல்ல நினைச்சேன். ஆனா, இவர்தான், காதில் ஃபோனை வச்சுண்டு, யார்ட்டயோ பேசிண்டே ரேடியோவ ஆஃப் பண்ணிட்டுப் போய்ட்டார். எனக்கு அழுகை அழுகையா வந்தது. எதிர்த்துக் கேட்க தைரியம் இல்லை. ஏமாற்றமும், அழுகையும்தான் முட்டிண்டு வந்தது. என்ன மனுஷரோ!
நீயும் அண்ணாவும், இது ரொம்பப் பெரிய இடம், வரதட்சிணை, சீர்னு எதுவும் எதிர்பார்க்காம இந்தக் காலத்தில இந்தமாதிரி வரன் அமையறது நான் செஞ்ச அதிர்ஷ்டம்னு சொல்லி, இவருக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேள். வசதி வாய்ப்புக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லைதான். ஆனா, இவர்ட்ட கொஞ்சம்கூட அனுசரணைங்கறதே இல்லையே! எப்பப் பார் பிஸினஸ், பிஸினஸ். அதைத்தாண்டி பொண்டாட்டி, வாழ்க்கைனு ஒண்ணு இருக்கே, அதைப்பத்தி யோசிக்க வேண்டாமா? என்ன பண்றதுண்ணே தெரியலை. மொதல்ல, இதெல்லாம் ஒனக்கு எழுத வேண்டாம்னுதான் நெனச்சேன். அப்புறம் மனசுகேக்கலை. யார்கிட்டயாவது கொட்டணும்னு தோணித்து. அதான் எழுதினேன். பகவான் இப்படித்தான் இருக்கணும்னு எழுதிட்டான். என்ன பண்றது? சரி, போறும், என் புலம்பலை நிறுத்திக்கிறேன். அண்ணா, மன்னிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லு. நீ உடம்பைப் பாத்துக்கோ.
அன்புடன், சாரு / 27-June-1980
#####
ஜூலை 18, 1980
அன்பு மகள் சாருவுக்கு,
அம்மாவின் ஆசிகள். உன் கடிதம் கிடைத்தது. உன் அண்ணாவும், மன்னியும் சௌக்கியம். நட்டுவும் கடைசிவருடப் பரீட்சைக்குப் படிச்சிண்டிருக்கான்.
நீயும் உன் ஆத்துக்காரரைப் பற்றி ஏதேதோ எழுதி இருந்தாய். எல்லாரும் பத்துப் பொருத்தமும் பார்த்துத்தான் நல்லபடி கல்யாணம் பண்ணி வைக்கிறோம். ரசனைங்கிறது அவாவா சம்பந்தப்பட்ட விஷயம். ஒனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரிலை. உன் அப்பா சாகும்போது, ஒனக்கு மூணுவயசு. உன் அண்ணாவுக்கு பத்தொம்போதோ, இருபதோ இருக்கும். பாதில படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சான். நான் பக்கத்துல இருந்த குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். இதை வச்சுத்தான் நம்ப குடும்பம் ஓட ஆரம்பிச்சுது.
ஆனா உனக்கு ஒரு குறையும் தெரியாம ரொம்பச் செல்லமா வளர்த்தோம். ஒனக்கு, படிப்போட, பாட்டு, டான்ஸ், தையல் எல்லாம் சொல்லிக்கொடுத்தோம். நல்ல எடத்திலேர்ந்து வந்த வரன், நன்னா விசாரிச்சுத்தான், சங்கருக்கு ஒன்னை கல்யாணம் பண்ணி வச்சோம். மாப்பிள்ளையும் உன்னைக் கூட்டிண்டு போறதுக்கு முன்னாடி, எங்கிட்டயும், உன் அண்ணா மன்னிகிட்டயும் "கவலைப்படாதீங்கோ, சாருவைக் கண்கலங்காமப் பாத்துக்கறேன்"னு சொன்னார். கல்யாணதுக்கு வந்தவா எல்லாரும், "சாரு ரொம்ப அதிர்ஷ்டசாலி, நல்ல எடத்துல வாக்கப்பட்டு போயிருக்கா"னு சொல்லும்போது எங்களுக்கெல்லாம் ரொம்பப் பெருமையா இருந்தது.
ஆனா நீ இப்படி மாப்பிள்ளைமேல குத்தம்சொல்லி எழுதியிருக்க. அவர் வளர்ந்த சூழல் அப்படி இருக்கலாம். சின்ன வயசுதானே. பரம்பரை பரம்பரையா பிசினஸ்ல ஊறின குடும்பம். இப்போ நன்னா பிசினஸ வளர்த்தா பின்னால நன்னா இருக்கலாம்னு நெனச்சிருப்பார். அதனால மத்த விஷயத்துல அவ்வளவா ஈடுபாடோ ரசனையோ இல்லாம இருக்கலாம். ஆனா, நீ என்னமோ அவர் ஒன்னை ரொம்பக் கொடுமை பண்றமாதிரி எழுதியிருக்க. ரொம்பக் குழந்தைத்தனமா இருக்கு.
கல்யாணம் ஆகி மூணுமாசம்தானே ஆறது. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அவர் உன்னைப் புரிஞ்சுக்க முடியலைன்னா, நீ அவரைப் புரிஞ்சுண்டு அனுசரணையா இரேன். எதுக்கு அவரையே எல்லாத்துக்கும் எதிர்பார்க்கிற? அவர் பேசலைன்னா என்ன, நீயா போய்ப் பேசு. ஒனக்கு டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் தெரியும். அவரோட ஆஃபிசுக்குப் போயி ஏதாவது வேலையை இழுத்துப் போட்டுண்டு பண்ணு. திட்டினாலும், கொட்டினாலும் வாங்கிக்கோ. தப்பே இல்லை.
நான் பார்த்தவரையில் அவர் அப்படி ஒண்ணும் கல்நெஞ்சுக்காரர் மாதிரி தெரிலடி சாரு. நம்ப நட்டுகிகிட்ட "படிச்சு முடிச்சதும் சொல்லு, தெரிஞ்ச எடத்துல வேலைக்கு ஏற்பாடு பண்றேன்"னு எம் முன்னாடிதான் சொன்னார். மனுஷாளை அனுசரிச்சுப்போற தன்மை ஒன் ஆத்துக்காரருக்கு நன்னாவே இருக்கு. புருஷா வெளில அதிகமா புழங்கறதால, அவாளுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதையெல்லாம் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சுண்டே இருப்பா. ஒனக்கு ரொம்ப எடம் கொடுத்து, சுயநலக்காரியா வளத்துட்டோமோன்னு எனக்கு இப்போ கவலையா இருக்கு.
நீ மனசு வச்சா எல்லாம் மாறும். எறும்பு ஊரக் கல்லும் தேயும்னு சொல்றதில்லையா? அதனால நீ மாறு, அவரும் மாறுவார். இது ரொம்பச் சின்னவிஷயம். கவலைப்படாதே. ஒனக்குக் கற்பூரபுத்தி. சட்டுனு எல்லா விஷயத்தையும் புரிஞ்சுப்ப. அதுனால பார்த்து நடந்துக்கோ.
இத்துடன் திருச்செந்தூர் இலைவிபூதிப் பிரசாதம் அனுப்பிச்சிருக்கேன். நீயும் தவறாம பூஜை புனஸ்காரம்லாம் பண்ணு. ஷேமமா இருப்ப. மாப்பிள்ளைக்கும் எனது ஆசீர்வாதங்கள்.
அன்புடனும், ஆசீர்வாதங்களுடனும், அம்மா / 28-July-1980
#####
Received - December 7, 2013@12:35:04AM
ஹாய்... சாரும்மா, எப்படி இருக்க, மாம்? அப்பா எப்படி இருக்கார். லாஸ்ட் ஒன் மன்த்தா ஜெக்தீஷ் வியர்டா நடந்துக்கறான்மா. அல்ரெடி இதுபத்தி ஒனக்கு இமெயில் பண்ணியிருக்கேன். ஐ திங் ஹீ இஸ் ஹாவிங் அஃபயர் வித் ஷர்லி. அவ அவனோட ஆஃபிஸ் செக்ரட்ரி. என்னாச்சுன்னா, ரெண்டுநாள் முன்னால, ஒரு பெரிய வைன் ஹாம்பர் வாங்கிக் கொடுத்துட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தான். ஹீ இஸ் அப்டு சம்திங். ஐ வான்ட் டு டாக் டு ஹிம். அதான் ஓங்கிட்ட கன்ஸல்ட் பண்ணிட்டு அவங்கிட்ட பேசலாம்னு இருக்கேன். ரிப்ளை ஸூன் - லவ் மிருது.
#####
Sent - December 8, 2013@09:35:14PM
டியர் மிருதுளா - என்னாச்சு ஒனக்கும் ஜெக்தீஷுக்கும்? ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் ஒருத்தரை ஒருத்தர் நன்னாப் பழகி புரிஞ்சதுக்கப்புறம்தானே, கல்யாணம் செஞ்சுண்டீங்க? நீயும் ஜெயும் அமேரிக்கால சந்தோஷமா இருக்கற மாதிரித்தானே எனக்கும், உங்கப்பாவுக்கும் இமெயில் பண்ணினே! போட்டோலாம் அனுப்பினியே! இப்ப என்ன திடீர்னு? விவரமா சொல்லு - அன்புடன் சாரும்மா.
#####
Received - December 21, 2013@11:05:04AM
ஹாய் சாரும்மா... கரெக்ட். கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாம் நல்லாத்தான் இருந்தது. இப்ப கொஞ்ச நாளா என்னவோ லாக்கிங். முன்னாடி எல்லாம் நாங்க வாராவாரம் தினுசுதினுசா ரெஸ்டாரண்ட் போவோம், சினிமா பார்ப்போம். பாரா கிளைடிங், பஞ்சி ஜம்பிங்க்லாம் போவோம். டெய்லி ரேண்டுபெரும் ஒரு அஞ்சு மைலாவது சைக்கிள் ரைட் பண்ணுவோம். அதுக்குகூட இப்போலாம் ஜெ வரமாட்டேங்கிறான். இப்பெல்லாம் அவன், பிசினஸ், பிசினஸ்னு எங்கயெல்லாமோ சுத்தறான். அந்த ஷெர்லியும் ஜெ கூடவே எல்லா எடத்துக்கும் போறானு நினைக்கிறேன். எங்களுக்குள்ள இப்ப பேச்சு இல்லை.
ஐ ஃபீல் வெரி இன்செக்யூர்ட்.
ஜெக்தீஷ் வாஸ் இன் ஹை பேயிங் ஜாப். திடீர்னு அதை விட்டுட்டு, ஏதோ ஸ்டார்ட்டப் கம்பெனி ஆரம்பிச்சுட்டு பித்துப்பிடிச்சவன் மாதிரி அலையறான். நானும் வேலைக்குப் போறேன். எனக்கும் ஓரளவு டீசண்ட் சாலரி வருது. இவன் எதுக்கு அந்த வேலைய விடணும்? பிசினஸ் பண்றேனு அலையணும்? என்கிட்டயும் முழுசா எந்த டீடெய்லும் சொல்லமாட்டேங்கிறான். இதைப்பத்தி கேட்டு, அன்னிக்கு ஒரு இமெயில் ஜெக்கு அனுப்பினேன், அதுக்கு, ஒனக்கு ஒண்ணும் புரியாது, இப்போ என்னால எதுவும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண முடியாதுன்னு ரெண்டு நாள் கழிச்சு ரிப்ளை பண்றான். எனக்கு ரொம்பக் கோவம் வந்துடுத்து. வாட் அன் இன்சல்ட். நவ் ஐ ஹாவ் நோ ஆப்ஷன். ஐ ஆம் ப்ளானிங்க் டு டாக் டு த லாயர். – லவ் மிருது.
#####
Sent - December 21, 2013@08:35:56AM
டியர் மிருது - நீ ரொம்ப அவசரப்படற. அப்பாவும், நானும், நீ சாஃப்ட் ஆன பொண்ணா இருக்கணும்னுதான் ஒனக்கு மிருதுளானு பேர் வச்சோம். நீ என்னடான்னா இப்படி ஹெட்ஸ்ட்ராங்கா இருக்க! நீ எழுதின இந்த இமெயில அப்பாகிட்ட காண்பிச்சேன். மிருது இன்னும் கொழந்தையாவே இருக்காளேன்னு வருத்தப்பட்டார். சினிமாக்குப் போறதும், ஓட்டல்ல சாப்பிட்றதும்தான் சந்தோஷமான வாழ்க்கையாடா? அப்புறம், நீ என்னமோ அவன் யாரோடயோ தப்பாப் பழகறதா எழுதிருக்க. அப்படில்லாம் ஒண்ணும் இருக்காது. நன்னா விஜாரி. சந்தேகம்கறது கொடுமையான வியாதி. நாங்க பார்த்த வரையில் ஜெ ரொம்பப் பொறுப்பானவன்தான். அனாவசியமா சந்தேகப்படாதே! நன்னா விசாரிச்சு உண்மையை எழுது. - அன்புடன் சாரும்மா.
#####
Received - February 14, 2014@01:15:45AM
ஹாய்... சாரும்மா - கரெக்ட். என்னோட சந்தேகம் தப்பு. இங்க உள்ள ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் விசாரிச்சதுல, ஜெ இஸ் நாட் கோயிங் வித் ஷெர்லினு சொல்லிட்டாங்க. ஐ ஆம் ஸோ ரிலீவ்ட். நூறு பர்சண்ட் ஜெம் ஆப் எ பெர்ச்ன் ஜெ அப்படின்னு தெரியறது. அந்த வைன் ஹாம்பர் யாரோ வென்ச்சர் காபிடல் பண்றவனுக்கு வாங்கிக் கொடுத்தானாம். சாரிம்மா. ஐ மிஸ்டுக். ஆனா, ஸ்டில் ஹீ இஸ் நாட் யூஷுவல் ஜெ. ரொம்ப இண்டிஃபரென்ட்டா இருக்கான். - அன்புடன் மிருது.
#####
Sent - February 14, 2014@10:15:45AM
டியர் மிருது - சந்தோஷமா இருக்கு. நான்தான் சொன்னேனே, ஜெக்தீஷ் அப்படிப்பட்ட ஆள் இல்லைனு.. அவன் முன்னமாதிரி இருக்கலைங்கற. ஆனா நீ அப்படி இருக்கியா? நீயும் ஒன்னோட வேலை, உன் ஆஃபிஸ்னு போயிடற, ஜெ வாழ்க்கைல இன்னும் கொஞ்சம் முன்னேறணும்னு பாக்கிறான். அதுவும் அமேரிக்கால இந்த மாதிரி பிசினஸ் விஷயங்கள் பண்றது சுலபங்கறதால, ஜெ முயற்சி பண்றது ஒண்ணும் தப்பில்லியே.
பல விஷயங்களை தம்பதிகளுக்குள்ள பங்குபோட்டுக்கணும் மிருது. அப்படிப் பங்கு போடும்போது, சிலசமயம் நீ இழக்கவேண்டியது நிறைய இருக்கும். ஈகோ பார்க்காம இருந்தின்னா, அது ஒண்ணும் பெரிய விஷயமாவே தெரியாது. நாளைக்கு ஒனக்கு குழந்தை, குட்டினு வரும்போது இதெல்லாம் ரொம்ப சுலபமாப் போயிடும். ஒனக்கு சைக்கிள் ஓட்டறது புடிக்குமே. நம்ம வாழ்க்கையும் சைக்கிள் மாதிரித்தாண்டி. பின் சக்கரம் தடையில்லாம ஓடினாத்தான், முன்சக்கரம் ஓடும். அதுனால நீ பின்னாடி இருந்து ஜெக்கு ஒரு உந்துசக்தியா இரு. விட்டுக்கொடுத்து வாழறதுதான் வாழ்க்கை. விட்டுட்டு போயி வாழக்கூடாது. அப்படி வாழவும் முடியாது. புரிஞ்சுக்கோ. அப்புறம், வெரி ஹாப்பி வேலன்டைன்ஸ் டே - அன்புடன் சாரும்மா.
#####
Received - February 15, 2014@09:15:45AM
ஹாய் சாரும்மா - சாரிம்மா, நீ இன்னும் ஓல்ட் தாட்ல இருக்க. அது எப்படி நான்மட்டும் விட்டுக்கொடுத்துப் போகணும்? ஈக்வல் ரைட்ஸ் எங்களுக்கு மட்டும் இல்லயா? ஜெ எப்படி வேணாலும் இருக்கலாம், ஆனா நான் அப்படி இருக்கக்கூடாது! இது என்னம்மா நியாயம்? நான்மட்டும் பங்குபோடும்போது ஏன் ரொம்ப இழக்கணும்? இட்ஸ் ஃபன்னி - மிருது.
#####
Sent - February 15, 2014@10:15:45PM
டியர் மிருது - நீ புத்திசாலினு நெனச்சேன். இல்லேன்னு புரியறது. அது என்ன தம்பதிக்குள்ள ஈகோ? எப்போ நீ வித்தியாசம் பாக்கறியோ, அப்பவே அங்க அன்பு இல்லைனு ஒனக்குப் புரியலை? உடம்பு தனியா இருந்தாலும், உள்ளத்தில ஒண்ணா இருக்கறதுதானே, ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃபுக்கு இருக்க வேண்டிய குணம். ஈக்வல் ரைட்ஸ்னா, ஹஸ்பண்ட் செய்யறதெல்லாம், வொய்ஃபும் செய்யணும்கறதா? ஒங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வரலாம். ஆனா, எந்த விஷயத்துக்காக எதிரெதிர் கருத்துக்கள் இருந்ததோ, அதை அந்த விஷயத்தைத் தாண்டி உள்மனசுக்குள் எடுத்துக் கொண்டுபோனால் அன்பு எப்படி இருக்கும்? வெறுப்புதான் மிஞ்சும்.
டாலரென்ஸ் லெவலை வளர்த்துக்கோ. ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் உங்களுக்குள்ள இருக்கணும். இதுல யார் ஜெயிச்சோம்ங்கறது முக்கியம் இல்லை. ஜெயிச்சா மமதை வரும். அகங்காரம் வளரும். அனுசரணையா, அன்பா இருக்கறது அடிமைத்தனம்னு நிறையப் பேரு நெனைச்சுண்டு இருக்கா. ஏன், ஒன் வயசுல நானும் அப்படித்தான் இருந்தேன்.
மிருது, நீ ரொம்பப் படிச்சவ. உனக்கு உலக விஷயங்கள்ள என்னைவிட அனுபவம் ஜாஸ்தி. எமோஷனல் ஆகாம, பொறுமையா யோசிச்சுப் பாரு. உனக்குப் புரியும். நான் ஒண்ணு சொல்றேன், கேப்பியா? நீ கொஞ்சநாள் உன் வேலைலேந்து லாங்லீவு எடுத்துக்கோ. ஜெயோட ஆபிசுக்குப் போ. அவனோட பிசினஸ்ல ஒனக்குத் தெரிஞ்சதை ஹெல்ப் பண்ணு. நிறைய விஷயம் புரியாதுதான். கத்துக்கோ.
அப்புறம்.... நான் உன் வயசுல இருந்தபோது எனக்கும் உன்னைமாதிரி வருத்தங்கள் இருந்தது. ரொம்பநாள் இதைப் புரிஞ்சிக்காம இருந்ததால, எனக்கும் உங்க அப்பாக்கும் பெரிய இடைவெளி விழுந்தது. ஒரு ஆறுமாசம்போல பேசாம அம்மா வீட்டுக்குப் போய்ட்டேன். அவர் என்னோட பிடிவாதத்துக்காக, எல்லாத்தையும் விட்டார். சாரும்மா, சாரும்மானு எம் பின்னாடியே அவரைச் சுத்த வச்சதுல எனக்குப் பரமசந்தோஷமா இருந்தது. ஜெயிச்சுட்டேன்னு ஒரு திமிர் இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் வாழ்க்கைல நாங்க பட்ட இழப்புகள் கொஞ்சநஞ்சம் இல்லை. அப்பதான், அம்மா சொன்ன விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. என்னை நான் மாத்திண்டேன். விழுந்த அவரோட பிசினஸைத் திரும்ப நல்லபடியா கொண்டுவர்றதுக்கு ரொம்பப் பாடுபட்டோம். அவருக்கு அதில உறுதுணையா இருந்தேன்.
எத்தனையோ இருக்கு சொல்லறதுக்கு. ஒண்ணு செய். எனக்கு என் அம்மா, அதாவது உன் பாட்டி எழுதின கடிதங்களை, ஸ்கேன் பண்ணி இத்துடன் அட்டாச் பண்ணி இருக்கேன். எங்கம்மா எனக்குச் சொன்னதைத்தான், இப்போ உங்கம்மா உனக்கு சொல்றா. படிச்சுப்பாரு, உனக்கும் புரியும். அன்புடன் - சாரும்மா
#####
Received - March 16, 2014@10:15:45AM
ஹாய் சாரும்மா - சாரி.. ரொம்ப நாளா நான் ஒனக்கு இமெயில் பண்ணலையே தவிர, நீ எழுதினத நான் நன்னாப் புரிஞ்சிண்டேன். இப்போ நானும் ஜெயும் பழையபடி ஆயிட்டோம். ஜெ கம்பெனிக்கு வென்ச்சர் காபிடல் பண்றவா ஏதோ ஒப்பந்தம் போட்டதால், இந்த பிசினஸ்பத்தி யாருகிட்டையும் எதையும் சொல்லமுடியாத நிர்ப்பந்தத்தில் இருந்தான். அதுனாலதான் என்கிட்ட இதைப்பத்தி அவனால விவரமா எதுவும் சொல்ல முடியலை. அதான் நீயும், அப்பாவும் பலதடவை ஃபோன் பண்ணியும், அவனால ஒங்க கிட்டயும் சரியா பேசமுடியல.
இப்போ எங்க ப்ராடக்ட் மார்க்கெட் பண்ண ஆரம்பிச்சாச்சு. நல்ல ரெவ்யு வருது. நான் என்னோட பழைய வேலையை விட்டுட்டேன். ஜெக்தீஷ் கம்பெனில நான் இப்போ ஜாயிண்ட் ஓனர். ஷெர்லி எங்க பிசினஸ்க்கு ரொம்ப ஹெல்ப் பண்றா. அடுத்த மாசம், நானும் ஜெயும் இந்தியா வர்றோம். நான்தான் அவசரப்பட்டு, ஜெ பத்தி தப்புத்தப்பா நெனச்சுட்டேன்.
அப்புறம் சாரும்மா, பாட்டியோட லெட்டர்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது. காலம் எப்படி மாறினாலும், லவ் அண்ட் கம்பாஷன்பத்தி பாட்டி சொல்லியிருக்கிறது எல்லா காலத்துக்கும் பொருத்தமா இருக்கும்மா. அதை நீயும் அனுபவப்பட்டு எனக்குச் சொன்னவிதம் சூப்பர். எவ்வளவு பெரிய தப்பு செய்ய இருந்தேன். தாங்க்யூ ஸோ மச். மே மாசம்தான் இங்க மதர்ஸ் டே. ஆனா எனக்கு இன்னிலேந்து என்னிக்கும் மதர்ஸ் டே தான்.
அப்புறம் நான் பாட்டியோட லெட்டர்களையும், உன்னோட இமெயில் எல்லாத்தையும், பத்திரப்படுத்தி வச்சுக்கப்போறேன், என் கொழந்தைக்கு ஃப்யூச்சர்ல தேவைப்பட்டால், ஹெல்ப்ஃபுலா இருக்கும். தாங்க்யூ சாரும்மா. - லவ் மிருது.
#####
சேகர் சந்திரசேகர், சிகாகோ, இல்லினாய்ஸ் |