உணவிலிருந்து எண்ணம், சொல், செயல்....
மகாபாரதப் போரின் பத்தாம் நாள் பிதாமகர் பீஷ்மர் வீழ்ச்சியடைகிறார். அர்ஜுனன் ஏற்படுத்திய அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். போர் முடிந்தபின் வெற்றியடைந்த பாண்டவர்கள் அவரிடம் வாழ்த்துப் பெறுவதற்காக வந்தனர். பீஷ்மர் அன்போடு அவர்களை வாழ்த்துகிறார்.

வாழ்வில் என்ன ஒழுக்கங்களை அவர்கள் கைக்கொள்ள வேண்டும் என்று சாந்தி பர்வத்தில் அவர்களுக்கு போதித்தார். பணிவுடன் அதைப் பஞ்ச பாண்டவர்கள் கேட்டுக் கொண்டிருக்க, திரௌபதி மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் நீர்வரச் சிரிக்கிறாள். அவளுடைய செயலாலே பாண்டவர்கள் கோபமும் வருத்தமும் அடைந்தனர். பீஷ்மர் பாண்டவர்களின் முகங்களைப் பார்க்கிறார். அவர்களது கோபம் அவருக்குப் புரிந்தது. திரௌபதியைப் பார்த்தார். அவள் இன்னமும் சிரித்தபடி இருந்தாள். அவள் எதற்குச் சிரிக்கிறாள் என்பதும் அவருக்குத் தெரிந்தது.


"குழந்தாய் திரௌபதி. நீ எதைச் செய்தாலும் அதற்குக் காரணம் இருக்கும். நீ சிரிப்பதன் காரணத்தை உன் கணவன்மார்களுக்குச் சொல்" என்று கூறினார்.

"பிதாமகரே! தருமவழியிலே போராடி வெற்றிபெற்ற பாண்டவருக்கு, எப்படி வாழ்வதென்று சொல்லும் நீர், அதர்மமே வாழ்க்கையாக இருந்த கௌரவருக்கு ஏன் எடுத்துச் சொல்லவில்லை? துரியோதனனின் சபையிலே துச்சாதனனால் நான் மானபங்கப்படுத்தப்பட்டபோது ஏன் பேசாமல் இருந்தீர்? என் கணவன்மாருக்கு 12 ஆண்டுகள் வனவாசம், ஓராண்டு அஞ்ஞாதவாசம் என்று துரியோதனன் கூறியபோது நீங்கள் ஏன் அவனுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்கவில்லை? பாண்டவருக்கு இப்போது ஏன் உபதேசிக்கிறீர்கள்? துரியோதனுக்கும், துச்சாதனனுக்கும் அவர்களது பேச்சுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்த புல்லர் கூட்டத்துக்குமல்லவா நீங்கள் போதித்திருக்க வேண்டும்?

"இடம்மாறி ஆள்மாறி நீங்கள் உபதேசம் செய்தால் நான் சிரிக்காமல் எப்படி இருப்பது? அரசசபையில் தர்மர் சொக்கட்டான் ஆடித் தன்னைத் தோற்றபிறகு என்னைப் பணயம் வைத்ததில் என்ன நியாயம் இருந்தது? அதை நீங்கள் ஏன் அன்று எதிர்க்கவில்லை? அப்போது புத்தி சொல்லாமல் இப்போது அதற்கு அவசியமில்லாத பாண்டவருக்கு அதைப் போதிக்கிறீர்களே என்று நினைத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை" என்று திரௌபதி சொன்னாள்.

பீஷ்மர் அதைக் கேட்டுச் சிரித்தார். "குழந்தாய்! நீ சரியாகவே சொன்னாய்! பல ஆண்டுகள் பழி பாவம் செய்த அரசர்க்குப் பணிசெய்து வாழ்ந்தேன். அவர்கள் கொடுத்த உணவை உண்டு வாழ்ந்தேன். அதனால் என் இயல்பான நேர்மையும் தர்மமும் என்னுள் புதைந்து போய்விட்டன. பாரதப்போரில் அர்ஜுனன் விடுத்த அம்புகளால் அந்தத் தீயரத்தம் வடிந்து, இயல்பான நல்ல குணங்கள் மேலெழுந்து வந்துவிட்டன. அதனால்தான் ஒழுக்கத்தைப் போதிக்கும் எண்ணம் வந்தது. பேசினேன்" என்றார்.

தீங்கு தடுக்கும் திறனில்லாதவனாக தான் ஆனதற்குத் தீயாரொடு வாழ்ந்ததும், அவர் தந்த உணவை உண்டதும்தான் காரணம் என்கிறார் பீஷ்மர். எத்தனை பெரிய உண்மை! "நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நம் எண்ணங்கள் அமையும். நம் எண்ணமே நல்வினை தீவினைகள் செய்யக் காரணம்" என்று சொல்லி உயிர்நீத்தார் பீஷ்மர்.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

(இந்தக் கதை 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டது. நன்றி: Sri Sathya Sai Books and Publications Trust, TamilNadu, Chennai.)

© TamilOnline.com