'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்யதேசங்களுள் சிறந்ததாகக் கருதப்படுவது. திருச்சியருகே அமைந்துள்ள புனிதத்தலம். அங்கே காவிரி இரு கிளைகளாகப் பிரிந்து சற்றுத்தூரம் சென்று பின் மீண்டும் ஒன்றுசேர்கிறது. இப்படி ஏற்பட்ட தீவில்தான் ஸ்ரீரங்கம் உள்ளது. ஆழ்வார்கள் பலரால் மங்களாசாஸனம் செய்யப்பட்டது. மொத்தம் 247 பாடல்களைப் பாடி அரங்கனை அவர்கள் தொழுதுள்ளார்கள். இளங்கோவடிகள், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், தியாகராஜர் என பலரும் போற்றிப் புகழ்ந்த தலம். பெருமாளுக்கு பெரியபெருமாள், நம்பெருமாள், அழகியமணவாளன் எனப் பல சிறப்புப் பெயர்களுண்டு. தாயார் ரங்கநாயகி.
பிரம்மனின் தவ ஆற்றலால் ரங்கவிமானம் பாற்கடலில் தோன்றியது. அதில் நாராயணனை எழுந்தருளச் செய்து அனுதினமும் வழிபட்டுவந்தார் பிரம்மா. பின் நித்ய ஆராதனை செய்யும் பொறுப்பைச் சூரியனிடம் ஒப்படைத்தார். பின்னர் சூரியவம்சத்தில் வந்த இக்ஷ்வாகு ரங்கவிமானத்தை அயோத்தியில் வைத்து வழிபட்டார். அந்த வம்சத்தில் தோன்றிய ராமபிரான், தன் முடிசூட்டு விழாவிற்காக இலங்கையிலிருந்து வந்திருந்த விபீஷணனுக்கு அதனைப் பரிசாக அளித்தார். இலங்கைக்குச் செல்லும் வழியில் காவிரிநதி விபீஷணின் கண்ணைக் கவரவே அதில் நீராட எண்ணினான். ஆனால் விமானத்தை என்ன செய்வது? அங்கே ஓர் அந்தணச் சிறுவன் முன்வந்து சுமையைத் தான் வைத்துக்கொள்வதாக வாக்களித்தான். விபீஷணனும் சிறுவனிடம் சுமையை ஒப்படைத்து விட்டு, நீராடி, தன் கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பிவந்து பார்த்தால் சிறுவன் விமானத்தை நிலத்தில் வைத்துவிட்டிருந்தான்.
பதறிய விபீஷணன் விமானத்தைப் பெயர்த்தெடுக்க முயற்சித்தான். முடியவில்லை. இதனால் கோபங்கொண்ட விபீஷணன் சிறுவனின் தலையில் குட்டினான். ஆனைமுகனாகத் தன் உருவைக் காட்டிய சிறுவன், மலைக்கோட்டையின் உச்சியில் விநாயகராக அமர்ந்தார். அரங்கனின் ஆலயம் காவிரிக்கரையில் அமையவேண்டும் என்பதற்காகவே இத்தகைய திருவிளையாடலை ஆனைமுகன் நிகழ்த்தியதாக வரலாறு. விபீஷணன் கலக்கத்துடன் பெருமாளை வேண்ட, "கவலை வேண்டாம்! நான் இங்கிருந்தே உன்னைக் கடாட்சிக்கிறேன்" என்று ஆசிர்வதித்து, இலங்கை இருக்கும் தெற்குத்திசை நோக்கிப் பள்ளிகொண்டார் பெருமாள்.
"குடதிசை முடியைவைத்து குணதிசை பாதம்நீட்டி வடதிசை பின்புகாட்டி தென்திசை இலங்கைநோக்கி"
என்று இதனைச் சிறப்பிக்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
பங்குனிமாதப் பௌர்ணமி அன்றுதான் விபீஷணன் இங்கே அரங்கனை எழுந்தருளச் செய்ததாக ஐதீகம். அதனால் அந்த நாளில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. சோழர், பாண்டியர், நாயக்கர் எனப் பல மன்னர்கள் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். இப்போது நாம் காணும் ஆலயஅமைப்பு 15, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட தெற்குவாயில் ராஜகோபுரத்தின் உயரம் 236 அடி. இது 13 அடுக்குகளைக் கொண்டது. இதற்கு முழுக்காரணமாக அமைந்தவர்கள் அஹோபில மடம் ஜீயர் சுவாமிகளும், காஞ்சி மஹா பெரியவரும்தான்.
பல மதில்கள் சூழ்ந்த கோயில் நகரம் ஸ்ரீரங்கம். மூன்று வெளிப்பிரகாரங்களில் கடைகள், வீடுகள், மடங்கள், சத்திரங்கள் அமைந்துள்ளன. வெளிமதில் 3000 x 2400 அடி நீளமுடையது. 21 கோபுரங்கள் இங்கு அழகுற அமைந்துள்ளன. கருவறையைச் சுற்றி ஏழு பிரகாரங்கள். ரங்கநாதர், ரங்கராஜாவாக பாம்பணைமீது பள்ளிகொண்ட கோலத்தில் எழிலுடன் காட்சிதருகிறார். கருவறை மேலுள்ள தங்கவிமானத்தில் பரவாசுதேவரின் தங்கவிக்கிரகம் உள்ளது. அவசியம் தரிசிக்கவேண்டியது இது. ஆயிரங்கால் மண்டபத்திற்கு வடமேற்கில் நாச்சியார் சன்னிதி. அழகே வடிவான ரங்கநாயகித் தாயார் மூலவராகவும், உற்சவராகவும் அருள்பாலிக்கிறார். தாயார் சன்னிதி வாசலில் மேட்டு அழகியசிங்கர் என்னும் நரசிம்மமூர்த்தி சன்னிதி உள்ளது. கம்பர் ராமாயணம் அரங்கேற்றியதுபோது, அதைத் தலையசைத்து ஆமோதித்த பெருமாள் இவர். சேஷராயர் மண்டபம், அங்கே குதிரைவீரர்களைக் கொண்ட தூண்கள், எதிரே அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம், வேணுகோபாலன் சன்னிதி போன்றவை காணத்தக்கவை.
ராமானுஜர் சன்னிதி அவசியம் தரிசிக்கவேண்டிய ஒன்று. அவருடைய பூதவுடல் இங்கு திருக்காப்பு செய்யப்பட்டிருப்பதாக ஐதீகம். இவருக்கு ஒவ்வோர் ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் அரைத்துப் பூசப்பட்டு ரூபம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது விரல்நகம், கண்கள் போன்றவற்றை இன்றும் தெளிவாகக் காணமுடியும். ராமானுஜர் பூதவுடலை உகுத்தபோது, ஜீவன் வைகுந்தம் சென்றாலும், உடல் தன்னைவிட்டுப் பிரியக்கூடாது என்ற அரங்கனின் விருப்பத்தி்ற்கேற்ப அது இங்கேயே வைக்கப்பட்டதாக ஐதீகம்.
மூன்றாம் பிராகாரத்தில் சந்திர, சூரிய புஷ்கரணி, கருடாழ்வார் சன்னிதி போன்றவை அமைந்துள்ளன. இங்கு மாதந்தோறும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், ஜேஷ்டாபிஷேகம், வைகுண்ட ஏகாதசி, பகல்பத்து, ராப்பத்து உற்சவங்கள், தெப்ப உற்சவம், பங்குனி உத்திரம் எனப் பல திருவிழாக்கள் விமரிசையாகக் நடத்தப்படுகின்றன.
சீதா துரைராஜ், ஒஹையோ |