திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்....
அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய இந்தப் பிரச்சனைக்கு வழி கிடைக்காவிட்டாலும் வடிகாலாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். எங்களுடைய மிக நெருங்கிய நண்பர், ஒரு கண்ணியமான, கருணைமிகுந்த மனிதர். நல்ல வேலையில் நிறையச் சம்பாதித்து வந்தார். ஓர் அமெரிக்கப் பெண்ணுடன் நட்புக் கொண்டிருந்தார். அவர் பெற்றோர்களுக்கு இந்த நட்பில் திருப்தி இல்லை. அவர்களைப் புண்படுத்த விரும்பாததால் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் தவித்தார். அந்தப் பெண்ணும் இவரை வற்புறுத்தாமல், அதேசமயம் இவருடைய வெற்றி, தோல்விகள் எல்லாவற்றிலும் கைகொடுத்து எதுவும் எதிர்பார்க்காமல், வாழ்ந்துவந்தாள். இருவரும் உத்தியோகக் கடமைகளால் 300 மைல் தூரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவருக்கு பெரிய ஆபரேஷன் இரண்டுமுறை நடந்தபோதும் அவள்தான் கூட இருந்து எல்லாம் செய்தாள். ஒருநாள் எங்கள் நண்பர் திடீரெனெ மாரடைப்பில் இறந்துவிட்டார். உயில் எதுவும் எழுதவில்லை. அவர் குடும்பத்தினரைப் பொருத்தவரை அந்தப் பெண்ணுக்கு எந்தவித உரிமையும் இல்லை. நண்பருடைய தங்கை குடும்பம் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். இந்திய கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். ஆனால், அவர்கள் எவரும் இந்தப் பெண்ணுக்கு ஒரு சல்லிக்காசுகூடத் தரவில்லை. எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி அந்தத் தங்கைக்குக் கடிதம் எழுதினோம், ஃபோன் செய்து பார்த்தோம், எதற்கும் பதில் இல்லை. அந்த அமெரிக்கப்பெண் எங்களை ஆதங்கத்துடன் கேட்கிறாள் 'இதுதான் உங்கள் ஹிந்துக் கலாசாரமா?' என்று. இதற்குப் பதில் என்ன?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே...

அழகாக, சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நட்பின் அழகும், மதம், இனம் கடந்த உறவுகளுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும், உங்கள் மனிதாபிமானமும் இங்கே வெளிப்படுகிறது. ஆனால், உங்களுடைய இத்தனை நல்ல கோட்பாடுகளும், என்னுடைய கருத்துக்களும் சட்டத்தின் பார்வையில் சட்டை செய்யப்படுவதில்லை. இது ஒரு காந்தர்வ மணம். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லை. கலாசாரத்தில் - தவறாக எழுதுகிறேன் - கலாசாரம் என்ற மேற்பார்வையில், குடும்ப அங்கத்தினர்கள் உண்மையான அன்பை எடைக்கல்லில் கூட ஏற்ற மறுப்பார்கள். இது எதிர்பார்த்ததுதான்.

உங்கள் கடிதத்தில் எனக்குப் பல விஷயங்கள் தெரியவில்லை.

1. உங்கள் நண்பர் குடும்பத்துடன் அவரின் வாழ்க்கைத்துணையாக இருந்த பெண்மணிக்கு நெருங்கிய உறவு இருந்ததா?
2. உங்கள் நண்பருக்கு அமெரிக்காவில் உள்ள சகோதரியைத் தவிர்த்து, நெருங்கியவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா?
3. உங்கள் நண்பருக்கு இங்கே இருக்கும் சொத்துக்கள் தவிர்த்து இந்தியாவிலும் ஏதேனும் இருக்கிறதா?
4. உயில் என்று எதுவும் எழுதாவிட்டாலும், ஏதாவது பணம் குறித்த இன்ஷூரன்ஸ், வங்கி டெபாசி தனக்கடுத்து உரிமை என்று அவர் உறவினர் பெயரை எழுதியிருக்கிறாரா?
5. உங்கள் நண்பர், அவருடைய துணை இருவரும் நடுத்தர வயதினரா, முதியவரா? அவர்களுக்குக் குழந்தை ஏதுமில்லை என்று நானே அனுமானிக்கிறேன். இருந்திருந்தால், இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் இது கலாசாரத்தைச் சார்ந்தது அல்ல. சாட்சியைப் பொறுத்தது. சட்டத்தின் அங்கீகாரம் வெளியில் காணும் சாட்சிகளைப் பொறுத்தது. தனிமனிதரின் அங்கீகாரம் உறவுகளைப் பொறுத்து ஏற்படும் மனச்சாட்சியை பொறுத்தது, உங்கள் நண்பரின் சொத்துக்களுக்கு உரிமைபெற்ற உறவினர்களை இந்த மனச்சாட்சி உசுப்பவில்லை என்றால் நாம் இதற்குமேல் ஒன்றும் செய்வதற்கில்லை.

அந்த உறவினர் நினைத்திருக்கலாம், இப்படி :

* இது அங்கீகரிக்க முடியாத உறவு. குடும்பத்தின் தன்மானத்திற்கு நிலைகுலைவு ஏற்பட்ட உறவு. பெற்றோருக்குத் தலைகுனிவு.
* துணையாக வாழ்ந்தவரும் வேலையில் இருந்திருக்கிறார். இந்தப் பணம் தேவையில்லை.
* இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். நிச்சயம் வேறு ஏதோ வகையில் அவர் சேர்த்திருந்த தொகை அந்தப் பெண்மணிக்குச் சேர்ந்திருக்கும்.

என்று எத்தனையோ வித காரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்கள் நண்பருடன் பல வருடம் வாழ்ந்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மோதிரம், மாங்கல்யம் என்ற எந்தக் கட்டுக்கோப்பையும் வற்புறுத்தாமல் வாழ்ந்த அந்தப் பெண்மணி ஒரு தனிரகம். பணம் பெரிதாகப் பட்டிருந்தால் உயிலை எப்போதோ எழுத வைத்திருப்பார். உங்களைப்போன்ற நண்பர்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். ஒரு கண்ணியமான மனிதருடன் இருந்த அருமையான உறவுதான் அவருடைய சொத்துரிமை. She can continue to lead her life with Diginity and Pride.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com