'திருக்குறள் சரவெடி' அத்விகா
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை மினியாபோலிஸ் தமிழர்கள் 'திருக்குறள் சரவெடி' என்று அழைப்பதில் தவறில்லை. மினசோட்டா தமிழ்ச்சங்கமும் தமிழ்ப்பள்ளியும் இணைந்து ஜூன் 13ம் தேதியன்று ரிட்ஜ்டேல் நூலகத்தில் நடத்திய திருக்குறள் போட்டியில் அத்விகா அத்தனை திருக்குறளையும் விளக்கத்துடன் கூறி புதிய சாதனை படைத்துள்ளார்.

கடந்த மூன்றாண்டுகளாக மினியாபோலிஸ் நகரில் திருக்குறள் போட்டி நடைபெற்று வருகிறது, போட்டியின் முதலாண்டில், ஐந்தே வயதான அத்விகா 110 குறள்களை விளக்கத்துடன் சொல்லி 110 டாலர் பரிசுபெற்றார். கிடைக்கும் பரிசுத்தொகையில், அவள் விரும்பிய அமெரிக்கன் டால் பொம்மையை வாங்கிக்கொள்ளலாம் என்று தந்தை கொடுத்த ஊக்கத்தில் பரிசும் வென்றார், பொம்மையும் வாங்கினார். இரண்டாம் ஆண்டுப் போட்டியில் அறத்துப்பாலின் 320 குறள்களைப் பொருளோடு கூறினார். மூன்றாமாண்டுப் போட்டியில் மீதமுள்ள 900 குறள்களையும், பொருளையும் தமிழில் கூறி 1330 அங்கிருந்தோர் விழிகளை விரியவைத்தார்.

முன்னதாக, வாஷிங்டனில் நடைபெற்ற புறநானூறு மாநாட்டில், ஐந்து புறநானூற்றுப் பாடல்கள் பாடியிருக்கிறார். 'புறநானூறும் பெண்வீரமும்' என்ற தலைப்பில் அதே விழாவில் ஆறு நிமிடம் உரையாற்றியும் உள்ளார். மினசோட்டா தமிழ்த்திறன் போட்டியில், நான்கே வயதில் அவ்வையின் ஆத்திசூடி 100, பாரதியின் ஆத்திசூடி 100 மற்றும் 20 குறள்கள் என அமர்க்களமாகத் தொடங்கியது மறக்கவொண்ணாதது.

பெற்றோர் சச்சிதானந்தன்–பிரசன்னா, அருணகிரிநாதர் பாடிய தலமான அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தாயார் பிரசன்னா மகளுக்குத் தமிழார்வத்தை உருவாக்கியதுடன், இன்பத்துப்பால் உட்பட அனைத்துக் குறட்பாக்களையும் மழலைக்குப் புரியும்வகையில் சொல்லிக் கொடுத்துள்ளார். ஊடல் என்பதை 'செல்லச்சண்டை' எனவும், தலைவன் தலைவிக்கு இணையாக அப்பா-அம்மாவையும் எளிதாகச் சொல்லிப் பயிற்சியளித்துள்ளார். பெற்றோர் ஏதேனும் கோபமாகக் கூறினால், அவர்களுக்கே திருக்குறளை நினைவுபடுத்துகிறார்!

இளந்தளிர் அத்விகா மேலும் சாதனைகள் புரியத் தென்றல் வாழ்த்துகிறது!

சின்னமணி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com