கல் ராமன்
கல் ராமன் என்று அறியப்படும் கல்யாணராமன் ஸ்ரீனிவாசன் சென்னை அண்ணா பொறியியல் கல்லூரியில் படித்தபின் Tata Consulting Engineers குழுமத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார். ஸ்காட்லாந்தில் சிலகாலம் பணி செய்தபின் அமெரிக்காவின் வால்மார்ட் (Wal-Mart) நிறுவனத்துக்கு வந்தார். அங்கே 12 ஆண்டுகளில் 18 முறை பதவியுயர்வு பெற்றதே ஒரு சாதனைதான். அதற்குப் பின்னர் அவர் வகித்த பதவிகளைப் பாருங்கள்: Groupon (COO), DrugStore.com (CEO), eBay (Vice President), Amazon (Senior VP), GlobalScholar (Founder CEO). தற்போது Xome.com என்ற மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் CEO. தமிழ் நாட்டின் நெல்லை மாவட்டத்தில் சுமார் 96,000 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார்; இலவச ஊனமுற்றோர், முதியோர் விடுதிகளை ஆதரிக்கிறார் என்பவை அவரைப்பற்றிய அறிமுகத்தை முழுமைப்படுத்துகின்றன.

15 வயதிலேயே தந்தையை இழந்து, ஒருவேளை உணவுக்கே சிரமப்பட்ட போதிலும் தாயாரின் தியாகத்திலும் வழிகாட்டலிலும் வாழ்க்கையை அறவழியில் அமைத்துக்கொண்ட கல் ராமன் அவர்களோடு பேசுவோம், வாருங்கள்....

*****


தென்றல்: உங்கள் சிறுவயதின் பிரியமான நினைவுகள் எவை?
கல் ராமன்: நான் மூன்று அல்லது நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். நல்ல மார்க் எடுத்தாலும் முதல்மாணவனாக வரமுடியவில்லை. என் அம்மா இரண்டாவது, மூன்றாவது ரேங்க் வாங்குவதில் தவறில்லை, ஆனால் முதல் ரேங்க் வாங்குபவரைத்தான் எல்லாருக்கும் நினைவில் இருக்கும், மற்றவர்களை மறந்துவிடுவார்கள் என்பார். என்னைவிட அதிக மார்க் வாங்கும் ஒரு பெண்ணும், பையனும் வகுப்பில் இருந்தனர். அவர்களிடம் எனக்குப் பொறாமை கிடையாது. ஆனால் என்னால் அவர்களை முந்தமுடியாது என நினைத்தேன். ரொம்பக் கஷ்டப்பட்டுப் படித்து அடுத்த தேர்வில் அந்தப் பெண்ணை முந்திவிட்டேன். அந்தப் பையனை முந்தமுடியவில்லை. ஒரு கட்டத்தில் அவனும் வகுப்பைவிட்டுச் சென்றுவிட்டான். நான் முதல் ரேங்க் எடுத்தேன். என் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். நான் அவரிடம் இதில் என்னுடைய வெற்றி என்று எதுவும் இல்லை. போட்டி குறைந்ததால் தன்னிச்சையாக நடந்தது என்பேன். I just humbled myself by saying that I was the tallest midget. 'ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை' என்பார்களே அதுபோல. பிறகு எட்டாம் வகுப்பில் வேறு ஊரில், ஒரே பள்ளியில் நானும் அவனும் படித்தோம். நான் அதிக கவனத்துடன் படித்திருக்கவேண்டும். ஒவ்வொரு தேர்விலும் அவனைவிட அதிக மார்க் எடுத்தேன். முதல் ரேங்குக்கு இப்பொழுதுதான் மரியாதை என நினைத்தேன். எங்கள் பள்ளியில் நான்தான் பெரிய ஆள். உலகத்திலேயே பெரிய புத்திசாலி நான் என்பதல்ல. ஆனால் ஆசிரியர்கள் என்னிடம் மிக அன்பாக இருந்தனர்.

கே: அற்புதம். (Michael) Jordan Effect இதுதான். ஒரு சவால் வந்தால் அதை தகர்த்தெறிவது. மிகச் சிலரிடமே இந்த மனோபாவம் உள்ளது.
ப: அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுத்ததுதான். ஆனால் ஒன்று, இடைவிடாது நம் குறைகளைச் சரிசெய்து கொள்ளும் முயற்சிதான் வாழ்க்கை (Life is a relentless pursuit of minimizing imperfections). ஏனென்றால் பெர்ஃபெக்‌ஷன் வரவே வராது. அது வந்துவிட்டால் இறைவனைச் சென்றடைய வேண்டியதுதான். அதற்கப்புறம் இங்கு வேலையில்லை.



கே: உங்கள் இன்ஸ்பிரேஷன் யார், யார்?
ப: என் அம்மாதான். என் அப்பா இறந்தபோது அம்மாவுக்கு 39, 40 வயது. 5 குழந்தைகள். எட்டாம் வகுப்பு படித்திருந்தார். கிராமத்தில் இருந்தார். என் அண்ணனை அப்பாவின் இடத்தில் வேலைக்கு அனுப்பியிருக்கலாம். என்னையும் ஏதாவது குமாஸ்தா வேலைக்குப் போகச் சொல்லிவிட்டு அப்பாவின் பென்ஷனை வாங்கிக்கொண்டு, விதியை நொந்தபடி சாதாரணமாக வாழ்ந்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை. "நான் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. சரியாகச் சாப்பிட, உடுத்த வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. கூரை ஒழுகினாலும் பரவாயில்லை. எல்லாரும் நன்கு படிக்கவேண்டும். யாரும் படிப்பை நிறுத்தவேண்டாம்" என்றார். படிப்புதான் நம்மைக் கடைத்தேற்றும் என்பது அவரது நம்பிக்கை. விடாமுயற்சியை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பலபேர் முயற்சியின்மையால்தான் தோற்றுப் போகிறார்கள்.

நமக்கு வசதியில்லாவிட்டாலும் தர்மம் செய்யவேண்டும் என்பார் அம்மா. என் பாட்டியுடன் சேர்த்து வீட்டில் 7 பேர். 420 ரூபாய் பென்ஷன். சமயத்தில் வீட்டிலுள்ள பொருட்களை விற்கும் நிலை வரும். அப்பொழுதும் பிச்சைகேட்டு வருபவர்களுக்கு உணவளிப்பார். "ஏதோ இந்த வசதியையாவது பகவான் நமக்குக் கொடுத்திருக்கிறாரே" என்பார். "நம்மைவிட புத்திசாலிகளை, அதிகம் படித்தவரை, நல்ல குணம் படைத்தவரைக் கண்டு பொறாமைப்படு. ஆனால் நம்மைவிட அழகானவர்களை, பணக்காரர்களைக் கண்டு பொறாமைப்படாதே" என்பார். அம்மா பூஜை செய்வார்.

எனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. எங்கு வேண்டுமானாலும் நான் இதைச் சொல்வேன். நான் போர்டு மீட்டிங்குக்கூட எனது இஸ்கான் ஜபமாலைப் பையை (ISKCON chanting bag) எடுத்துப் போவேன். எனக்கு தெய்வநம்பிக்கை உண்டு என்பதையோ அல்லது நான் வறிய குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையோ சொல்லிக்கொள்வதில் எனக்குத் தயக்கம் கிடையாது. என்ன வேண்டிக்கொள்வீர்கள் என்று அம்மாவைக் கேட்பேன். ஏனென்றால் நான் கடவுளிடம் என்னுடைய 'கவர் டிரைவ்' பெட்டர் ஆகணும், நல்ல மார்க் வாங்கணும் என்று வேண்டிக்கொள்ள விரும்புவேன். அம்மா அதற்கு எப்பொழுதும் முழுநம்பிக்கையுடன் அவரைப் பிரார்த்திக்கும் மனம் வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே கடவுளிடம் வைக்கவேண்டும் என்பார். இன்பதுன்பங்களில் அவரைப் பிரார்த்திப்போம். ஆனால் குறிப்பாக இது வேண்டும் என்று கேட்பதில்லை. உங்களுக்கு நான் என்ன செய்யமுடியும் என்று கடவுளைக் கேட்பேன்.

கே: உங்கள் தந்தையைப்பற்றி அம்மா என்ன கூறுவார்கள்?
ப: அப்பா மிக ஏழைக்குடும்பத்தில் 13 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். பாக்கி 12 குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாமல் இறந்துவிட்டனர். எஞ்சியவர் அப்பா மட்டுமே. அவரும் 46 வயதில் இறந்துபோனார். என் பாட்டி 96 வயது வாழ்ந்தார். அப்பா ஒரு வினோதமான அறிவாளி. வறுமை காரணமாக எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வருவாய்த் துறையில் கிளார்க்காகச் சேர்ந்தார். பிறகு அஞ்சல்வழியில் பட்டப்படிப்பை முடித்தார். டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் எல்லாம் படித்தார். ரஷ்யன், ஜெர்மன் மொழிகளைக் கற்றார். ஆங்கிலத்திலும் புலமை உண்டு. எங்கள் ஊரில் எனக்குத் தெரிந்து ஆங்கிலப் புத்தகம் படித்தவர் அவர்தான். மேலதிகாரிகள் பார்வையிட வரும்பொழுது, சொல்வதைச் சுருக்கெழுத்தில் டிக்டேஷன் எடுத்துக்கொண்டு, தட்டச்சு செய்து, கையெழுத்துப் பெற அவரால் மட்டுமே முடியும்.

மிக நேர்மையானவர். வருவாய்த் துறையில் இருந்தாலும் லஞ்சம் வாங்கமாட்டார். ஏழைகள் சான்றிதழ் கேட்டு வந்தால் மற்றவர்களையும் லஞ்சம் வாங்க விடமாட்டார். தானே சான்றிதழ்களில் கையெழுத்து, முத்திரை எல்லாம் போட்டுக் கொடுத்துவிட்டு அவர்களுக்குப் பணமும் கொடுத்தனுப்புவார். இரக்ககுணம் மிகுந்தவர். சுயமரியாதை மிக்கவர். கலெக்டர், சப்கலெக்டர் யாராயிருந்தாலும் காலில் விழமாட்டார். அம்மா இப்படி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். பல வருடங்களுப்பின் தாலுகா ஆஃபீஸ் போகும்போதுகூட என்னை ஸ்ரீனிவாசனின் மகன் என்று அறிமுகப்படுத்துவார்கள். நான் என் அப்பாவோ அம்மாவோ செய்ததைப்போல் பத்தாயிரம் மடங்கு அதிகம் செய்திருக்கலாம். ஆனாலும் நான் அவர்களது மகனாகத்தான் அறியப்படுகிறேன்.

கே: உங்கள் தர்மசிந்தனையைத் தூண்டியது எது?
ப: நான் தர்மத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறேன்.

கே: அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் உங்களது வளர்ச்சிபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: குருட்டு அதிர்ஷ்டம், கடவுளின் கருணை, அம்மாவின் ஆசீர்வாதம் எல்லாமும்தான் காரணம். நான் சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருந்ததும் ஒரு காரணம். இவற்றுடன் கடின உழைப்பு, நேர்மை, புத்திசாலித்தனம் எல்லாம் சேர்ந்ததும் காரணம்.

கே: 'சொல்யூஷன் ஸ்டார்' (www.solutionstar.com) நிறுவனத்தில் நீங்கள் வகிக்கும் பொறுப்பு என்ன? அதில் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?
ப: வெரி சிம்பிள். உலகம் முழுவதும், எல்லாருக்கும் வீடு வாங்குவதோ விற்பதோ, எளிதான, ஒளிவு மறைவற்ற, சந்தோஷமான அனுபவமாக இருக்கவேண்டும். இதைச் சாத்தியமாக்க ஒரு மிகப்பெரிய போர்ட்டல் செய்துகொண்டிருக்கிறோம் (www.Xome.com). வாடிக்கையாளர்களுக்குப் பணவிரயம், காலவிரயம் இரண்டையும் தவிர்ப்பது இதன் நோக்கம்.



கே: நீங்கள் தீவிர ஏஞ்சல் முதலீட்டாளர். முதலீடு செய்யும்போது எவற்றைக் கவனிப்பீர்கள்?
ப: நான் முதலில் அவர்களது ஐடியா என்னவென்று பார்ப்பேன். அது சிக்கலானதாக இருந்தாலோ, அல்லது அதனால் வாடிக்கையாளர்களுக்குப் பணம், நேரம் எப்படி மிச்சமாகும் என்பதை மூன்று வரிகளில் சொல்லமுடியாவிட்டாலோ அந்தத் ஐடியாவால் பிரயோசனமில்லை என்பது என் நம்பிக்கை. முதலில் மனிதர்களில், அடுத்து அவர்களது திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். என் கருத்து நேர்மாறானது. ஒருவர் கெட்டிக்காரராக இருக்கலாம். ஆனால் அவரது திட்டம் மோசமாக இருந்தால், அவர் அதை மிகச்சிறப்பாகச் செய்தாலும் முதலீட்டிற்கேற்ற பலன் கிடைக்காது. அடுத்தவர்களது பண, நேர விரயத்தைக் குறைப்பவர்கள்தான் பணம் சம்பாதிக்கமுடியும். இது எனது சித்தாந்தம்.

இரண்டாவது, You also need to have a moat. (The term 'economic moat', coined and popularized by Warren Buffett, refers to a business' ability to maintain competitive advantages over its competitors in order to protect its long-term profits and market share from competing firms.) புதிய ஊபராகவோ, கூகிளாகவோ இருக்கவேண்டும் எனச் சொல்லவில்லை. செய்வது புதியதாக, மற்றவர்கள் செய்யாததாக, அதேசமயம் மிக எளிதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பெரிய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதையே நாம் சிறிய மாற்றங்களுடன் செய்தால் யாரும் நம்மைப் பொருட்படுத்த மாட்டார்கள். மூன்றாவதாக, யாராவது என்னிடம் 'இந்தத் துறையில் 20 பேர் இருக்கிறார்கள். ஆனால் யாருமே இதைச் செய்யவில்லை, நான்தான் இதைச் செய்கிறேன்' என்றால், Oops என்பேன். ஏனென்றால் அமெரிக்காமாதிரி நாட்டில் யாரும் அதைச் செய்யவில்லை என்றால், ஏற்கனவே யாரோ அதைச் செய்யமுயன்று தோற்றுவிட்டதாக அர்த்தம். நம் ஊரில் 'காய்த்த மரம்தான் கல்லடி படும்' என்று சொல்வார்களே அந்த மாதிரி. ஏன் யாருமே இதைச் செய்யவில்லை என்று கேட்பேன்.

கே: நல்லது. நீங்கள் சேவைகள் பல செய்கிறீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்....
ப: எனக்கு நன்கொடை, சமூகத்தொண்டு என்ற வார்த்தைகள் பிடிக்காது. செய்வதை என் கடமையாக நினைத்துச் செய்கிறேன். யாரும் சாகும்போது சொத்தைக் கையில் கொண்டுபோவதில்லை. இதுதான் நிதர்சனம். குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ, சமூகத்திற்கோ, உங்களால் கைமாறு செய்ய முடியாவிட்டால் நீங்கள் சந்தோஷமாக இருக்கமுடியாது. ஒன்றை அடையும்பொழுது வரும் மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்பொழுது வரும் மகிழ்ச்சி பல்லாயிரம் மடங்கு அதிகம். இந்தச் சமூகம் எனக்குத் தன்னம்பிக்கை, உற்சாகம் எல்லாவற்றையும் கொடுத்தது. அதற்கு நான் திரும்பத்தருவது இது. டாலர் கணக்கில் நான் செய்தது பெரிதாகத் தெரியலாம். ஆனால், திருவள்ளுவர் சொன்னமாதிரி 'காலத்தால் செய்த உதவி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது'. எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்போது கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். That is why in financial models they do discounted cash flow analysis to factor in the oppurtunity cost of time. இது எப்படி என்றால் எனக்கு 20 வருடங்களுக்கு முன் ஒருவர் ஆயிரம் டாலர் கொடுத்தார். நான் அவருக்கு அதே ஆயிரம் டாலர் திருப்பிக் கொடுக்கிறேன் என்பதல்ல. பணவீக்கம், நான் அந்தப் பணத்தால் அடைந்த பலன் முதலானவற்றைக் கணக்கிட்டால் அதன் மதிப்பு இன்று 50,000 அல்லது 100,000 டாலர் வரலாம். 30 வருடம் முன் 1 டாலர் நீங்கள் வாங்கியிருந்தால் இன்று ஒரு மில்லியன் டாலர் திருப்பிக் கொடுத்தாலும் ஈடாகாது.

கே: உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை? ஏன்?
ப: பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பொன்னியின் செல்வன், திருக்குறள், வணிகம் குறித்த புத்தகங்கள். நான் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம், வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், வாழ்க்கை, மேலாண்மை இவற்றைப் பற்றிய புத்தகங்களை அதிகம் படிப்பேன். நம் நாட்டில் மஹாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்று சொல்வார்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அதற்கு கண்டிப்பாக மஹாபாரதத்தில் விடை கிடைக்கும். அதில் ஒண்ணேகால் லட்சம் சுலோகங்கள் உள்ளன . உங்கள் கேள்விக்கு மஹாபாரதத்தில் விடை கிடைக்காவிட்டால் அந்தக் கேள்வி பயனற்றது. அதில் கிருஷ்ணர் தூது வருவதற்கு முந்தையநாள் இரவு, விதுரருக்கும், திருதராஷ்டிரனுக்கும் இடையில் நடக்கும் விவாதம் மிகச் சிறப்பானது. 'விதுர நீதி' நீங்கள் படிக்கும் எல்லா மேலாண்மைப் புத்தகங்களையும்விட உயர்வானது.

கே: உங்களுடைய தொண்டுநிறுவனம் பற்றிச் சொல்லுங்கள்...
ப: இது மிகச் சாதாரணமாகத் தொடங்கியது. நான் அமெரிக்கா வந்தபின் எங்கள் ஊரில் ஒரு குழந்தைகூட வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்தியதில்லை என்று நினைக்கிறேன். யாரானாலும் கஷ்டகாலத்தில் என்னை அணுகமுடியும் என்பது தெரியும்.

கே: இன்றுகூடவா?
ப: ஆமாம். நான் இந்தியா போகும்போதெல்லாம் எப்படியும் ஒரு 50 பேராவது படிப்பு, வேலைவாய்ப்பு விஷயமாக என்னைப் பார்க்க வருவார்கள். அனாதை ஆசிரமத்திலிருந்தும் வருவார்கள். நான் ஒரே ஒரு நாள்தான் இருப்பேன். நான் சொல்லாமலே எப்படியோ அது தெரிந்துவிடும். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. நான் அங்கு சென்றேன். அது காந்தி கிராமம் ஆசிரமம். அது சுமாரான நிலமையில் இருந்தது. நான் அவர்களிடம் குழந்தைகளுக்கு ஏன் இன்னும் நல்ல உணவு, இருப்பிடம் தரக்கூடாது எனக் கேட்டேன். ஒரு குழந்தையைப் பராமரிக்க ரூ.1000 தேவை என்றால் 100 ரூபாய்தான் கிடைக்கிறது என்றனர். பாக்கி 900 ரூபாயை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். இதனால் சுற்றுவட்டாரத்தில் 400 குழந்தைகள் பயன்பெற்றனர்.

வேறொரு கிராமத்தில் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் இருக்கிறது. அங்கு கட்டிடம் கட்ட, கம்ப்யூட்டர், ஹியரிங் எய்ட், தையல் மெஷின், பையன்களுக்கு சைக்கிள் எல்லாம் வாங்க உதவினோம். தொழிற்கல்விப் பள்ளி தொடங்க உதவினோம். பிறகு நிறைய முதியோர் இல்லங்களை தத்தெடுத்துக் கொண்டோம். மேற்கத்திய நாடுகளிடமிருந்து எதைக் கற்றுக் கொண்டார்களோ இல்லையோ, பெற்றோரைப் புறக்கணிக்கும் இந்தக் கலாசாரத்தை நம்மவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த நன்றிகெட்டதனம் அறவே பிடிப்பதில்லை. நமது பெற்றோர்கள் இல்லாவிட்டால், நாம் தற்போதிருக்கும் நிலையை அடைந்திருக்க முடியாது. அவர்கள் நமக்கு எரிச்சலூட்டலாம், நம் வாழ்க்கையில் குறுக்கிடலாம். நமக்கு உயிர், படிப்பு, வாழ்க்கை எல்லாம் கொடுத்த அவர்களிடம் நாம் பொறுமையாக, விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். சம்பளம் கொடுக்கிறார் என்பதால் யாரோ ஒருவரின் கெடுபிடிகளுக்கெல்லாம் நாம் ஒத்துப் போவதில்லையா?

பணக்காரர், ஏழை இருவருமே பெற்றோரைத் தம்முடன் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அதனால் அங்கு இருவிதமான முதியோர் இல்லங்கள் உள்ளன. பணம்பெறும் முதியோர் இல்லம், இலவச முதியோர் இல்லம்; இரண்டுமே தவறுதான். நான் இலவச முதியோர் இல்லங்களுங்குப் பணம் கொடுத்து உதவத் தொடங்கினேன். பிறகு அருகிலிருந்த ஒரு ஆசிரமம்பற்றித் தெரியவந்தது. அவர்கள், அந்த ஆசிரமத்தில் மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்தில் 800 கிராமங்களுக்குச் சென்று 90,000 குழந்தைகளுக்குத் தேவையானவற்றைச் செய்துவருகின்றனர். ஊனமுற்ற குழந்தைகளும் இதில் அடக்கம். ஆரம்பத்தில் சிறிது பணம் கொடுத்து உதவினேன். பிறகு அவர்கள் உதவி கேட்டு அனுப்பும் இ-மெயில்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் இதற்குச் செலவிடும் நேரத்தை, குழந்தைகளுக்கு உதவுவதில் செலவிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். உங்களது தேவை என்ன என்று கேட்டேன். ஒரு தொகையைச் சொன்னார்கள். அதைக் கொடுத்தேன். இப்படித்தான் அந்த 90,000 குழந்தைகளையும் நான் தத்தெடுத்துக் கொண்டேன். இந்த வருடம் இறப்பதற்குமுன் என் அம்மா, அந்த ஆசிரமத்திற்குக் கொடுத்ததுதான் கடைசிக் காசோலை. எங்கும் என் பெயரைப் போடவேண்டும் என நான் சொல்வதில்லை. வற்புறுத்தினால் என் அம்மாவின் பெயரைப் போடச் சொல்வேன். பெரியபிள்ளை ஆக முடியாவிட்டாலும், பேர் சொல்லும் பிள்ளையாக வேண்டும் என்று நினைப்பவன் நான்.

கே: உங்கள் அம்மா சொன்னதற்கே திரும்புவோம். இரண்டாவதாக வருபவரை யாருக்கும் நினைவிருக்காது என்று கூறியதாகச் சொன்னீர்கள். எவ்வளவு ஆழமாக இதை நீங்கள் நம்புகிறீர்கள்?
ப: நான் ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் நானிருக்கும் இடத்திலேயே திருப்தியடைவதில்லை. ஏழையாக இருந்தபோதுகூட. யாரிடமும் பொறாமைப்பட்டது கிடையாது. பொறாமை ஒரு சுமை. நாம் ஒன்றில் மிகச்சிறந்தவராக இருக்கவேண்டும் என்று நினைப்பது தொட்டுணரமுடியாத ஒரு இலக்கு. ஆனால் யாராவது ஒருவரைவிட என்று அளவுகோல் வைத்துக்கொண்டால் பிறகு அது பெரும் சுமையாகிவிடும். நான் கடின உழைப்பாளி. I tell people that I work very seriously but I don't take myself seriously.



கே: ஏதேனும் இலக்கை அடையக் கடுமையாக உழைக்கிறீர்களா?
ப: நான் இலக்குகள்பற்றிக் கவலைப்படுவதில்லை. I believe in controlling the controllables. The inputs matter more than the outputs. I work backwards from customer experience. I want to make the best product. நான் 100 மில்லியன் டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேலையைத் தொடங்குவதில்லை. நான் எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால் வேலையை மறுபடியும் தொடங்குவேன். நான் ஏற்கனவே சொன்னமாதிரி வாழ்க்கை என்பது குறைகளைக் களைவதற்கான இடைவிடாத முயற்சி. I never burden myself with perfection.

கே: கென் பிளாஞ்சர்டு போன்றோரைப் படித்திருக்கிறேன். ஆனால் 'Minimizing imperfection' என்கிற coinage இப்பொழுதுதான் முதன்முதலாகக் கேட்கிறேன்.
ப: அதுதான் உண்மை. Perfect என்று யாரையாவது காட்டமுடியுமா? ஸ்ரீகிருஷ்ணர் மட்டும்தானே பெர்ஃபக்ட் ஆனவர்? இதுதான் வாழ்க்கை. யாரும் குறையற்றநிலையை அடையமுடியாது. அதே சமயம் தொடர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். மனிதமூளை அப்படித்தான் வேலை செய்கிறது. எவ்வளவு உயர்நிலையை அடைந்தாலும், மேலும் அதைச் செம்மைப்படுத்தவே முயற்சிக்கும்.

மனிதமனம். இலக்குகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று சொல்லும்போது இலக்குகளே இல்லை என்பது பொருளல்ல. நீங்கள் பயணத்தை ரசிக்கவில்லை என்றால், இலக்கையும் ரசிக்கமுடியாது என்பேன். நான் வாழ்க்கை, தொழில் எல்லாவற்றையுமே ஒரு பயணமாகப் பார்க்கிறேன். அதை நன்கு ரசிக்க விரும்புகிறேன். வழியில் நல்ல காட்சிகள், மறக்கமுடியாத இடங்கள், இடி, மழை எல்லாம் வரலாம். அதைத்தான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத்கீதையில் (சுலோகம் 2:38) "ஸுகது:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ" என்று சொல்கிறார்: "சுகம், துக்கம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி எல்லாவற்றையும் சமமாக பாவிக்க வேண்டும்" என்பது பொருள். எல்லாச் சூழலிலும் மனதில் சமநிலை வேண்டும்.

கே: இளம் இந்தியப் பெற்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: அவர்கள் இந்திய கலாசாரத்தைக் குழந்தைகளுக்குச் கற்றுத்தர மிகவும் பாடுபடுகிறார்கள். பரதநாட்டியம், தமிழ்ச்சங்கம், சயன்ஸ் கிளப் என்று பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள்? நீங்கள் இந்தியா செல்லும்போதோ, அல்லது அவர்கள் இங்கு வரும்போதோ எவ்வளவு நேரம் அவர்களுடன் செலவிடுகிறீர்கள்? கர்ப்பகாலத்தில் மட்டும் அவர்களை உதவிக்கு அழைத்தால் போதாது. உங்கள் குழந்தைகள் இந்தியர்களாக வளரவேண்டும் என்றால் அவர்களை அடிக்கடி இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு அந்தப் பாரம்பரியம் வரவேண்டுமானால் முதலில் நீங்கள் வழிகாட்டியாக இருங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரையும், சகோதர, சகோதரிகளையும் நல்லவிதமாக நடத்தினால் அவர்கள் நம் பண்பாட்டைக் கற்றுக் கொள்வார்கள்.

கே: குழந்தைகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
ப: அவர்கள்மீது அழுத்தம் அதிகம். அவர்களது பெற்றோர்கள் இங்குவந்து நிறையச் சாதித்துள்ளனர். நல்ல வேலை, வீடு, பணம் என வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. நான் குழந்தைகளுக்குச் சொல்வது இதுதான். பெற்றோரின் வெற்றி உங்களுக்கு ஒரு சுமையாகிவிடக் கூடாது. அதை ஒப்பீட்டு அளவுகோலாக வைத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் உங்களுக்குப் பிடித்தைச் செய்யுங்கள்.
மனிதகுலத்திற்குச் சேவை செய்வதன்மூலம் கடவுளுக்குச் சேவை செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

கே: கிரிக்கெட் விளையாடுவீர்களாமே?
ப: ஆமாம், ஒவ்வொரு வாரமும். தமிழ்ப் புத்தகங்கள் படிப்பேன். தமிழ்ப் பாட்டு கேட்பேன். இளையராஜா, SPB இவங்க பாட்டு பிடிக்கும். அப்பப்ப ரகுமானும் கேட்பேன். தமிழ் சினிமா ஒன்றுகூட விடமாட்டேன். ரஜினிகாந்த் விசிறி. டாலஸ் போனா சரவணபவன் சாப்பாடுதான். இந்தியன் ரெஸ்டரண்டுக்குத்தான் எவரானாலும் விருந்துக்கு அழைத்துச் செல்வேன். "இவர்கூடப் போனா இந்திய உணவுதான்"னு எல்லோரும் கேலி செய்வார்கள். பிடிக்காட்டி பரவாயில்லைன்னு சொல்லிவிடுவேன். அதனால் நான் ப்ரொஃபஷனல் இல்லைன்னு அர்த்தம் இல்லை. என்னுடைய வாழ்க்கைமுறை இது. அதற்காக நான் வெட்கப்படவில்லை.

கே: பிடித்த உணவு?
ப: இட்லி சாம்பார், ஹைதாரபாதி வெஜிடபிள் பிரியாணி. வெஜிடேரியன் உணவுதான் சாப்பிடுவேன். பிடித்த நடிகர் ரஜினிகாந்த், பிடித்த நடிகை தீபிகா படுகோனே. பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். பிடித்த தலைவர் எம்.ஜி.ஆர்.

கே: அப்படியா? ஏன் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும்.?
ப: அவர் பல தடைகளை எதிர்த்துப் போரடினார். சினிமாத்துறைக்கு மிகவும் தாமதமாக வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் புகழ்பெற்றுப் பின் வெளியே போய்த் தனிக்கட்சி தொடங்கி, முதல்வரானார். சத்துணவு, இலவசக்கல்வி போன்ற திட்டங்களைத் தொடங்கினார். அவர் அதிகம் படித்தவரல்ல என்றாலும் கல்வியின் அருமையும், பசியின் கொடுமையும் தெரிந்திருந்தது. இயன்றவரை தான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்று முயற்சித்தார். That's what I call as legacy. நிறைய பேங்க் பாலன்ஸோ, பெரிய கட்டிடங்களோ legacy அல்ல. அடுத்த தலைமுறையின் முன்னேற்றம்தான். அவர் பெயரைச் சொல்லி இன்னும் அரசியல் நடத்த முடிகிறதே. வேட்டைக்காரன் படத்தில் "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்" என்ற ஒரு பாட்டு உண்டே. அதுபோலவே வாழ்ந்துவிட்டுப் போனார்.

தெ: வெகு அழகு...
ப: அவ்வளவுதான் சார். நான் ஒரு சராசரி மனிதன். கடவுளின் நாடகத்தில் முதலில் வசதியானவனாக இருந்தேன். பிறகு ஏழையானேன். மறுபடியும் பணக்காரனானேன். இந்த வாழ்க்கை ஒரு வட்டம். போகும்போது ஒன்றும் கொண்டுபோக முடியாது. தனியாகத்தான் திரும்பிப் போகவேண்டும்.

இவர் பேசுவது வறட்டு வேதாந்தமாக அல்லாமல் சமுதாயத்துக்குப் பயன்படுகிற, அதே நேரத்தில் ஒரு தனிமனிதராக இவரையும் வாழ்வின் பல களங்களிலும் ஜொலிக்கச் செய்கிற வேதாந்தமாக இருக்கிறது. I work very seriously but I don't take myself seriously என்பதற்கேற்ப அவரது குரலில் தன்னைக் கிண்டலடித்துக்கொள்ளும் தொனியை நீங்கள் கற்பனைதான் செய்துகொள்ளவேண்டும். அச்சில் காண்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய விஷயத்தைக் கூறினாலும் அதில் பெருமை தொனிப்பதில்லை என்பதும் உண்மை. அங்கேதான் அவர் சராசரி மனிதனிலிருந்து வேறுபடுகிறார் என்று மனதில் நினைத்துக்கொள்கிறோம், ஆனால் சொல்லவில்லை. "நன்றி சார்" என்று மட்டும் சொல்லி வியப்படங்காமலே விடைபெறுகிறோம்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழ்வடிவம்: மீனாட்சி கணபதி

*****


இரண்டு பாடங்கள்
ஒருநாள் அறிவியல் வகுப்பில் விளையாட்டுத்தனமாக இருந்தேன். ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் எனக்கு அதற்கு பதில் தெரியவில்லை. "நன்றாகப் படிப்பதால் வகுப்பில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தாயா? பத்தாம் வகுப்புப் பாடமே உனக்கு முழுதும் தெரியாது. நீதான் உலகத்திலேயே பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளாதே" என்றார். நான் அங்கேயே அழுதுவிட்டேன். படிப்பு விஷயத்தில் நான் அதுவரை அவமானப்பட்டதில்லை. வகுப்பு முடிந்ததும் அவர் என்னிடம் "கவலைப்படாதே. நான் இன்னும் அந்தப் பாடத்தை நடத்தவே இல்லை. உனக்குப் பாடம் புகட்டவே அப்படிச்செய்தேன்" என்றார்

அன்று, நான் விடுதி வார்டனிடம் இரவு முழுவதும் விழித்துப் படிக்க அனுமதி வாங்கினேன். ஒரே இரவில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகம் முழுவதையும் படித்தேன். அந்த ஆசிரியரிடம் எந்தப் பாடத்திலிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் என்றேன். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் சரியாக பதில் சொன்னேன். இதில் நான் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டேன். ஒன்று, முடியாதது என்று எதுவும் இல்லை. இரண்டாவது, நம்முடைய எந்தச் சாதனையும் போதுமானதல்ல.

- கல் ராமன்

*****


தவிர்க்கப்பட்ட தற்கொலை
கிட்டத்தட்ட 96,000 குழந்தைகள் நமது நிதியுதவியால் பலனடைந்துள்ளனர். அதில், ஏழை பிராமணக் குடும்பம் ஒன்றை மறக்கமுடியாது. அப்பா கோவில் அர்ச்சகர். இரண்டு பெண்கள். முதல் மகளின் திருமணத்திற்காகச் சேர்த்துவைத்த பணம், நகை எல்லாம் திருமணத்திற்கு ஒரு மாதம்முன் களவு போய்விட்டது. இடிந்து போய்விட்டார்கள். குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இது எனக்குப் பின்னால்தான் தெரியவந்தது. அப்பொழுது எதேச்சையாக நான் என் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். யாரோ சொல்லி என்னைப் பார்க்க வந்தனர். ரொம்பவும் கௌரவமானவர்கள். பணம் கேட்கத் தயக்கம் அவர்களுக்கு. நான் எல்லோரிடமும் சிரித்துப்பேசி தயக்கத்தைப் போக்கிவிடுவேன். களவுபோன பொருட்களின் மதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. நான் அதைக் கொடுத்ததோடு, கல்யாணச் செலவையும் ஏற்றுக்கொண்டேன்.

இரண்டாவது பெண் நன்றாகப் படிப்பார். வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டார். "நீ என்ன செய்ய விரும்புகிறாய்?" என்று கேட்டேன். அவர் நர்ஸாக வேண்டும் என்றார். அதற்குத் தேவையான பணமும் கொடுத்தேன். பின் அதை மறந்துவிட்டேன். நான் ஒருவருக்குப் பண உதவி செய்தேன் என யாரிடமும் சொல்லிக்கொள்வதில்லை. யாரிடமும் அதைச் சொல்லக் கூடாது என்பது என் குடும்பத்தினருக்கும் எனது கட்டளை. நாம் செய்த நல்லவற்றை வேறு மூன்றாவது மனிதரிடம் சொன்னால் அந்தச் செயலுக்கான பலன் நமக்குக் கிடைக்காது. இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால், மூன்று வருடம் கழித்து இரண்டாவது மகளிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. அதில் அவர் தான் நர்ஸாகி விட்டதாகவும், தன் சகோதரியும் சுகமாக இருப்பதாகவும் எழுதியிருந்தார். தாய் தந்தையருடன் சென்னையில் இருப்பதாக எழுதியிருந்தார். அதில் அவர், என்னை அன்று சந்திக்காமல் இருந்திருந்தால் குடும்பம் முழுவதும் தற்கொலை செய்துகொண்டிருக்கும் என எழுதியிருந்தார். நான் அந்தக் கடித்தை என் மனைவியிடம் காட்டிவிட்டு உடனே கிழித்துப் போட்டுவிட்டேன். அதைத் திரும்ப, திரும்பப் படித்தால் தலைக்கனம் வந்துவிடக்கூடும் என்பதுதான் காரணம்.

- கல் ராமன்

*****


சூப்பர்ஸ்டார் நடித்தாலும் படம் தோற்கலாம்!
நான் கல்வித்துறையில் இருக்கிறேன். யாராவது என்னிடம் வந்து இதில் புதியதாகச் செய்கிறேன் என்று கூறினால், அதற்கு அர்த்தம் இப்போதிருக்கும் நிலையில் அவர் அதில் பணம் போடக்கூடாது என்பது. நீங்கள் எதையோ உணர்ச்சிவசப்பட்டுச் செய்கிறீர்கள். ஆர்வத்துக்கும் உணர்ச்சிவசப்படலுக்கும் வித்தியாசம் உண்டு. சார்பின்மைதான் (Objectivity) அந்த வித்தியாசம். யார் ஆர்வத்துடன் வேலை செய்கிறார்களோ அவர்களைத்தான் நான் விரும்புகிறேன். உங்கள் திட்டம் வெற்றி பெறுமென்பதற்கு 20 காரணங்கள் சொல்லலாம். ஆனால் அது தோற்பதற்கான 5 காரணங்களைச் சொல்லமுடியாவிட்டால் உங்களால் நடுநிலையில் யோசிக்கமுடியவில்லை என்று பொருள், ஏனென்றால் எதுவும் தோற்பது சாத்தியம். அது பிழைத்தால் அதிர்ஷ்டம். கடவுளின் கருணையால் மட்டுமே பணம் சம்பாதிக்கமுடியும். இப்படி நினைத்துதான் தொழிலைத் தொடங்கவேண்டும். அடுத்து, மனிதர்கள். அவர்களும் எனக்கு முக்கியம்தான். ஆனால் ஒரு சூப்பர்ஸ்டாரே நடித்தாலும், படம் மோசமாக இருந்தால் தோற்றுப்போகும். கதை மிக முக்கியம். அதுபோல எந்தத் துறையிலும் சிறந்த மனிதர்கள் முக்கியம்தான். ஆனால் திட்டம் சிறப்பானதாக இருப்பது அதைவிட முக்கியம். இல்லாவிட்டால் வருமானம் பார்க்க முடியாது.

- கல் ராமன்

© TamilOnline.com