விழியன்
கவிதை, சிறுகதை, புகைப்படம், சிறார் நாவல்கள் என்று பல களங்களிலும் தீவிரமாகச் செயல்படுகிறார் விழியன். இயற்பெயர் உமாநாத். வேலூரை அடுத்த ஆரணியில் அக்டோபர் 30, 1980 அன்று செந்தமிழ்ச் செல்வன் - குணசுந்தரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையின் பணிமாறுதல் காரணமாக திருப்பூர், பள்ளிகொண்டா எனப் பல ஊர்களில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. மேல்நிலைக் கல்வியை வேலூர் வாணி வித்யாலயாவில் நிறைவுசெய்தார். பரதநாட்டியத்தை முழுமையாகப் பயின்ற விழியன்,. பல்வேறு போட்டிகளில் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றார். தந்தை அறிவொளி இயக்கச் செயல்பாட்டாளர். அவருடன் பல கிராமங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களுக்குப் பாடம் சொல்லித்தருதல், வீதி நாடகம் நடத்துதல் போன்ற களப்பணிகளில் ஈடுபட்டார். அவை இவருக்கு பரந்துபட்ட அனுபவத்தைத் தந்தன. தந்தை எழுத்திலும், பேச்சிலும் ஆர்வமுடையவர், சமூகசிந்தனையாளர். பொதுவுடைமைக் கொள்கையில் ஆர்வமிக்கவர் என்பதால் அவர்மூலம் எழுத்து, சிந்தனை, சமூகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தந்தையின் சேகரிப்பில் இருந்த மார்க்சீயச் சிந்தனை கொண்ட நூல்கள், ரஷ்ய நாவல்கள் விழியனின் வாசிப்பார்வம் அதிகரிக்கக் காரணமாயின.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இளம் பொறியியல் பட்டமும், வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் முது பொறியியல் பட்டமும் பெற்ற விழியன், படிப்பை முடித்ததும் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் துவங்கினார். இலக்கிய ஆர்வம் எழுதத் தூண்டியது. மடற்குழுக்களிலும், குழுமங்களிலும், இணையதளங்களிலும் கவிதைகள், குறுங்கட்டுரைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்களை எழுத ஆரம்பித்தார். இவரது முதல்நூல் 'தோழியே உன்னைத்தேடுகிறேன்' என்பதாகும். ஒரு நண்பன் தன் தோழிக்கு வாழ்க்கை, காதல், திருமணம், கலை போன்றவை பற்றிய சிந்தனைகளைக் கூறும் நூல் அது. 19 கடிதங்களாக அந்த நூலை எழுதியிருந்தார். 2005ல் வெளியான அந்நூல் பரவலான கவனத்தைப் பெற்றது. விழியன் படித்த கல்லூரியின் முதல்வரே அந்நூலை வெளியிட்டுச் சிறப்பித்தார்.

Click Here Enlargeசிறுவயதில் படித்த வாண்டுமாமாவின் கதைகள், டிங்கிள், பூந்தளிர், ராணி காமிக்ஸ் போன்ற இதழ்கள் விழியனுக்குச் சிறார் இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்திருந்தன. சிறுவர் இலக்கியம் படைக்கும் நோக்கில் 'காலப்பயணிகள்', 'ஒரே ஒரு ஊரிலே' என்ற இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பை 2009ம் ஆண்டில் திரிசக்தி பதிப்பகம்மூலம் வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து சிறார் இலக்கியத்தின்மீது கவனத்தைச் செலுத்தினார். தன் மகளுக்குச் சொல்லும் கதைகளே தன்னைச் சிறார் கதைகள் எழுதத் தூண்டின என்று சொல்லும் விழியன், 4முதல் 7வரை உள்ள சிறுவர்களின் சிந்தனைகளுக்கேற்பவும் 8முதல் 14வரை உள்ள சிறார்களுக்காகவும் எனத் தனது களத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டு கதைகள் எழுத ஆரம்பித்தார்.

'பென்சில்களின் அட்டகாசம்' என்ற சிறார் நாவல் 2012ல் வெளியானது. அது ஆங்கிலத்தில் 'Pencil's Day Out' என்ற தலைப்பில் வெளியாகிக் கவனம் பெற்றது. தினந்தோறும் டப்பாக்களில் அடைபடுவது போரடிக்கவே பென்சில்கள் தமக்குள் பேசிச் சுற்றுலாச் செல்ல முடிவு செய்கின்றன. அவை தப்பிச்சென்று ஒரு பொம்மைப் பேருந்தில் சுற்றுலாச் செல்கின்றன. போன இடத்தில் ஒரு வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிரிகளான 'ஷார்ப்னர்கள்' அங்கே வருகின்றன. எதிரிகளிடமிருந்து பென்சில்கள் தப்பித்தனவா, தமது டப்பாக்களை அடைந்தனவா என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்த நூல். பென்சில்களுக்கும் பேனாக்களுக்கும் என்ன உறவு, குள்ளமான பென்சில்கள் யார், வயதான பென்சில்கள் யார் என்பதையெல்லாம் நகைச்சுவையோடு சொல்கிறார் விழியன். கூடவே பென்சில்கள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு, பென்சில்களின் மறுமுனையில் ரப்பர் வைக்கப்பட்டது உள்ளிட்ட பல சுவையான தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

'அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை' என்ற நூலுக்கு குழந்தை இலக்கியத்துக்கான அகிலா சேதுராமன் நினைவுப்பரிசு கிடைத்தது. தவிர 'டாலும் ழீயும்' என்ற படைப்பையும் வெளியிட்டிருக்கிறார். 'டால்' என்ற டால்ஃபினும், 'ழீ' என்ற தங்க மீனும் கடலில் கோட்டைகட்டிய சுவாரஸ்யமான கதை இது. மிக எளிய, இனிய நடையில் நூலை எழுதியிருக்கிறார் விழியன். எழுத்துக்கூட்டி வாசித்தாலே குழந்தைகளுக்குப் புரிந்துவிடும். இவர் எழுதிய 'வளையல்கள் அடித்த லூட்டி'யில் நான்கு வளையல்கள் திடீரென உயிர் பெற்று, கை, கால் முளைத்துவிட, அவை பத்து நாட்கள் அடித்த லூட்டிதான் கதை.

விழியனின் படைப்புகளில் குறிப்பிடத் தகுந்தது 'மாகடிகாரம்'. யாரும் அறிந்திராத ஒரு ரகசிய இடத்தில் இயங்கிவரும் மாகடிகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுக்க வேண்டும். இல்லையென்றால், உலக இயக்கம் நின்றுவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகள் அதனைப் பராமரிக்கும் பொறுப்பு தீமன் என்ற சிறுவனுக்குக் கிடைக்கிறது. சிறுவன் அந்தப் பணியைச் செய்வதில் அவன் எதிர்கொண்ட சிக்கல்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது மாகடிகாரம். ஆனந்த விகடன் இதழ் இதனை 2013ம் ஆண்டின் சிறந்த சிறார் நூலாகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது.

Click Here Enlargeவிழியன் சிறந்த புகைப்படக் கலைஞரும்கூட. பயணித்தலும், புகைப்படம் எடுத்தலும் இவரது முக்கியப் பொழுதுபோக்குகள். இமயமுதல் குமரிவரை பல இடங்களுக்குச் சென்று, பயண அனுபவங்களை அழகான புகைப்படங்களுடன் vizhiyan.wordpress.com என்ற வலைப்பதிவில் எழுதி வெளியிட்டு வருகிறார். வெளிநாட்டு அனுபவங்களையும் புகைப்படங்களுடன் அதில் வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படங்கள் கல்கி, விகடன் போன்ற இதழ்களில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

www.facebook.com என்பது புகைப்படங்களுக்கான இவரது ஃபேஸ்புக் பக்கமாகும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றுகிறார். இவர் தொகுத்த 'கணினி கலைச்சொல் அகராதி' குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 நூல்களை எழுதியுள்ள விழியன், கதை, சிறுகதை, கவிதை எனப் பல ஆர்வங்கள் இருந்தாலும், குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் மிகச்சிலரே என்பதால் அதில் தீவிர கவனத்தைச் செலுத்தி வருகிறார். சிறுவர் இலக்கிய இயக்கங்களை ஒன்றிணைத்தல்; ஆர்வலர்கள், படைப்பாளிகளை ஒன்றிணைத்துத் தொடர் பணிப்பட்டறை, சந்திப்புகளை நிகழ்த்துவது. குழந்தைகளுக்குக் கதைசொல்லல் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றும் விழியன், மனைவி வித்யா குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறார்.

மா.கமலவேலன் (தென்றல், நவம்பர், 2010); இரா.நடராசன் (தென்றல், அக்டோபர், 2012); யூமா வாஸுகி (தென்றல், ஜூலை, 2013) இவர்கள் வரிசையில் தற்காலக் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குச் சீரிய தொண்டாற்றி வருகிறார் விழியன்.

அரவிந்த்

© TamilOnline.com