தென்றல் பேசுகிறது...
"எனக்குக் கலாம் அவர்களைப் பிடிக்கும், ஏனென்றால் அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்" - இப்படிக் கூறியவர் ஒரு மாணவரோ, தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, வியாபாரியோ அல்ல. கர்நாடகத்தின் கோலார் பகுதியிலிருந்து ராமேஸ்வரத்துக்குக் கலாமின் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தவந்த படிப்பறிவில்லாத டிரக் டிரைவர் வி. கிருஷ்ணன். அப்படிப்பட்ட ஆளுமை கலாமுடையது. அமைதியான சோகம், அஞ்சலி, ஊர்வலம், படத்துக்கு மாலை, ராமேஸ்வரத்துக்கு விரைதல் என்று எல்லாப் படிநிலை மக்களும் பண்பட்ட வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மனங்கவர்ந்த தலைவர் மறைந்தால் கல்லெறிவது, பலவந்தமாகக் கடையடைக்கச் சொல்லிக் கூட்டமாக வன்முறை ஊர்வலம், வாகனங்களைக் கொளுத்துவது, பொருள்களைச் சூறையாடுவது போன்றவற்றை இந்த மாமனிதரின் அஞ்சலிநாளில் பார்க்கமுடியவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இவர்களில் சிலராவது மேற்கூறிய அராஜகத்தில் பங்கேற்பவர்களாக இருப்பார்கள். ஆக, கலாம் என்ற மனிதரால், தான் இருந்தபோதும் சரி, மறைந்தபின்னும் சரி, மற்றோர் மனதில் மனிதநேயத்தை, ஒழுக்கத்தை, பண்பாட்டை, அறநெறியை விதைத்து வளர்க்கமுடிந்தது. இவற்றை வாய்ப்பேச்சால் அல்ல, தானே வாழ்ந்து காட்டுவதால்தான் மற்றவருக்குள் விதைக்கவும் மகசூல் காணவும் முடிந்தது. "மது அருந்துவது தமிழர்களின் அத்தியாவசியத் தேவை; மதுக்கடையை மூடச்சொல்ல முடியாது" என்று மரியாதைக்குரிய தமிழக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தீர்ப்பளித்தும்கூட, கலாம் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் டாஸ்மாக் கடைகளை அவற்றின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அடைத்தனர். ஏனென்றால் இந்த மரணத்துக்குத் துக்கம் அனுஷ்டிக்க யாரும் குடித்துவிட்டு ஆடப்போவதில்லை, மௌனமாகத் துயரத்தில் ஆழப்போகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது.

டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் உடல் புதைக்கப்படவில்லை, இந்தியா வளர்ந்தோங்கிப் பீடுபெறட்டும் என்பதற்காகப் பிறந்த மண்ணில் விதைக்கப்பட்டது. கனவு காணச்சொன்ன அவரது இந்தியக் கனவை வளர்த்தெடுத்து கண்முன்னே யதார்த்தமாக்குவது ஒவ்வோர் இந்தியனின் புனிதமான பொறுப்பு.

*****


டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் எழுதிய பிரார்த்தனையிலிருந்து:

இறைவா, என் நாட்டுமக்கள் ஒன்றுபட்டு வாழ நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வாயாக. இறைவா, மதங்கள் மக்களைப் பிரிவுபடுத்தாமல் மக்களை இணைக்க மதத்தலைவர்களுக்கு நல்லருள் புரிவாயாக. இறைவா, நம் நாட்டின் தலைவர்கள், அவர்களைவிட நாட்டை முக்கியமாக எண்ண, அவர்களின் எண்ணங்களில் மலர்ச்சி தீபம் ஏற்றுவாயாக.

இறைவா, என் நாட்டு மக்களுக்கு உள்ளவுறுதியைக் கொடுத்து, கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், கணிப்பொறியிலும் உயர்ந்த நாடாக, வளர்ந்த நாடாக உழைத்து முன்னேற அருள் கொடையை கொடுப்பாயாக.


அவரோடு சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம், அவரைப்போலவே வாழ்வின் இறுதிக்கணம்வரை நம்பிக்கையோடும், ஊக்கத்தோடும் உழைக்க உறுதிகொள்வோம். அப்படிச் செலுத்தும் அஞ்சலியே அவருக்கு உண்மையானதாக இருக்கும்.

*****


கல்வி ஆர்வலர்கள் K.S. ராமமூர்த்தி, கல் ராமன் ஆகியோரின் நேர்காணல்களோடு தென்றல் வருகிறது இம்முறை. இளமையில் வறுமை, சாதிக்கும் துடிப்பு, தத்தமது தொழில்வாழ்வில் உச்சத்தைத் தொடுகிற இடையறாத உழைப்பு, பிற்பட்டோருக்குக் கல்வி தருவதில் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு - இவை இவ்விருவருக்கும் பொதுவான அம்சங்கள். இருந்தாலும் இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புனைகதைபோலச் சுவையானது, தனித்தன்மை கொண்டது. வாசிக்க, வாசிக்கப் பிரமிக்க வைப்பது. நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச் செய்வது. நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம்பற்றிய பிரக்ஞையை விசாலப்படுத்துவது. இப்படிப் பயனுள்ள பலவற்றின் தொகுப்பாக மலர்கிறது இந்தமாதத் தென்றல்.

தென்றல் வாசகர்களுக்கு இந்திய சுதந்திர நாள், ஓணம் மற்றும் ரட்சாபந்தன வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஆகஸ்டு 2015

© TamilOnline.com